தீ விபத்தில் வீட்டை இழந்த மக்கள்… கண்ணதாசன் ஆஃபீஸ்க்கு வந்து கதறி அழுத சம்பவம்… கவியரசர் என்ன செய்தார் தெரியுமா??
கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகள் காலத்தை தாண்டி நிற்கக்கூடிய ஒன்று என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள். ஆனால் கண்ணதாசனின் வள்ளல் தன்மையை குறித்து அறிந்தவர்கள் சிலரே. அவ்வாறு கண்ணதாசன் கொடை வள்ளலாக திகழ்ந்த ஒரு சம்பவத்தை குறித்து இப்போது பார்க்கலாம்.
ஒரு முறை கண்ணதாசன் தனது பாடல் பதிவை முடித்தப்பிறகு தான் நடத்திக்கொண்டிருந்த தென்றல் பத்திரிக்கை அலுவலகத்திற்கு வழக்கம்போல் வந்துள்ளார். அப்போது அங்கிருந்த செய்தித்தாள்களை புரட்டியபோது அதில் வெளியாகியிருந்த செய்தியை பார்த்து நிலைகுலைந்துப் போனாராம் கண்ணதாசன்.
அதாவது தென்றல் அலுவலத்திற்கு சற்று தொலைவே மக்கீஸ் கார்டன் என்ற குடிசை பகுதி இருந்தது. அன்று அந்த குடிசை பகுதியில் கோரமான தீ விபத்து ஏற்பட்டு 4 பேர் உயிரிழந்துவிட்டனராம். இந்த செய்தியை படித்ததும் அப்படியே நிலைகுலைந்து உட்கார்ந்துவிட்டாராம் கண்ணதாசன்.
தனது அருகில் இருந்த உதவியாளரை அழைத்து “மக்கீஸ் கார்டன்ல தீ பிடிச்சிடுச்சாமே. போய் பார்த்தீங்களா?” என கேட்டாராம். அதற்கு அவரின் உதவியாளர் “ஆமாம் ஐயா, நான் கேள்விப்பட்டேன். ஆனால் நேரில் சென்று பார்க்கவில்லை. மூன்று நான்கு பேர் இறந்துவிட்டதாக கூட சொன்னார்கள்” என கூறினாராம்.
இந்த கோர விபத்தை நினைத்து அப்படியே ஸ்தம்பித்துப்போனாராம் கண்ணதாசன். அன்று ஒரு பத்திரிக்கைக்கு கண்ணதாசன் ஒரு தலையங்கம் எழுத வேண்டியது இருந்ததாம். ஆனால் இந்த கோர விபத்தால் மிகவும் வருத்ததிற்கு உள்ளான கண்ணதாசன், “எனக்கு இன்னைக்கு தலையங்கம் எழுதுறதுக்கான மனநிலை இல்லை” என கூறிவிட்டு அலுவலகத்தில் இருந்து வெளியே சென்றாராம்.
கண்ணதாசன் அலுவலகத்திற்கு வந்திருப்பதை கேள்விப்பட்ட மக்கீஸ் கார்டன் பகுதி மக்கள் சிலர் அவரை பார்ப்பதற்காக வெளியே நின்றுக்கொண்டிருந்தார்களாம். “எங்க வீடெல்லாம் எரிஞ்சுப்போச்சுங்கய்யா, சாப்பாட்டுக்கு கூட வழியில்லை” என்று கூறினார்களாம்.
உடனே தனது உதவியாளரை அழைத்த கண்ணதாசன் 200 ரூபாயை எடுத்துக்கொண்டு வரும்படி கூறினாராம். உடனே உதவியாளர் 200 ரூபாயை எடுத்து வந்து கொடுக்க, அதனை கண்ணதாசன் அந்த மக்களிடம் கொடுத்தாராம்.
அந்த காலகட்டத்தில் கண்ணதாசன் நடத்திக்கொண்டிருந்த “தென்றல்” பத்திரிக்கையின் ஒரு இதழின் விலை 25 பைசா. 200 ரூபாய் என்றால் கிட்டதட்ட 800 பத்திரிக்கைக்கான விற்பனை ரூபாயை அப்படியே எடுத்து கொடுத்துள்ளார் கண்ணதாசன். இந்த தகவலை கண்ணதாசனின் மகனான அண்ணாதுரை கண்ணதாசன் தனது வீடியோ ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.