Cinema History
ராதிகாவுக்கும் இயக்குனர் பாக்யராஜிக்கும் இடையில் அப்படி என்ன மோதல்…?!
கிழக்கே போகும் ரயில் படத்தில் பாஞ்சாலியாக அறிமுகமானபோது தமிழ் சினிமாவில் ஆளுமையாக உருவெடுக்கப்போகிறார் என்பதை யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அப்போது அவருக்கு 15 வயது தான்.
லண்டனில் படிப்பை முடித்த கையோடு சினிமாவுக்கு வந்ததால் தமிழ் பேசவே சிரமப்பட்டவர் பிறகு தன்னை சினிமாவுக்காகவே செதுக்கிக் கொண்ட அத்தியாயம் ஆரம்பமானது. ஆக்ஷன், கிளாமர், காமெடி என பலதரப்பட்ட கேரக்டர்களிலும் முத்திரை பதித்தார். 80களில் தென்னிந்திய சினிமாவில் கனவு நாயகியாக வலம் வந்தவர் கமல், ரஜினி போன்ற உச்சநட்சத்திரங்கள் அனைவருடனும் ஜோடியானார்.
நீதிக்குத் தண்டனை, ஊர்க்காவலன், நானே ராஜா நானே மந்திரி, சிப்பிக்குள் முத்து, கிழக்குச் சீமையிலே என தன் ஹிட் படங்களில் ஹீரோயிசத்தையும் தாண்டி சிக்சர் அடித்து ஆடினார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து சினிமாவில் சிகரங்கள் பார்த்தார். சின்னத்திரையில் கால் வைத்த போது இவர் நிர்வாகத்திறனும் போட்டி போட்டு உழைத்தது.
வேதா நிறுவனத்தின் சிஇஓ வாக சித்தி தொடரில் தொடங்கிய ராதிகாவின் சின்னத்திரை பயணம் 19 ஆண்டுகளாக ஏறுமுகத்தில் இருக்கிறது. வாணி ராணியைத் தொடர்ந்து சரித்திர சீரியலில் சந்திரகுமாரியாக மிரட்டத் தயாராகி விட்டார் ராதிகா. பொதுவாக ஹீரோயின்களுக்கு 30 வயதில் விடை கொடுத்துவிடும் திரை சூழலில் மோஸ்ட் வாண்டட் ஆளுமையாகக் கம்பீரமாக பயணித்துக் கொண்டிருக்கிறார் ராதிகா என்றால் மிகையில்லை.
2018ல் அவள் விகடன் வழங்கிய விருது விழாவில் நடிகை ராதிகாவுக்குத் திரைத்தாரகை விருது வழங்கப்பட்டது. அந்த விழாவில் நடிகை ராதிகாவைப் பற்றி பாக்யராஜ் இவ்வாறு சொல்கிறார்.
ராதிகாவை முதன்முதலாக பார்த்த போது நம்பமுடியவில்லை. ராதிகா தான் பின்னால நிக்குது. நிக்குது நிக்குது நிக்குதுன்னாங்க. நான் எங்கெங்கயோ பார்த்துக்கிட்டு அப்புறம் பின்னால பார்க்குறேன். அப்புறம் அதுதான் அந்தப் பொண்ணு.
இந்த பத்மபூசணியான்னு கேட்டேன். அது வந்து ராதிகாவுக்கு கேட்டுருச்சு. எங்களுக்குள்ள அது ஒரு கோல்டு வார். நான் அப்படி சொல்லிட்டேன்கிறதால சின்ன கோபம் ஒண்ணு இருந்துக்கிட்டே இருந்தது.
அதனால நான் போய் டயலாக் சொல்லிக்கொடுத்தா டயலாக்க எல்லாம் கவனிக்கவே மாட்டாங்க. வேணும்னே அப்படி திரும்பி இது பண்ணுவாங்க..ஹேர் கரெக்ட் பண்ணுவாங்க. அப்படி டைரக்டர்கிட்ட நான் என்ன சொன்னாலும் எங்க இவரு என்கிட்ட சொல்லவே இல்லையே.
அவரு பாட்டுல வந்தாரு. அவரு பாட்டுல போயிட்டாருன்னு சொல்வாங்க. சோ அந்த மாதிரியல்லாம் இருந்தது. அப்புறம் ராதிகாவோட இது ஒவ்வொண்ணும் ஒவ்வொண்ணா பார்த்து இன்னைக்கு வரைக்கும் மலைச்சிப் பார்த்துக்கிட்டு இருக்கேன். இன்னும் இவ்ளோ சீக்கிரம் 40 வருஷமல்ல. விட்டா இன்னும் ஒரு 15….20 வருஷத்துக்கு அவங்களால சினிமாவுக்கு பெரிய சர்வீஸ் பண்ண முடியும்.
எந்தப்படத்திற்கு திரைக்கதை எழுதினாலும் ராதிகாவை நினைத்துக் கொண்டு தான் பாக்யராஜ் கதை எழுதுவாராம். அந்த அளவுக்கு ராதிகாவின் நடிப்பு அற்புதமானது. பொய்சாட்சி, இன்று போய் நாளை வா, தாவணிக்கனவுகள் ஆகிய படங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.
ராதிகாவின் முதல் படமான கிழக்கே போகும் ரயில் படத்திற்கு பாரதிராஜாவின் உதவி இயக்குனராக பாக்யராஜ் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.