ரஜினியை வைத்து படம் எடுக்க ஆசைப்பட்ட கண்ணதாசன்... நடக்காமல் போனதுக்கு என்ன காரணம்?
நடிகர் ரஜினிகாந்த் வளர்ந்து வந்த நேரத்தில் அவரை வைத்து படமெடுக்க கவிஞர் கண்ணதாசன் ஆசைப்பட்டாராம்... அது ஏன் நடக்காமல் போச்சு..
1970-களின் பிற்பகுதியில் நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருந்தார். அபூர்வ ராகங்கள் அவருக்கு அறிமுகம் கொடுத்திருந்தாலும், மூன்று முடிச்சு படத்தில் அவர் காட்டிய ஸ்டைல் தமிழ் ரசிகர்களிடம் அவரைக் கொண்டு சேர்த்தது. அப்போது கண்ணதாசனின் மகள் திருமணம் வெகுவிமரிசையாக நடந்தது.
சென்னை தி.நகர் பாலாஜி திருமண மண்டபத்தில் நடந்த திருமணத்துக்கு தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினர். இந்தத் திருமணத்துக்கு நடிகர் ரஜினிகாந்தும் வந்திருந்தார். அவரை சூழ்ந்துகொண்ட ரசிகர்கள் மூன்று முடிச்சு படத்தில் அவர் சிகரெட்டைத் தூக்கிப் போட்டுப் பிடித்த காட்சியை ரசித்தத்தாகப் புகழ்ந்தனர். மேலும், அவரது ஸ்டைல் பிடித்திருந்ததாகவும் சொல்லிப் பாராட்டியிருக்கிறார்கள்.
சிகரெட்டைத் தூக்கிப் போட்டுப் பிடிக்கும்படி ரசிகர்கள் பலரும் கேட்டபோது, ஒவ்வொரு முறையும் சலிக்காமல் செய்து காட்டியிருக்கிறார். அப்போது கண்ணதாசன், தனது மகன் அண்ணாதுரையை அழைத்து, ரஜினியை காரில் கொண்டுபோய் விடு என்று சொல்லியிருக்கிறார். ஆனால், நானே போய்க்கிறேன் என்று ரஜினி மறுத்திருக்கிறார். 'அப்பா சொன்னார்’ என்று சொன்னதும்தான் ரஜினி காரிலேயே அமர்ந்தாராம். அப்போது 'ஐ லவ் கண்ணதாசன். ஐ லைக் கண்ணதாசன்’ என்று நெகிழ்ந்தாராம்.
கே.பாலச்சந்தர் இயக்கத்தில் ரஜினியை வைத்து ஒரு படம் தயாரிக்க வேண்டும் என்று கவிஞர் கண்ணதாசன் விருப்பப்பட்டாராம். இதை பாலச்சந்தரிடமும் சொல்லியிருக்கிறார். இதற்கான வேலைகள் ஆரம்பமானபோது திடீரென உடல்நலக் குறைவால் கவிஞர் கண்ணதாசன் உயிரிழந்தார். அப்போது, கண்ணதாசனுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன் என்று சொன்னாராம் இயக்குநர் பாலச்சந்தர்.
கண்ணதாசனின் மறைவால் ரஜினியை வைத்து படமெடுக்க வேண்டும் என்கிற அவரது கனவு நிறைவேறாமல் போனது. அதேபோல், பின்னாட்களில் ரஜினியை சந்தித்து படம் குறித்து கண்ணதாசனின் மகன் அண்ணாதுரை பேசியபோது, நிச்சயம் பண்ணலாம் என ரஜினியும் பச்சைக் கொடி காட்டியிருக்கிறார். ஆனால், ஒருசில காரணங்களால் கண்ணதாசன் குடும்ப நிறுவன தயாரிப்பில் ரஜினியால் நடிக்க முடியாமல் போனதாம்.