Connect with us

Cinema History

கண்ணதாசனை அடிக்க ஓட ஓட விரட்டிய சிவாஜி… தடுத்து நிறுத்திய முக்கிய நடிகர்..

கண்ணதாசன், சிவாஜி கணேசன் ஆகிய இரு ஜாம்பவான்களும் நெருங்கிய நண்பர்களாக திகழ்ந்தவர்கள். இருவரும் அரசியல் ரீதியாக திராவிட முன்னேற்ற கழகத்தில் தங்களை இணைத்துக்கொண்டவர்கள்.

அது 1950களின் பிற்காலம். அண்ணா, பெரியார் ஆகியோரின் பகுத்தறிவு பேச்சுக்களால் தமிழகமே கட்டுண்ட காலம் அது. அப்போது “சம்பூர்ண ராமாயணம்” என்ற திரைப்படத்தில் சிவாஜி கணேசன் நடிப்பதாக அறிவிப்பு வெளிவந்தது.

“ஒரு பகுத்தறிவு கட்சியைச் சேர்ந்தவர் எதற்காக ராமாயண திரைப்படத்தில் நடிக்கிறார்” என கட்சிக்குள்ளேயே சிவாஜிக்கு பல கண்டனங்கள் எழுந்தது. இது போதாதென்று சிவாஜி கணேசன் திருப்பதி கோவிலுக்கு வேறு சென்று வந்திருந்தார். இது மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

சிவாஜி கணேசனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கண்ணதாசன் தான் நடத்தி வந்த “தென்றல்” பத்திரிக்கையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அதாவது சிவாஜி கணேசன் நடித்த “தெனாலி ராமன்” திரைப்படத்தில் இருந்து மண்ணுக்குள் சிவாஜியின் உடலை மட்டும் புதைத்து தலை மட்டும் வெளியே தெரிவது போலவும் ஒரு யானை அந்த தலையை இடர முற்படுவது போலவும் ஒரு புகைப்படம் வெளியானது. (கண்ணதாசன் பின்னாளில் ஆன்மீகவாதியாக மாறியது வேறு விஷயம்)

அந்த புகைப்படத்தை அப்படியே பத்திரிக்கையில் அச்சிட்டு “சிவாஜி கணேசனுக்கு வருங்காலத்தில் இது தான் நிலை” என குறிப்பிட்டிருந்தார். இதனை பார்த்த சிவாஜி, கண்ணதாசன் மீது கடும் கோபம் கொண்டார்.

கண்ணதாசன்

அதன் பின் ஒரு நாள் வாஹினி ஸ்டூடியோவில் கண்ணதாசனை யதார்த்தமாக பார்த்த சிவாஜி கணேசன், “டேய் கண்ணதாசா நில்லுடா” என கத்திக்கொண்டு அவரை நோக்கி அடிப்பது போல் ஓடிவந்தார். இதனை பார்த்த கண்ணதாசன் ஓடத்துவங்கினார்.

அப்போது இன்னொரு தளத்தில் கலைவாணர் என் எஸ் கிருஷ்ணனின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. சிவாஜி தன்னை அடிக்க வருகிறார் என்று தெரிந்துகொண்டு ஸ்டூடியோவை சுற்றி சுற்றி ஓடிய கண்ணதாசன் என் எஸ் கேவின் படப்பிடிப்பு தளத்தில் நுழைந்துவிட்டார். அப்போது சிவாஜி கண்ணதாசனை விரட்டி வருவதை பார்த்த என் எஸ் கே, இருவரையும் தடுத்து நிறுத்தி விசாரித்தார்.

அப்போது சிவாஜி நடந்ததை கூற அதற்கு என் எஸ் கே “நீ ஒரு நடிகன். இது போன்று கோபம் கொள்ளக்கூடாது, அவன் எழுதினால் என்ன, உனக்கு தன்னம்பிக்கை இல்லையா” என அறிவுரை கூறி அனுப்பிவிட்டார். அதன் பின் கண்ணதாசனிடம் “நீ ஒருவரை விமர்சிக்க வேண்டும் என்றால் விமர்சனத்திற்குரியவரும் அதனை ரசிக்கும்படி விமர்சிக்க வேண்டும்” என அறிவுரை கூறியிருக்கிறார்.

இதனை தொடர்ந்து சில காலம் சிவாஜி கணேசனின் எந்த திரைப்படத்திற்கும் கண்ணதாசன் பாடல்கள் எழுதவில்லை. ஆனால் நேரம் இருவரையும் சேர்த்து வைக்க முடிவு செய்தது. அதாவது சிவாஜி கணேசனுக்கு பாடல்கள் எழுதிக்கொண்டிருந்த பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார் திடீரென காலமானார்.

அதன் பின் சிவாஜி கணேசன் நடித்த “பாசமலர்” திரைப்படத்திற்கு கண்ணதாசன் பாடல்கள் எழுதும் நிலை வந்தது. பாடல்களை ஒலிப்பதிவு செய்த பின் அப்பாடல்களை எல்லாம் கேட்ட சிவாஜி, நெகிழ்ந்து போய் கண்ணதாசனை வீட்டிற்கு அழைத்து கட்டித் தழுவிக்கொண்டார். “நீ ஒரு சரஸ்வதி” என புகழ்ந்தார்.

அப்போது கண்ணாதாசன் “நான் உன்னை பற்றி அப்படி எழுதியிருக்கக்கூடாது. என்னை மன்னித்துவிடு” என மனம் வருந்தி கூறினார். அதற்கு சிவாஜி “அதெல்லாம் போகட்டும், பரவாயில்லை” என கூற இரண்டு லெஜண்டுகளும் மீண்டும் நண்பர்கள் ஆனார்கள்.

google news
Continue Reading

More in Cinema History

To Top