வாலியின் வாழ்க்கையை மாற்றிய கண்ணதாசன் பாட்டு!.. அது மட்டும் நடக்கலனா!…

by சிவா |   ( Updated:2023-04-26 09:17:23  )
vali
X

தமிழ் திரையுலகில் பல சோகம், தத்துவம், காதல் என பல சூழ்நிலைகளுக்கு பாடல்களை எழுதியவர் கவிஞர் வாலி. எம்.ஜி.ஆர், சிவாஜி முதல் ரஜினி - கமல், விஜய் - அஜித் வரை பல தலைமுறையினருக்கும் இவர் பாடல்களை எழுதியுள்ளார். அதனால்தான் இவருக்கு வாலிப கவிஞர் வாலி என்கிற பெயர் வந்தது.

Vaali
Vaali

கண்ணதாசன் பீக்கில் இருந்த போதே சினிமாவில் நுழைந்து எம்.ஜி.ஆருக்கு 63 படங்களுக்கும், சிவாஜியின் 66 படங்களுக்கும் வாலி பாடல்கள் எழுதியுள்ளார். பல நூல்கள் மற்றும் கவிதை தொகுப்புகளையும் வாலி எழுதியுள்ளார். எம்.ஜி.ஆருக்கு பல வெற்றிப்பாடல்களை எழுதியவர் வாலிதான். கண்ணதாசனை போல ஒரு கவிஞரோ, பாடலாசிரியரோ இல்லை என்கிற நிலையில் அவருக்கு போட்டியாக பாடல்களை எழுதி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார் வாலி.

ஆனால், வாலியின் வாழ்க்கையை மாற்றியதே கவிஞர் கண்ணதாசனின் ஒரு பாடல்தான் என்றால் நம்ப முடிகிறதா?. ஆனால், அதுதான் உண்மை. இதுபற்றி வாலியே ஒரு முறை கூறியுள்ளார்.

நான் சினிமாவில் பாட்டெழுத முயற்சி செய்து கொண்டிருந்த காலம் அது. ஒரு வருடத்திற்கு ஒன்று, இரண்டு படங்களில் பாட்டெழுத வாய்ப்புகள் கிடைக்கும். 4 வருடங்களில் சில பாடல்களை மட்டுமே எழுதியிருந்தேன். வயது அதிகமாகி கொண்டே இருந்தது. என் வாழ்க்கையில் எந்த வெளிச்சமும் இல்லை. அந்த நேரத்தில் மதுரையில் டிவிஎஸ் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்த என் நண்பன் ஒருவன் ‘சினிமாவெல்லாம் வேண்டாம். நீ ஏன் அங்கு கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறாய். உடனே கிளம்பி மதுரைக்கு வா. உனக்கு என் கம்பெனியில் நல்ல வேலை வாங்கி தருகிறேன்’ என்றான்.

எனக்கும் அதுவே சரி என தோன்றியது. அப்போதுதான், எனக்கு அவ்வப்போது உதவி வந்த பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ் என் அறைக்கு வந்தார். அவரிடம் சமீபத்தில் என்ன பாட்டு பாடுனீர்கள்? என கேட்டேன். சுமைதாங்கி எனும் படத்தில் ‘மயக்கமா கலக்கமா.. மனதிலே குழப்பமா.. வாழ்க்கையில் நடுக்கமா’ என்கிற பாடலை பாடியதாக கூறி அந்த பாடலை பாடிக்காட்டினார்.

அந்த பாடல் வரிகள் எனக்கு நம்பிக்கை கொடுத்ததோடு, எனக்குள் இருந்த குழப்பதையும் போக்கியது. மதுரைக்கு செல்லும் திட்டத்தை கைவிட்டேன். மீண்டும் முயற்சிகள் செய்து பாடல்களை எழுதும் வாய்ப்புகளை பெற்றேன். பின்னாளில் கண்ணாதாசனிடம் ‘நான் உங்களுக்கு போட்டியாக வந்தவன் என நீங்கள் நினைத்தால் அதற்கு காரணம் நீங்கள் எழுதிய ‘மயக்கமா கலக்கமா’ பாடல்தான்’ என அவரிடமே சொன்னேன்’ என வாலி தெரிவித்துள்ளார்.

Next Story