குடியிருந்த கோயில் படத்துல இதெல்லாம் கவனிச்சீங்களா? அப்பவே இவ்ளோ ஸ்பெஷலா?

kudiyiruntha koil
1968ல் எம்ஜிஆர் நடிப்பில் கே.சங்கர் இயக்கிய படம் குடியிருந்த கோயில். எம்எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்துள்ளார். ஜெயலலிதா, எல்.விஜயலட்சுமி, நம்பியார் உள்பட பலர் நடித்துள்ளனர்.
குடியிருந்த கோயில் படத்தில் பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன. இந்தப் படத்திற்கு அந்தக் காலத்திலேயே ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு இருந்தது. இப்போது இந்தப் படத்தில் நாம் கவனிக்க மறந்த சில விஷயங்களைப் பற்றிப் பார்ப்போம்.
படத்தில் டைட்டில் கார்டில் முதலில் ஜெயலலிதாவின் பெயர் தான் வரும். அதன்பிறகு புரட்சி நடிகர், மக்கள் திலகம் என்று எம்ஜிஆர் இரட்டை வேடத்தில் நடித்ததை வித்தியாசமான டைட்டில் கார்டாகப் போட்டு அசத்தி இருப்பார்கள். ஓபனிங் சீனே எம்ஜிஆர் ஓட்டைப் பிரித்தபடி குதிப்பதுதான். தொடர்ந்து பைட். அப்படி ஒரு புதுமையான காட்சி அந்தப் படத்தில் வந்தது.
படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பையனின் பெயர் சேகர். இவர் இள வயது எம்ஜிஆராக நடித்தார். கவிஞர் புலமைப்பித்தன் முதன்முதலாக பாடல் எழுதியது இந்தப் படத்தில் தான். நான் யார் நான் யார் என்ற அந்தப் பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது.
ஆடலுடன் பாடலைக் கேட்டு என்ற பாடலில் பாங்க்ரா நடனம் இடம்பெற்றது. அந்த வகையில் பாங்க்ரா நடனம் இடம்பெற்ற முதல் தமிழ் படம் இதுதான். இந்தப் பாடலுக்காக ஒரு மாதம் எம்ஜிஆர் நடனப் பயிற்சி பெற்றாராம். பாடலில் விஜயலட்சுமியுடன் சேர்ந்து பம்பரம் போல சுழன்று சுழன்று ஆடி அசத்தி விடுவார்.
படத்தில் வரும் துள்ளுவதோ இளமை பாடல் கல்லூரி விழாக்களில் தவறாமல் இடம்பெற்றது. இஸ்லாமிய பெண் கவிஞர் ரோஷானரா பேகம் தான் குங்குமப் பொட்டின் மங்களம் பாடலை எழுதினார்.
அப்போது சிவாஜி 3 வேடம் போட்டு பிரபலமானார். எம்ஜிஆர் 2 வேடங்களை ஏற்று பல படங்களில் பிரபலமானார். இந்தப் படம் வெளியான போது சென்னையில் மட்டுமே 9 லட்சத்துக்கும் மேல் வசூல் செய்ததாம். 20 திரையரங்குகளில் 50 நாள்களுக்குமேல் ஓடி சாதனை படைத்த படம்.
இது இந்தியில் சுமார் ஹிட் அடித்த சைனா டவுன் படத்தின் ரீமேக்தான். ஆனாலும் தமிழில் கே.சங்கர் சிறப்பாக இயக்கி மாபெரும் ஹிட்டாக்கி உள்ளார். இனிமையான பாடல்கள், சண்டைக்காட்சிகள் என ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தைப் பெற்றது குடியிருந்த கோயில்.
படத்தில் இடம்பெற்ற உன் விழியும் என் வாளும் சந்தித்தால் என்ற பாடலை தமிழில் டிஎம்எஸ் பாடியிருந்தார். தெலுங்கு டப்பிங்கில் எஸ்பிபி. பாடி இருந்தார். எம்ஜிஆர் எஸ்பிபி வாய்ஸை அப்போது தான் முதலில் கேட்டுள்ளார்.