அன்னைக்கு மட்டும் கண்ணதாசன் சொன்னதை கேட்டிருந்தா சாவித்திரிக்கு இப்படி ஒரு நிலைமை வந்திருக்குமா??
சாவித்திரியும் ஜெமினி கணேசனும் காதல் திருமணம் செய்துகொண்டவர்கள் என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள். இவர்களின் திருமண வாழ்க்கை மிக சந்தோஷமாக சென்றுகொண்டிருந்த வேளையில் திடீரென இருவருக்குள்ளும் மிக பலமான கருத்து மோதல் ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக இருவரும் பிரிந்து வாழ முடிவெடுத்தனர்.
அதன் பின் மிகப் பெரிய மன அழுத்தத்திற்கு ஆளான சாவித்திரி குடிப் பழக்கத்திற்கு அடிமையாகி உடல் நிலை சரியில்லாம் போக, தனது கடைசி காலத்தில் கோமா நிலைக்குச் சென்று இறந்துபோனார்.
அவ்வாறு அவர்களின் பிரிவிற்கு முக்கிய காரணமாக பலரும் ஒரு விஷயத்தை கூறுகிறார்கள். அதாவது 1971 ஆம் ஆண்டு சாவித்திரி ஒரு திரைப்படத்தை தயாரித்து இயக்க வேண்டும் என முடிவெடுக்கிறார். அத்திரைப்படத்தில் ஜெமினி கணேசனை கதாநாயகனாக நடிக்க வைக்க விரும்பினார். ஆனால் ஜெமினி கணேசன் நடிப்பதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. மேலும் சாவித்திரி சொந்த படத்தை தயாரிப்பதையும் அவர் விரும்பவில்லை.
இதனை சாவித்திriயிடம் பல முறை சொல்லிப்பார்த்தும் அவர் கேட்கவில்லை. அதன் பின் அந்த படத்தில் சிவாஜி கணேசனை கதாநாயகனாக நடிக்க வைத்து, சாவித்திரி கதாநாயகியாக நடித்து, அத்திரைப்படத்தை தயாரித்து இயக்கவும் செய்தார். அந்த திரைப்படத்தின் பெயர் “பிராப்தம்”.
“பிராப்தம்” திரைப்படம் வெளியாகி படுதோல்வி அடைந்தது. இந்த தோல்வியால் சாவித்திரிக்கு பல லட்ச ரூபாய் நஷ்டமானது. இதற்கு பிறகுதான் ஜெமினி கணேசனுக்கும் சாவித்திரிக்கும் மிகப்பெரிய கருத்து மோதலே ஏற்பட்டது.
இந்த நிலையில் சாவித்திரி ஒரு திரைப்படத்தை தயாரிக்கப்போகிறார் என்று கேள்விப்பட்ட கண்ணதாசன், நேராக சாவித்திரியை சந்தித்து “என் கூட யாருமே சரியான ஆளே இல்லை. என்னுடன் வேலை பார்த்த ஒரு சில பேர் தவிர மற்ற எல்லோருமே தவறான ஆட்கள். யார் யாரெல்லாம் என்னோடு கடைசி வரை வருவார்கள் என்று நினைத்தேனோ அவர்கள் எல்லோரும் எனக்கு துரோகம் செய்துவிட்டார்கள். அதே போல் இப்போது உன்னுடன் இருப்பவர்களும் அப்படித்தான். ஆதலால் தயவுசெய்து சொந்தப்படம் எடுக்காதே” என்று அறிவுரை கூறினாராம்.
ஆனால் சாவித்திரி, கண்ணதாசனின் அறிவுரையை கேட்கவில்லை. இவ்வாறு, கண்ணதாசனின் அறிவுரையையும் தாண்டி சாவித்திரி “பிராப்தம்” திரைப்படத்தை தயாரித்திருக்கிறார். அன்று மட்டும் சாவித்திரி கொஞ்சம் சிந்தித்து இருந்தால் பிற்காலத்தில் அவருக்கு ஏற்பட இருந்த அவலநிலையை தடுத்திருக்க முடியுமோ என்னவோ!!
இதையும் படிங்க: நடிகராவதற்கு முன்பே மணிரத்னம் படத்தில் நடித்த அஜித்… இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!!