கண்ணதாசனுக்கு வந்த விபரீத ஆசை… “இதெல்லாம் உங்களுக்கு செட் ஆகாது”… எம்.எஸ்.வி கொடுத்த அட்வைஸ்…
கவியரசர் கண்ணதாசனும் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனும் மிகவும் நெருங்கி பழகி வந்தவர்கள். எம்.எஸ்.விக்கு மிகவும் ஆஸ்தான கவிஞராக கண்ணதாசன் திகழ்ந்தார். இருவரும் இணைந்து பல கிளாசிக் பாடல்களை உருவாக்கியுள்ளனர்.
இந்த நிலையில் ஒரு நாள் கண்ணதாசனுக்கு ஒரு விபரீத ஆசை ஒன்று எழுந்ததாம். இதனை எம்.எஸ்.வியிடம் கூற, அதற்கு எம்.எஸ்.வி கண்ணதாசனுக்கு அறிவுரை கூறி அந்த விபரீத ஆசைக்கு முற்றுப்புள்ளி வைத்தாராம். கண்ணதாசனுக்கு வந்த அந்த விபரீத ஆசை என்ன? என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
1961 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன், தேவிகா, ஜெமினி கணேசன், சாவித்திரி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “பாவ மன்னிப்பு”. இத்திரைப்படத்தை பீம் சிங் இயக்கியிருந்தார். விஸ்வநாதன்-ராமமூர்த்தி ஆகியோர் இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தனர்.
“பாவ மன்னிப்பு” திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களையும் கண்ணதாசனே எழுதியிருந்தார். குறிப்பாக இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “வந்த நாள் முதல் இந்த நாள் வரை” என்ற பாடல் மிகவும் பிரபலமான பாடலாகும். இப்பாடலை டி.எம்.சௌந்தர்ராஜன் பாடியிருந்தார்.
இந்த நிலையில் இத்திரைப்படத்தின் பாடல்களை எழுதி கொடுத்த கண்ணதாசன், “வந்த நாள் முதல்” பாடலை பாடவேண்டும் என மிகவும் விரும்பினாராம். இந்த விருப்பத்தை எம்.எஸ்.வியிடம் கூறியபோது எம்.எஸ்.வி அதிர்ச்சி அடைந்தாராம்.
அதன் பின் கண்ணதாசனிடம் “கவிஞரே, தமிழ் சினிமாவில் நீங்கள் மிகப்பெரிய கவிஞராக திகழ்கிறீர்கள். உங்கள் ரசிகர்கள் அனைவரும் உங்களை பிரம்மிப்பாக பார்த்து வருகிறார்கள். ஆதலால் உங்களுக்கு வந்த பாடல் பாடும் ஆசையால் உங்கள் புகழை நீங்கள் கெடுத்துக்கொள்ள வேண்டாம் என்பதால் நான் உங்கள் விருப்பத்தை மறுக்கிறேன்” என கூறினாராம். அதனை கண்ணதாசனும் புரிந்துகொண்டாராம். இந்த சம்பவம் இவர்களுக்குள் இருக்கும் நட்பின் புரிதலை காட்டுகிறது.