கண்ணதாசன் பாடலால் கிளம்பிய சர்ச்சை… சென்சார் போர்டில் நடந்த வாக்குவாதம்…
1958 ஆம் ஆண்டு டி.ஆர்.மகாலிங்கம், பண்டரி பாய் ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “மாலையிட்ட மங்கை”. இத்திரைப்படத்தை ஜி.ஆர்.நாதன் என்பவர் இயக்கியிருந்தார். கவியரசர் கண்ணதாசன் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார். கண்ணதாசன் தயாரித்த முதல் திரைப்படம் இதுதான்.
இத்திரைப்படத்தில் மொத்தம் 15 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. இந்த 15 பாடல்களையும் கண்ணதாசனே எழுதியிருந்தார். இத்திரைப்படத்தின் பணிகள் நிறைவடைந்த பிறகு சென்சார் போர்டு உறுப்பினர்கள் இத்திரைப்படத்தை பார்த்தனர்.
இத்திரைப்படத்தை பார்த்து முடித்த பிறகு சென்சார் போர்டு உறுப்பினர்கள் ஒரு அறைக்குள் நுழைந்து வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தார்களாம். அந்த அறைக்கு வெளியே கண்ணதாசன் நின்றுக்கொண்டிருந்தார்.
கண்ணதாசன் அக்காலகட்டத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தில் உறுப்பினராக இருந்தார். ஆதலால் அன்று மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியை விமர்சிக்கும் வகையில் எதாவது வசனங்களோ பாடல் வரிகளோ இடம்பெற்றிருக்கிறதா என்று தீவிரமாக கவனிப்பார்களாம்.
ஆனால் “மாலையிட்ட மங்கை” அரசியல் சார்ந்த திரைப்படம் இல்லை. எனினும் சென்சார் போர்டு உறுப்பினர்கள் வெகு நேரமாக உள்ளே கலந்துரையாடிக்கொண்டிருந்தது கண்ணதாசனுக்கு பயத்தை உண்டு செய்திருக்கிறது. கிட்டத்தட்ட அரை மணி நேரம் கழித்து அவர்கள் வெளியே வந்திருக்கிறார்கள்.
அப்போது சென்சார் போர்டு அதிகாரி, கண்ணதாசனை பார்த்து “4 மணிக்கு என் ஆஃபீஸுக்கு வாங்க, பேசிக்கலாம்” என கூறியிருக்கிறார். கண்ணதாசனுக்கு எதுவுமே புரியவில்லை. இத்திரைப்படத்தில் அரசியல் சார்ந்து எந்த வசனமும் இல்லை. அப்படியும் எதாவது ஆட்சேபகரமான காட்சிகள் இருந்தால் அதனை நீக்க சொல்லியிருப்பார்கள்.
ஆனால் அதிகாரியோ தன்னை வந்து பார்க்கச் சொல்கிறார் என்று குழப்பத்தில் ஆழ்ந்தாராம் கண்ணதாசன். அதன் பின் சென்சார் போர்டைச் சேர்ந்த உறுப்பினர்களில் நெருக்கமான ஒருவரை தனியாக அழைத்து,”என்ன விஷயம்?” என கேட்டிருக்கிறார் கண்ணதாசன்.
அதற்கு அவர், “படம் U செர்டிஃபிகேட்டுதான். சின்ன சின்ன காட்சிகளில் சில விஷயங்களை நீக்க வேண்டியது இருக்கிறது அவ்வளவுதான்” என கூறியிருக்கிறார். அதற்கு கண்ணதாசன், “இந்த விஷயத்தையா இவ்வளவு நேரம் கலந்துரையாடினீர்கள்?” என கேட்க, அதற்கு அவர் “இல்லை. ஒரு பாடலில் வந்த வரிகளை குறித்துத்தான் வெகு நேரம் விவாதித்துக்கொண்டிருந்தோம்” என கூறியிருக்கிறார்.
“என்ன பாடல்? என்ன வரி?” என கண்ணதாசன் கேட்க, அதற்கு அவர் ‘மாலையிட்டு மனமுடிச்சு’ என்று தொடங்கும் வளைகாப்பு பாடலில் ‘பள்ளியறையில் படிச்ச பாடம் பலனளிச்சாச்சு. புருஷன் பக்கம் இருந்து பேசும் பேச்சும் உருவம் கொண்டாச்சு’ என்று ஒரு வரி வருகிறதல்லவா.
இந்த வரிகள் உடலுறவை குறிக்கிறது எனவும் இது கொச்சையாக இருப்பதாகவும் ஒரு உறுப்பினர் கூறினார். அதற்கு பதிலளிக்கும் வகையில் சிலர் ‘ஆமாம். இந்த அர்த்தத்தில்தான் அவர் எழுதியிருக்கிறார். ஆனால் அது கொச்சையான வார்த்தைகள் இல்லை. அந்த வரிகளில் ஒரு மிகப்பெரிய இலக்கியத் தன்மை இருக்கிறது’ என கூறினார்கள். இவ்வாறு உறுப்பினர்களுக்குள் ஒரு பட்டிமன்றமே நடந்தது” என உள்ளே நடந்ததை கூறியிருக்கிறார்.
இவ்வாறு ஒரு பாடல் சென்சார் போர்டு உறுப்பினர்களை பட்டிமன்றமே நடத்த வைத்திருப்பது இதுதான் முதல்முறை எனவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நீச்சல் உடையில் ஊர்வசி… தயவு செஞ்சு அப்படி பண்ணிடாதீங்க!… தயாரிப்பாளரிடம் கெஞ்சிய சம்பவம்…