நாகேஷ் மட்டும் என் கையில கிடைச்சான்!.. படப்பிடிப்பில் பொங்கிய கமல்ஹாசன்!...
தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த நடிகர்களின் பெயர் பட்டியலை எடுத்தால் அதில் கண்டிப்பாக நாகேஷ் இருப்பார். மத்திய அரசு பணியை உதறிவிட்டு சினிமாவுக்கு வந்தவர். அதற்கு முன் சில நாடகங்களிலும் நடித்திருக்கிறார்.
எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெய் சங்கர், ஜெமினி, முத்துராமன் என பலரின் படங்களிலும் காமெடி நடிகராக நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளார். சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். நகைச்சுவை நடிகர், ஹீரோ, குணச்சித்திரம், வில்லன் என விதவிதமான வேடங்களில் நடித்து ரசிகர்களை தன்பக்கம் வளைத்தவர் இவர்.
பாலச்சந்தரின் இயக்கத்தில் எதிர் நீச்சல், சர்வம் சுந்தரம் போன்ற கிளாசிக் படங்களில் நாகேஷ் ஹீரோவாக நடித்துள்ளார். நாகேஷின் நடிப்பை எப்போதும் பாலச்சந்தர் பாராட்டிக்கொண்டே இருப்பார். துவக்க காலத்தில் நடிகர் கமல் பாலச்சந்தரின் படங்களில் நடித்து வந்தார். சின்ன சின்ன வேடங்கள் மற்றும் சில படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தார்.
அப்போதெல்லாம் படப்பிடிப்பில் கமல் சரியாக நடிக்கவில்லை எனில் கோபப்படும் பாலச்சந்தர் ‘ஏண்டா இப்படி பண்ற. இதுவே என் நாகேஷா இருந்தா ஒரே டேக்ல ஓகே பண்ணுவான். நீ என்னடா நடிக்கிற?’ என அடிக்கடி சொல்வாராம். இது கமலுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்துதாம். அந்த நாகேஷ் மட்டும் என் கையில கிடைச்சான். தலையணையை மூஞ்சில வச்சி அழுத்தி கொன்னுடுவேன்’ என அங்கிருப்பவர்களிடம் கமல் சொல்வாரம்.
ஆனால், நாகேஷுடன் நடிக்க துவங்கிய போதும், அவர் நடித்த படங்களை பார்த்த போதும்தான் அவர் மிகச்சிறந்த நடிகர் என்பதும் பாலசந்தர் தன்னை திட்டியதில் தவறே இல்லை என்றும் கமல் உணர்ந்தாராம். அதோடு, தான் தயாரித்து நடிக்கும் படங்களில் தொடர்ந்து நாகேஷை கமல் நடிக்க வைத்தார். அபூர்வ சகோதரர்கள், நம்மவர், மகளிர் மட்டும், மைக்கேல் மதன காம ராஜன் என கமல் தயாரித்த படங்களில் நாகேஷ் நடித்திருப்பார்.
அதேபோல் பல பேட்டிகளிலும், மேடைகளிலும் பேசும்போது ‘நாகேஷ் போன்ற மிகச்சிறந்த நடிகர் யாருமே இல்லை’ என கமல் பாராட்டி பேசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.