“கண்ணதாசன் இறந்துட்டார்ன்னு ஃபோன் வந்துச்சு”??? ஆனா ஃபோன் பண்ணதே கண்ணதாசன்தான்… ஏன் தெரியுமா??
கவியரசு கண்ணதாசனின் புகழை குறித்து நாம் தனியாக கூறத்தேவையில்லை. தனது அசரவைக்கும் பாடல் வரிகளால் ரசிகர்களை எப்போதும் மயக்க நிலையில் வைத்திருந்தவர் கண்ணதாசன்.
கண்ணதாசனின் வரிகள் உன்னதமானது மட்டுமல்லாமல் சிந்திக்கத் தூண்டுவதாகவும் அமைந்தது. இந்த நிலையில் கண்ணதாசன் புகழின் உச்சியில் இருந்த காலக்கட்டத்தில் அவர் செய்த ஒரு விபரீத காரியத்தை குறித்து இப்போது பார்க்கலாம்.
ஒரு முறை இயக்குனர் ஸ்ரீதர், தனது திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோது ஸ்டூடியோவிற்கு ஒரு தொலைப்பேசி அழைப்பு வந்தது. அழைப்பின் மறுபக்கம் பேசிய ஒருவர் “கவியரசர் கண்ணதாசன் எதிர்பாராவிதமாக இறந்துவிட்டார்” என்ற அதிர்ச்சி தகவலை கூறியிருக்கிறார்.
இதனை கேட்டு ஸ்தம்பித்துப்போன ஸ்ரீதர், படப்பிடிப்பை நிறுத்திவிட்டு சக பணியாளர்கள் சிலருடன் கண்ணதாசனின் வீட்டிற்கு விரைந்தார். கண்ணதாசனின் வீட்டில் இருந்த சகோதரர் ஸ்ரீதரையும் அவருடன் வந்த மற்றவர்களையும் வரவேற்றார். அப்போது ஸ்ரீதர், “கண்ணதாசன் இறந்துவிட்டதாக தகவல் வந்திருந்ததே” என தனக்கு வந்த தொலைப்பேசி அழைப்பு குறித்து கூறினார்.
இதனை கேட்ட சகோதரர், “சில மணிநேரங்களுக்கு முன்புதான் கண்ணதாசன் ஒரு ஹோட்டலுக்கு செல்வதாக கூறிக்கொண்டு போனார். ஒரு வேளை ஹோட்டல் அறையில் எதாவது அசம்பாவிதம் நடந்திருக்குமோ?” என கூற அனைவரும் பதறிவிட்டனர். மேலும் கண்ணதாசன் எந்த ஹோட்டலுக்குச் சென்றார் என்ற செய்தியும் தெரியவில்லை என்பதால் அனைவரும் பதற்றத்துடனேயே இருந்தனர்.
அப்போது ஸ்ரீதருக்கு இன்னொரு தொலைப்பேசி அழைப்பு வந்திருக்கிறது. இதனை கேள்விபட்ட ஸ்ரீதர் உடனே தொலைப்பேசியை வாங்கி காதில் வைத்திருக்கிறார். அப்போது மறுமுனையில் இருந்து “ஸ்ரீதர், நான்தான் கண்ணதாசன் பேசுகிறேன்” என்று ஒரு குரல் கேட்டிருக்கிறது.
“கவிஞரே, உண்மையிலேயே நீங்கள்தானா? நீங்கள் இறந்துவிட்டதாக ஒரு தகவல் வந்ததே” என கேட்டாராம். அதற்கு கண்ணதாசன் “அந்த தகவலை சொன்னதே நான்தான்” என கூறியிருக்கிறார்.
“ஏன் இந்த விபரீத விளையாட்டு?” என ஸ்ரீதர் கோபத்துடன் கேட்டிருக்கிறார். அதற்கு கண்ணதாசன் “இப்படி எல்லாருடைய அனுதாபங்களையும் வாங்கினால்தான் எனக்கு ஏற்பட்டிருந்த திருஷ்டி கழியும் என்று சிலர் கூறினார்கள். அதற்காகத்தான் இவ்வாறு செய்தேன்” என அசால்ட்டாக கூறினாராம். இப்படிப்பட்ட வீபரீத விளையாட்டால் தனது நெருக்கமானவர்களை சில நிமிடங்கள் பதற வைத்திருக்கிறார் கண்ணதாசன்.