ஆங்கிலப்படத்தின் கதை தமிழில் சக்கை போடு போட்டது...காரணம் யார் தெரியுமா? பிச்சி உதறிய குட்டிபத்மினி
குழந்தையும் தெய்வமும் படம் ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில் 1965ல் வெளியானது. எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்திருந்தார். கிருஷ்ணன், பஞ்சு இயக்கினர். ஜெய்சங்கர், ஜமுனா, குட்டிபத்மினி, வரலெட்சுமி, நாகேஷ், மேஜர் சுந்தரராஜன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
படத்தில் கோழி ஒரு கூட்டிலே, அன்புள்ள மான் விழியே, நான் நன்றி சொல்வேன், ஆஹா இது நல்லிரவு, குழந்தையும் தெய்வமும், பழமுதிர் சோலையிலே ஆகிய முத்து முத்தான பாடல்கள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன.
இந்தப்படம் உருவான விதம் சுவாரசியமானது. அந்தத் தகவல்களை ஏவிஎம் சரவணன் தருகிறார்...பாருங்கள்.
பேரன்ட் ட்ராப் என்ற ஆங்கிலக்கதையின் தழுவல் தான் இந்தப்படம். அந்தப் படத்தை என் சகோதரர் குமரன் பார்த்து விட்டு நல்ல படம். நாம பண்ணலாம் என்று யோசனை சொன்னார்.
எங்களையும் படம் பார்க்க வேண்டும் என்றார். நாங்கள் அந்தப் படத்தைப் பார்த்தோம். ஆனால் எங்களுக்கு அந்தக் கதையில் உடன்பாடு இல்லை.
ஏன்னா அந்தக் காலத்துல விவாகரத்தை தமிழ் ரசிகர்கள் அவ்வளவு சீக்கிரத்தில் ஏற்க மாட்டாங்கன்னு நினைச்சோம். ஆனால் இந்தப் படத்தை எடுக்கணும் என்பதில் குமரன் உறுதியாக இருந்தார்.
ஜாவர் சீதாராமனைப் படம் பார்க்கச் சொல்லி இதை இந்தியாவுக்கு ஏற்ப மாற்றம் செய்ய முடியுமா என்று முயன்று பார்க்கச் சொன்னோம்.
எந்தக் கதையையும் நமது இந்தியச் சூழ்நிலைக்கு ஏற்ப அற்புதமாகத் திரைக்கதை அமைத்துத் தருவதில் வல்லவர் ஜாவர் சீதாராமன். அவருக்கு இணை யாரும் இல்லை என்பதே என் கருத்து.
ஜாவர் அந்தக் கதையை நமது சமுதாயச் சூழலுக்கு ஏற்ப மிக அழகாக மாற்றி அமைத்தார். ஆங்கிலப்படத்தில் விவாகரத்து பெறும் காட்சி மிகவும் முரட்டுத்தனமாக இருந்தது போல காட்டப்பட்டது. ஆனால் அதை மிகவும் மென்மையாக ஜாவர் சீத்தாராமன் மாற்றித் தந்தார்.
படத்தின் கிளைமாக்ஸ் சீகம்பட்டி ராஜகோபால் என்ற எழுத்தாளர் எங்களுக்கு எழுதிக் கொடுத்தார். கிளைமாக்ஸ் காட்சியை பழனியில் எடுத்தோம்.
குட்டி பத்மினி அந்தப் படத்தில் மிகச்சிறப்பாக நடித்து தாய்மார்களின் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்றார். கோழி ஒரு கூட்டிலே என்ற பாடல் அந்தப் படத்தில் மிகவும் பிரபலமாகிப் புகழ் பெற்றது.
குழந்தையும் தெய்வமும் படத்தை லேத்த மனசுலு என்ற பெயரில் தெலுங்கில் எடுத்தோம். கிளைமாக்ஸ் காட்சியை திருப்பதியில் படமாக்கினோம். இந்தப் படத்தோட ஸ்பெஷல் என்னன்னா படம் முழுவதும் பிளாக் அண்ட் ஒயிட். கிளைமாக்ஸ் மட்டும் கலர்.
இந்தப் படத்தில் குட்டி பத்மினியின் நடிப்பு செம மாஸ். துடுக்குத்தனம், சுட்டித்தனம் நிறைந்த இந்தக் குழந்தை படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளது. இதற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதும் கிடைத்தது.