Cinema History
யார் சிறந்த நடிகர்!. சிண்டு மூட்டிவிட்ட பத்திரிக்கை!. எம்.ஜி.ஆரும் – சிவாஜியும் என்ன பண்ணாங்க தெரியுமா?!..
50,60களில் திரையுலகில் போட்டி நடிகர்களாக இருந்தவர்கள் எம்.ஜி.ஆரும், சிவாஜியும்தான். அப்போது ஜெமினி கணேசன், ஜெய் சங்கர் என பல நடிகர்கள் இருந்தாலும் போட்டி என்னவோ அது எம்.ஜி.ஆர் – சிவாஜிக்கும் இடையே மட்டும்தான். எம்.ஜி.ஆர் மக்களுக்காக பாடுபடும், அவர்களுக்காக போராடும் ஏழை பங்காளனாக நடிப்பார். சிவாஜியோ குடும்ப, செண்டிமெண்ட் காட்சிகள் நிறைந்த சோக படங்களில் நடிப்பார்.
எம்.ஜி.ஆர் மாஸ் காட்டினால், சிவாஜி நடிப்பு திறமையை காட்டி ரசிகர்களை கவர்ந்தார். இருவருக்கும் தனிப்பட்ட ரசிகர்கள் இருந்தனர். அதேநேரம் இருவருக்குள்ளும் ஆரோக்கியமான போட்டிதான் இருந்தது. அதேபோல், இருவரும் அண்ணன் – தம்பி போல் பாசமாக பழகி வந்தனர்.
தனக்கு ஆக்ஷன் கதைகள் வந்தால் ‘இதை அண்ணன் செய்தால் மட்டுமே நன்றாக இருக்கும்’ என சிவாஜி சொல்வார். அதேபோல், குடும்ப, செண்டிமெண்ட் காட்சிகள் கொண்ட கதை வந்தால் ‘இது தம்பி கணேசன் செய்தால்தான் சரியாக இருக்கும்’ என எம்.ஜி.ஆர் சொல்வார். எங்கே, எப்போது சந்தித்துக்கொண்டாலும் எம்.ஜி.ஆரும், சிவாஜியும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து அன்பை பகிர்ந்துகொள்வார்கள்.
1957ம் வருடம் குமுதம் பத்திரிக்கை எம்.ஜி.ஆர் – சிவாஜி ரசிகர்களிடையே ஒரு போட்டி வைத்தது. அதில், எம்.ஜி.ஆர் – சிவாஜி ஆகியோரின் நடிப்பை ஒப்பிட்டு கட்டுரை எழுதுமாறு கூறப்பட்டிருந்தது. இதைப்பார்த்த எம்.ஜி.ஆர் குமுதம் பத்திரிக்கைக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில் ‘இது அருவறுக்கத்தக்க செயல், இதனால் ரசிகர்களுக்கோ, திரையுலகினருக்கோ எந்த லாபமும் இல்லை. மேலும், ரசிகர்களுக்கும், நடிகர்களுக்கும் இடையே இருக்கும் நல்லுறவை இது பாழாக்கிவிடும். தம்பி சிவாஜியும் இதே கருத்தைத்தான் கொண்டிருப்பார் என நம்புகிறேன். வியாபார நோக்கத்தில் பத்திரிக்கை தர்மத்தை பழியிட வேண்டாம்’ என கண்டித்து எழுதியிருந்தார்.
சிவாஜியும் தனது கண்டனத்தை பதிவு செய்தார். ‘ உங்கள் போட்டி எங்கள் இருவருக்கும் இடையே வருந்ததக்க விளைவுகளை ஏற்படுத்தும். எங்கள் இருவரின் ரசிகர்களுக்கு இடையே நீங்கள் கொண்டு வரும் இந்த போட்டியை நான் வெறுக்கிறேன்’ என அவர் கூற குமுதம் பத்திரிக்கை இந்த போட்டியை கைவிட்டது.
இதையும் படிங்க: சிவாஜி – எம்.எஸ்.வி இடையே வந்த சவால்!.. வந்ததோ ஒரு சூப்பர் மெலடி!.. அட அந்த பாட்டா?!..