கமல் சொன்ன தமிழ்சினிமாவின் பொற்காலம் எது தெரியுமா? அடடே அப்படியா சொன்னாரு ஆண்டவரு...?

by ராம் சுதன் |

34 வருடங்களுக்கு முன்பு கமல் பேசியது இன்றும் நம் நெஞ்சில் பசுமையாக உள்ளது. கடமை கண்ணியம் கட்டுப்பாடு படத்தின் வெற்றி விழா தான் அது. 1987ல் நடந்தது. இந்த விழாவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவாஜி என்னும் அந்த மாபெரும் கலைஞனை இந்த மேடையிலும் வணங்குகிறோம். இன்று நான் பலமுறை சொன்னதை மறுபடியும் இந்த மேடையில் சொல்கிறேன். பராசக்தி என்ற படத்துக்குப் பிறகு தமிழில் நடிக்க வந்த எந்த ஒரு நடிகனுக்கும் இந்த நடிகரின் சாயல் இல்லாமல் இருக்காது. இல்லை என்று சொல்பவர்கள் அதை உணராதவர்கள். இல்லையேல் அப்பட்டமாக பொய் சொல்பவர்கள். இதை உணர்ந்திருக்கிறோம்.

பொய் சொல்ல வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. என்னைப் பார்த்து இன்னொரு வருங்கால நடிகன் நடிப்பானே ஆகில் அதிலும் இவருடைய வேர் இருக்கிறது. காரணம் நாங்கள். இதில் எங்களுக்கு ஒரு பயமும் இல்லை. வெட்கமும் இல்லை. இது எங்களை நாங்களே கௌரவித்துக் கொள்ளும் ஒரு விதம். நடிகர் சிவாஜி கணேசனின் அங்க அசைவுகள் இன்று என்னிலும் தெரிகிறது.

ரஜினிகாந்த், சத்யராஜ், பாக்கியராஜ் என எல்லாரிடமும் தெரிகிறது. இந்த விழா மெதுவாக அவரது பாராட்டு விழாவாக மாறி வருகிறது. அதுவும் எனக்குத் தெரிகிறது. இருந்தாலும் உண்மை பேசாமல் இருக்க முடியாது. நல்ல சில உண்மைகளை அவர் சொன்ன போது அதற்கு நன்றி சொல்வதாக நான் நினைக்கவில்லை.

நாங்கள் சொல்ல வேண்டியதை மறந்துவிட்டதால் ஞாபகப்படுத்தியது போல் எனக்குத் தோன்றியது. இந்த மாபெரும் கலைஞன் இன்று எங்கள் மத்தியில் இருப்பது தான் பொற்காலம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1987ல் சந்தான பாரதியின் இயக்கத்தில் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் நிறுவனம் தயாரித்த படம் கடமை கண்ணியம் கட்டுப்பாடு. இதில் சத்யராஜ், கீதா, கேப்டன் ராஜூ உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜா இசை அமைத்து இருந்தார். இந்தப் படம் அப்போது மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. கமல், சத்யராஜை வைத்து எடுத்த சொந்தப் படம் இதுதான்.

Next Story