கமல்ஹாசனை பிழிந்தெடுத்த கோவை சரளா!... ஒரு லெஜண்டுன்னு கூட பார்க்காம இப்படியா?
கோவை சரளாவின் கலகலப்பான கோயம்பத்தூர் பாஷை மிகவும் ரசிக்கும்படியாக இருக்கும். அந்த பாஷையில் ஒரு பாமரத்தனம் வெளிப்படும். இந்த நிலையில் கமல்ஹாசனுக்கு கோவை சரளா கோயம்பத்தூர் பாஷையை கற்றுக்கொடுக்க வேண்டிய ஒரு நிலையும் வந்தது.
சதி லீலாவதி
1995 ஆம் ஆண்டு கமல்ஹாசன், ரமேஷ் அரவிந்த், கோவை சரளா, கல்பனா, ஹீரா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “சதி லீலாவதி”. இத்திரைப்படத்தை பாலு மகேந்திரா இயக்கியிருந்தார். இத்திரைப்படம் முழுக்க முழுக்க காமெடி கலந்த டிராமா திரைப்படமாக அமைந்தது. இப்போதும் இத்திரைப்படம் ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது.
இதில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக கோவை சரளா நடித்திருந்தார். இருவரும் கோவை பாஷையில் பேசிக்கொள்ளும் வசனங்கள் மிக நகைச்சுவையாக இருக்கும். இதில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் கோவை சரளாதான் கமல்ஹாசனுக்கு கோவை பாஷையில் எப்படி வசனங்களை பேசவேண்டும் என கற்றுக்கொடுப்பாராம்.
கமல்ஹாசனுக்கு டீச்சராக ஆன கோவை சரளா
படப்பிடிப்புத் தளத்தில் தான் ஒரு லெஜண்டுக்கு சொல்லித்தருகிறோம் என்ற நினைப்பே ஒரு கட்டத்தில் இல்லாமால் போக, கமல்ஹாசனிடம் ஒரு ஆசிரியராக மிகவும் கண்டிப்பாக நடந்துகொள்வாராம் கோவை சரளா. அதன் பின் நாம் இப்படி நடந்துகொண்டோமே என்பதை உணர்ந்தவுடன் கமல்ஹாசனிடம் மன்னிப்பு கேட்பாராம். ஆனால் கமல்ஹாசன், “இதுதான் எனக்கு வேண்டும்” என கூறி பாராட்டுவாராம்.
அதே போல் கமல்ஹாசன் டப்பிங் பேசும்போது, அவருக்கு அருகே இருந்து கோவை சரளாதான் பயிற்சி கொடுப்பாராம். பாலு மகேந்திரா கூட இதில் தலையிட மாட்டாராம். “இது சரியில்லை, அது சரியில்லை” என கூறி மறுபடி மறுபடியும் கமல்ஹாசனை பேச வைப்பாராம் கோவை சரளா. ஒரு காட்சியில் கமல்ஹாசனின் கோவை பாஷை சரியாக வரவில்லை என்பதால் 15 முறை ஒன் மோர் கேட்டாராம் கோவை சரளா. ஆனால் கமல்ஹாசனோ எதற்கும் சளைக்காமல் அத்தனை முறையும் பேசினாராம். இந்த சம்பவத்தை சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் கோவை சரளா.
இதையும் படிங்க: சுந்தர் சி-யை ஏமாற்றிய மணிவண்ணன்?.. ஆனால் உண்மை காரணம் என்ன தெரியுமா?