ஒரே கதை… ஆனால் எழுதியதோ இரண்டு பேர்… கண்ணதாசனும் கலைஞரும் எழுதிய அட்டர் ஃப்ளாப் படங்கள்…
கவியரசர் கண்ணதாசன் தமிழ் சினிமாவின் பழம்பெரும் கவிஞராக திகழ்ந்தாலும், அவர் பல திரைப்படங்களில் கதாசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். அதே போல் கலைஞர் கருணாநிதியும் பல திரைப்படங்களுக்கு கதை எழுதியுள்ளார் என்பதை ரசிகர்கள் பலரும் அறிந்திருப்பார்கள்.
இந்த நிலையில் ஒரே கதையை கண்ணதாசனும் கலைஞரும் வெவ்வேறு மாதிரி எழுதியிருக்கிறார்கள். அந்த கதைகள் படங்களாகவும் வெளிவந்திருக்கிறது. அது குறித்த தகவலை இப்போது பார்க்கலாம்.
1954 ஆம் ஆண்டு எஸ்.எஸ்.ராஜேந்திரன், எஸ்.வரலட்சுமி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “அம்மையப்பன்”. இந்த படத்தை பீம்சிங் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்திற்கு கலைஞர் கதை-வசனம் எழுதியிருந்தார்.
இதே ஆண்டில் கே.ஆர்.ராமசாமி, சாவித்திரி ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “சுகம் எங்கே’. இத்திரைப்படத்தை கே.ராம்நாத் இயக்கியிருந்தார். கண்ணதாசன் இத்திரைப்படத்திற்கு கதை-வசனம் எழுதியிருந்தார்.
ஒரு ஆங்கில திரைப்படத்தின் கதையை தமிழுக்கு ஏற்றார் போல் மாற்றி இருவரும் எழுதினார்களாம். இதில் மற்றொரு விஷயம் என்னவென்றால் “சுகம் எங்கே”” திரைப்படத்தின் கதை கலைஞரின் “அம்மையப்பன்” கதையில் இருந்து திருடப்பட்டது என்ற சர்ச்சை கூட அக்காலகட்டத்தில் எழுந்ததாம். ஆனால் “சுகம் எங்கே”, “அம்மையப்பன்” ஆகிய இரண்டு திரைப்படங்களுமே படுதோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
கலைஞரும் கண்ணதாசனும் தொடக்க காலத்தில் மிக நெருங்கிய நண்பர்களாக திகழ்ந்தவர்கள். ஆனால் கலைஞரின் கதையை கண்ணதாசன் திருடியிருக்கிறார் என்று எழுந்த சர்ச்சை, இருவரின் நட்புக்கும் இடையே பிரிவை உண்டு செய்திருக்கிறது.