சூப்பர் ஸ்டாருக்காக இசையமைத்த சூப்பர் ஹிட் பாடல்… மணிரத்னத்துக்கு அல்வா போல் தூக்கி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மான்…
கடந்த 2015 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான், நித்யா மேனன், பிரகாஷ் ராஜ் ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “ஓ காதல் கண்மணி’. “அலைபாயுதே” திரைப்படத்திற்குப் பிறகு மணிரத்னம் இயக்கிய சிறந்த காதல் திரைப்படமாக ‘ஓ காதல் கண்மணி” திரைப்படம் அமைந்தது.
துல்கர் சல்மான், நித்யா மேனன் ஆகியோரின் யதார்த்தமான நடிப்பு, இளைஞர்களை பெரிதும் கவர்ந்திழுத்தது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் வேற லெவலில் ஹிட் ஆனது.
“மென்ட்டல் மனதில்”, “மலர்கள் கேட்டேன்”, “சினாமிகா” என அனைத்து பாடல்களும் மனதை வருடும் பாடல்களாக அமைந்தன. மணிரத்னம் திரைப்படங்களில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை மிகவும் பிரத்யேகமாக இருக்கும் என பல பேச்சுக்கள் அடிபடுவது உண்டு. எனினும் அந்த வதந்திகள் உண்மை என்பது போல் “ஓ காதல் கண்மணி” திரைப்படத்தில் தனது சிறந்த இசையமைப்பை வெளிப்படுத்தி இருந்தார் ஏ.ஆர்.ரஹ்மான்.
இந்த நிலையில் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “நானே வருகிறேன்” என்ற பாடல் ரசிகர்களால் பரவலாக ரசிக்கப்பட்ட பாடலாக அமைந்தது. காதல் நயம் சொட்ட சொட்ட ஊறிய வரிகளால் உருவாக்கப்பட்ட இப்பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் “ஓ காதல் கண்மணி” திரைப்படத்திற்காக உருவாக்கவில்லை என்பதுதான் இதில் இருக்கும் டிவிஸ்ட்.
அதாவது கடந்த 2014 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், அனுஷ்கா, சோனாக்சி சின்ஹா ஆகியோரின் நடிப்பில் வெளியான “லிங்கா” திரைப்படத்திற்காகத்தான் ஏ.ஆர்.ரஹ்மான் இப்பாடலை உருவாக்கினாராம். ஆனால் “லிங்கா” திரைப்படத்தின் இயக்குனரான கே.எஸ்.ரவிக்குமார் “இப்பாடல் மிகவும் நன்றாக இருக்கிறது. ஆனால் இது இத்திரைப்படத்திற்கு ஏற்ற பாடல் அல்ல” என்று கூறி இப்பாடலை மறுத்துவிட்டாராம். இதனை தொடர்ந்துதான் “ஓ காதல் கண்மணி” திரைப்படத்தில் இப்பாடலை பயன்படுத்திக்கொண்டாராம் ஏ.ஆர்.ரஹ்மான்.
அதாவது கே.எஸ்.ரவிக்குமார் வேண்டாம் என்று ஒதுக்கிய பாடலை, ஏ.ஆர்.ரஹ்மான் மணிரத்னத்திற்கு அல்வா போல் தூக்கி தந்து ஹிட் பாடலாக ஆக்கியுள்ளார்.