பாட்டு போட வரமால் தூங்கிவிட்ட எம்.எஸ்.வி.. பாட்டிலேயே கிண்டலடித்த கண்ணதாசன்....
எம்.ஜி.ஆர் சிவாஜி காலத்தில் தமிழ் திரையுலகில் பல பாடல்களை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன். காதல், தத்துவம், சோகம், நம்பிக்கை என அனைத்து சூழ்நிலைகளுக்கும் அழகாக, பொருத்தமாக, அர்த்தம் பொதிந்த பாடல்களை கண்ணதாசன் எழுதியுள்ளார். எம்.ஜி.ஆர், சிவாஜி பாடல்கள் என சொல்வது போல கண்ணதாசன் பாடல்கள் எனவும் ரசிகர்கள் பேசும் அளவுக்கு ரசிகர்களின் மனதில் அவர் இடம்பிடித்திருந்தார். குறிப்பாக விரக்தியில் அல்லது சோகத்தில் ஹீரோ பாடலை பாடுகிறார் எனில் அதற்கு பாட்டு எழுத கண்ணதாசனைத்தான் எழுது அழைப்பார்கள்.
கண்ணதாசனுக்கு ஒரு பழக்கமுண்டு. சூழ்நிலைக்கு தேவைப்பட்டால் தன் வாழ்வில் பார்த்தவை, கேட்டவை, தன்னிடம் மற்றவர்கள் பேசியது என இவைகளை வைத்தே பாடல்களை எழுதிவிடுவார். அதேபோல், தனது சொந்த வாழ்வில் தான் சந்திக்கும் பிரச்சனைகளையும் பாட்டில் கொண்டு வந்துவிடுவார். இதற்கு பல உதாரணங்கள் உண்டு.
இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் கண்ணதாசன் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார். அதேபோல், கண்ணதாசனுக்காக இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் எம்.எஸ்.வி ஆகியோர் காத்திருப்பார்கள். கண்ணதாசனோ பெரும்பாலும் தாமதமாகத்தான் பாடல் எழுத வருவார். எம்.ஜி.ஆர் நடிப்பில் 1963ம் வருடம் வெளியான திரைப்படம் ‘பெரிய வீட்டு பெண்’. இந்த படத்தில் எல்லா பாடல்களையும் கண்ணதாசனே எழுதியிருந்தார்.
இந்த படத்தில் பாட்டெழுத மட்டும் கண்ணதாசன் எல்லா நாளும் சீக்கிரமே வந்துவிட்டாராம். அப்படி அவர் வந்துவிட்ட போது எம்.எஸ்.வி வரவில்லை. என்னாச்சி என விசாரித்த போது முதல் நாள் இரவு ஒரு பாடல் ரிக்கார்டிங் செய்த போது தாமதமாகி விட்டது. எனவே அவர் தூங்கி கொண்டிருக்கிறார் என்பது கவிஞருக்கு தெரியவந்துள்ளது. அது ஒரு சோக பாடல் என்பதால் பாடலுக்கும் பொருத்தமாக அதே நேரம் எம்.எஸ்.வி தூங்கிவிட்டதையும் மனதில் வைத்து பாடலாக எழுதிய கண்ணதாசன் ‘அவனுக்கென்ன தூங்கி விட்டான்..அகப்பட்டவன் நான் அல்லவா’ என எழுதினாராம். அந்த பாடல் அப்படியே ஒலிப்பதிவும் செய்யப்பட்டது.