பாட்டு எழுத 20 பைசாவை கொடுத்த தயாரிப்பாளர்!.. கண்ணதாசன் வாழ்வில் நடந்த செம காமெடி!..

Published on: February 28, 2024
kannadasan
---Advertisement---

தமிழ் திரைப்பட உலகில் கதாசிரியராகவும், வசனகர்த்தாவாகவும் நுழைந்தவர் கண்ணதாசன். பத்திரிக்கைகளில் வேலை செய்துவிட்டு தனது எழுத்தை நம்பி சினிமாவுக்கு வந்தார். எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் என 60களில் மும்மூர்த்திகளாக இருந்த 3 பேருக்கும் நிறைய பாடல்களை கண்ணதாசனே எழுதி இருக்கிறார்.

காதல், தத்துவம், சோகம், கண்ணீர், விரக்தி, நம்பிக்கை என மனித வாழ்வின் அத்தனை சூழ்நிலைகளுக்கும் பாடல்களை எழுதியிருக்கிறார். கண்ணதாசன் மரணத்தை பற்றி எழுதினால் அந்த மரணமே பூரணத்துவம் பெறும். காதலை பாடினால் அதில் அன்பு பெருக்கெடுத்து ஓடும். தத்துவம் எழுதினால் மனக்காயத்திற்கு மருந்துபோட்டு வாழ்வின் அம்சங்களை புரியவைக்கும்.

இதையும் படிங்க: போனிலேயே பாட்டு வரிகளை சொன்ன கண்ணதாசன்!.. எம்.ஜி.ஆரின் மெகா ஹிட் பாட்டு அதுதான்!..

பாடலாசிரியர், நடிகர், தயாரிப்பாளர் என சினிமாவில் பல எல்லைகளையும் அவர் தொட்டிருக்கிறார். சொந்த படம் எடுத்து நிறைய நஷ்டமும் அடைந்திருக்கிறார். அதனால், பல சொத்துக்களை விற்றிருக்கிறார். இந்நிலையில், அவரது வாழ்வில் நடந்த ஒரு நகைச்சுவை சம்பவம் பற்றித்தான் இங்கே பார்க்கப்போகிறோம்.

அப்போது திமுகவில் இருந்த நீல நாராயணன் என்பவர் ‘அன்புக்கு என் அண்ணன்’ என்கிற படத்தை தயாரிக்க திட்டமிட்டார். இந்த படத்தின் பாடல்களை கண்ணதாசன் எழுதவேண்டும் என ஆசைப்பட்ட அவர் கண்ணதாசனை சந்தித்து இதுபற்றி பேசிவிட்டு அவருக்கு முன்தொகை கொடுத்து வருவதற்காக தனது அலுவலகத்திலிருந்து இரண்டு பேரை அனுப்பி வைத்தார்.

அவர்கள் கண்ணதாசனை அவரின் வீட்டில் சந்தித்து அந்த படம் பற்றி பேசிவிட்டு அவரின் கையில் ஒரு காயினை கொடுத்துவிட்டு சென்றனர். அவர்கள் சென்றதும் கண்ணதாசன் அந்த காயினை திருப்பி பார்த்தார். அது வெறும் 20 பைசா. 20 பைசாவை கொடுப்பது அவர்களுக்கு செண்டிமெண்ட் போல என நினைத்துவிட்டார். உடனே எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு போன் செய்தார்.

இதையும் படிங்க: எம்.எஸ்.வி போட்ட டியூனுக்கு கண்ணதாசன் சிரமப்பட்டு எழுதிய பாடல்… விடிய விடிய விழித்த பாலசந்தர்

‘நீல நாராயணன் அலுவலகத்தில் இருந்து வந்து எனக்கு 20 பைசாவை அட்வான்ஸாக கொடுத்தார்கள். அடுத்து உன்னை பார்க்கத்தான் அவர்கள் வருவார்கள். அவர்கள் 20 பைசாவை கொடுக்கிறார்கள் என எதுவும் நினைத்துவிடாதே.. அது அவர்களுக்கு செண்டிமெண்ட் என நினைக்கிறேன். எனக்கும் 20 பைசாதான் கொடுத்தார்கள்’ என சொன்னார். அவர் சொன்னதுபோலவே அவர்கள் எம்.எஸ்.வியை சந்தித்து பேசிவிட்டு ஒரு தங்க நாணயத்தை முன் தொகையாக கொடுத்தார்கள்.

எம்.எஸ்.விக்கு ஒரே குழப்பம். ‘கவிஞருக்கு 20 பைசா கொடுத்தீர்கள். எனக்கு தங்க நாணயத்தை கொடுத்திருக்கிறீர்கள்’ என அவர் கேட்க அப்போதுதான் அவர்களுக்கு புரிந்தது. அந்த காலகட்டத்தில் 20 பைசாவும், தங்க நாணயமும் பார்ப்பதற்கு ஒரேமாதிரி இருக்கும். தங்க நாணயத்துக்கு பதிலாக தவறுதலாக 20 பைசாவை கண்ணதாசனிடம் கொடுத்ததை எண்ணி பதறிய அவர்கள் உடனே கண்ணதாசனின் வீட்டுக்கு ஓடி தங்க நாணயத்தை கொடுத்துவிட்டு சென்றார்களாம்.

அட இது புரியாம இது அவங்களோட செண்டிமெண்ட்டின்னு நினைச்சுட்டோமே என சிரித்தாராம் கவிஞர் கண்ணதாசன்!..

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.