சில தினங்களுக்கு முன் இயக்குனரும் நடிகருமான பாரதிகண்ணன் நடிகர் கார்த்திக்கை பற்றி பேசியது இணையத்தில் வைரலானது. ஆனால் இப்போது அப்படி பேசியது நான் செய்த தவறு என ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். இதோ அவர் கூறியது:
அவருடைய அசாத்திய திறமை, அவருடைய கொஞ்சும் தமிழை ரசிப்பதற்கான ஒரு கூட்டம், நியாயமான அழகன், பெண்களுக்கு பிடிக்கும் மாதிரியான தோற்றம், அசாத்திய திறமை கொண்டவர் கார்த்திக். பிரபு சாலமன் கூட கார்த்திக்கை பற்றி சொல்லும் பொழுது சிங்கிள் ஷாட்டில் எவ்வளவு பெரிய சீனாக இருந்தாலும் நடித்து விடுவார் என்று கூறியிருந்தார்.
ஆனால் நான் பேசியது இந்த அளவு பெரிய அளவில் விமர்சனம் ஆகும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. காமெடியாக சொன்னது. அந்த நேரங்களில் 10 லட்சம் கொடுத்தோம். வாங்க முடியவில்லை. அந்த நேரத்தில் அது வலியாக இருந்திருக்கலாம். பத்து வருடங்களுக்கு மேலாகி விட்டது. அந்த வலி எல்லாம் மறந்து போச்சு. மறைந்தும் போய்விட்டது.
சரி அந்த சம்பவத்தை இப்படி எல்லாம் நடந்தது என்று சொல்லலாமே என நினைத்து தான் கொஞ்சம் காமெடியாகவும் சொன்னேன். ஒரு வகையில் தவறுதான் .அவ்வளவு பெரிய ஒரு நடிகர். அவருடைய ரசிகர்களையும் காயப்படுத்துவது போல அது மாறிவிட்டது. திருநெல்வேலி, ராஜபாளையம், சங்கரன் கோயில் என அவருடைய ரசிகர் மன்றங்களில் இருந்து எனக்கு போன் செய்தார்கள்.
என்ன அண்ணே இப்படி பண்ணி விட்டீர்கள் என்று கேட்டார்கள். மிரட்டலையே ஒரு சாஃப்ட்டாக ஹேண்டில் செய்தார்கள். சாஃப்ட்டாக மிரட்டினார்கள் என்றும் சொல்லலாம். கார்த்திக்கை பற்றி சொல்லணும்னா பழைய மாதிரிலாம் இல்லாம புது மனுஷனா வரணும். மறுபடியும் நடிக்கணும். அவர் நடிப்பதை பார்க்க நிறைய கூட்டம் காத்துக் கொண்டிருக்கிறது.
காலத்தின் கட்டாயம். ஜாதகத்தில் அப்படி இருந்திருக்கும் என நினைக்கிறேன். மறுபடியும் அவருடைய ஜாதக அமைப்பு எல்லாம் மாறி நடிக்க வரவேண்டும். பெரிய விஸ்வரூபம் எடுக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். அரசியல் மற்றும் சினிமாவில் பெரிய வாழ்க்கையே இருந்தது. ஆனால் எல்லாவற்றையும் அவர் மிஸ் செய்து விட்டார்.

இந்த இரண்டையும் பயன்படுத்தி ஒரு நல்ல நடிகனாக அரசியலில் நல்ல தலைவராக மீண்டும் உருவெடுக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். தமாஸா சொல்லணும்னுதான் கார்த்திக்கின் மாடுலேஷனில் அவர் வாய்ஸை மிமிக்ரி செய்து பேசினேன். இவ்வளவு சீர்யஸ் ஆகும் என நான் நினைக்கவில்லை.
நான் பேசியதை பார்த்துவிட்டு நடிகர் பிரபு மற்றும் ராதாரவி ஆகியோர் வருத்தப்பட்டனர். குறிப்பாக ராதாரவி என்னிடம் பேசும் போது , ‘பாரதி.. என்ன இருந்தாலும் நீங்களும் நடிக்கிறீங்க. அவரும் ஒரு பெரிய நடிகர். சாதனை படைத்த நடிகர். நிறைய பேருக்கு உதவியும் செய்திருக்கிறார். வாசு இறந்தப்போ கூட கார்த்திக்தான் பண உதவி செய்தார். இனிமேல் கார்த்திக்கை பற்றி இப்படிலாம் பேசவேண்டாம்’ என்று ராதாரவி கூறினாராம்.