கண்ணதாசனுக்கும் கலைஞருக்கும் ஏற்பட்ட மோதல்… சேர்த்து வச்சது எது தெரியுமா?..ஒரு அதிசய சம்பவம்…
கவியரசர் கண்ணதாசனும், கலைஞர் கருணாநிதியும் தொடக்கத்தில் மிகவும் நெருக்கமான நண்பர்களாக இருந்து வந்தனர். ஆனால் காலம் அவர்களுக்கிடையே கருத்து வேறுபாட்டை உருவாக்கியது. அவ்வாறு அவர்களுக்கிடையே நடந்த முதல் மோதல் குறித்தும் அதன் பின் அவர்களுக்கிடையே நடந்த ஒரு அதிசய சம்பவம் குறித்தும் இப்போது பார்க்கலாம்.
1954 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன், பத்மினி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “இல்லற ஜோதி”. இத்திரைப்படத்திற்கு கதை-வசனம் எழுதியவர் கண்ணதாசன். இத்திரைப்படத்தின் உருவாக்கத்தின்போது கலைஞர் கருணாநிதி கல்லக்குடி ரயில் போராட்டத்தில் கலந்துகொண்டதால் கைது செய்யப்பட்டிருந்தார்.
கண்ணதாசனும் கலைஞரும் தாங்கள் எழுதிக்கொள்ளும் வசனங்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ள வேண்டும் என இருவரும் பேசி வைத்திருந்தார்களாம். இந்த நிலையில் கண்ணதாசன் “இல்லற ஜோதி” திரைப்படத்திற்காக எழுதிய வசனத்தை சிறையில் இருக்கும் கலைஞருக்கு அனுப்பிவைத்தாராம்.
ஆனால் கண்ணதாசன் அனுப்பிய வசனங்களின் பிரதிகள் கலைஞரின் கைக்கு சேரும் முன்பே கலைஞரின் நெருங்கிய நண்பர்கள் அவரிடம் “நீங்கள் சிறைக்கு வந்தவுடன், கண்ணதாசன் உங்களை விட்டுவிட்டு வசனம் எழுதத்தொடங்கிவிட்டாராம்” என கூறினார்களாம். இதனால் கண்ணதாசன் எழுதிய வசனங்களை ஒரு வரி கூட படிக்காமல் அப்படியே திருப்பி அனுப்பி வைத்தாராம் கலைஞர்.
இதுதான் இருவருக்கிடையே நடந்த முதல் மோதல். இதனை தொடர்ந்து இருவருக்கும் இடையே பல நாட்களாக கருத்து மோதல் நடைபெற்றது. குறிப்பாக கண்ணதாசன், கலைஞர் கருணாநிதியை அதிகமாக தாக்கி எழுதி வந்தாராம்.
கண்ணதாசன் என்னதான் தன்னை கடுமையாக விமர்சித்து எழுதி வந்தாலும், கண்ணதாசனின் தமிழ் மீது கலைஞர் தீரா பற்றுக்கொண்டிருந்தாராம். இதனை தொடர்ந்து ஒரு நாள் சென்னையில் ஒரு பிரபல ஹோட்டல் அறையில் ஒரு திரைப்படத்திற்கான வசனங்களை கலைஞர் எழுதிக்கொண்டிருந்தாராம். அப்போது திரைப்படம் குறித்தான ஒரு தகவலை கூறுவதற்காக கலைஞர், திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு ஹோட்டல் அறையில் இருந்து தொலைப்பேசியில் தொடர்புகொண்டாராம்.
தொலைப்பேசியில் தயாரிப்பு நிறுவனத்தாரிடம் பேசிக்கொண்டிருந்தபோது Cross கன்னெக்சனில் இன்னொருவர் பேசிக்கொண்டிருந்தாராம். அவரின் குரல் மிகவும் பழக்கப்பட்ட குரல் போல் இருந்ததாம். சில நிமிடங்கள் கழித்துத்தான் அக்குரல் கண்ணதாசனுடைய குரல் என தெரிய வந்திருக்கிறது.
அதே போல் கண்ணதாசனும் Cross கன்னெக்சனில் கலைஞர் இருக்கிறார் என்பதை தெரிந்துகொண்டாராம். அப்போது கலைஞர் “யார் அது கண்ணதாசனா? நீர் எப்படி இந்த தொலைப்பேசி இணைப்பில் வந்தீர்?” என கேட்டிருக்கிறார்.
அதற்கு கண்ணதாசன் “நான் யாரோ ஒருவரைத்தான் தொலைப்பேசியில் அழைத்தேன்” என கூறியிருக்கிறார். இதனை தொடர்ந்து கலைஞர் “சரி பரவாயில்லை, தொலைப்பேசியிலாவது பேசிக்கொள்வோம்” என கலைஞர் கூறினாராம்.
அதன் பின் சில நிமிடங்கள் இருவரும் பழைய பகையை எல்லாம் மறந்து பல விஷயங்கள் பேசிக்கொண்டனராம். அப்போது கண்ணதாசன் “நான் உன்னை கடுமையாக தாக்கி விமர்சிப்பதெல்லாம் பத்திரிக்கைகளில் பார்க்கிறாயா? அதை பற்றி என்ன நினைக்கிறாய்?” என கலைஞரிடம் கேட்டாராம்.
அதற்கு கலைஞர் “நீர் என்னை நன்றாக திட்டுகின்றீர். அதுவும் உன்னுடைய அழகு தமிழில் என்னை திட்டுவதால், நான் அதை எல்லாம் ரசித்துக்கொண்டிருக்கின்றேனே தவிர, அதற்கெல்லாம் நான் வருத்தப்படவே இல்லை” என கூறினாராம்.
தொலைப்பேசியில் ஏற்பட்ட ஒரு தொழில்நுட்ப கோளாறு காரணமாக பழைய நண்பர்கள் மிகவும் மனம் விட்டு பேசிக்கொண்டது அவர்களுக்கே ஆச்சரியமாக இருந்திருக்கும் அல்லவா??