கமல் பட டைரக்டருக்கு வந்த சிக்கல்... ரணகளத்தையும் அதகளமாக்கிய கலைஞர்
டி.என்.பாலுவின் இயக்கத்தில் கமல் கதாநாயகனாக நடித்த சட்டம் என் கையில் படத்தின் 100வது நாள் விழா சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் அமைந்துள்ள உட்லண்ட்ஸ் ஓட்டலில் நடைபெற்றது.
அந்தக் காலகட்டத்தில் ஆட்சியாளராக இருந்த புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கும், இயக்குனர் டிஎன்.பாலுவுக்கும் பல கருத்து வேறுபாடு இருந்தது. அதனால அவரைக் கைது செய்வதற்காக காவல்துறையினர் அவரைத் தேடிக் கொண்டு இருந்தனர்.
அப்படி ஒரு சூழ்நிலையில் தான் டிஎன்.பாலுவின் இயக்கத்தில் உருவான சட்டம் என் கையில் படத்தின் 100வது நாள் விழா கலைஞர் கருணாநிதியின் தலைமையில் நடைபெற்றது. அந்த விழாவில் டிஎன்.பாலுவைக் கைது செய்தால் நிச்சயமாக பிரச்சனை ஆகிவிடும் என்று காவல்துறையினர் நினைத்தனர்.
அதனால் விழா முடிந்த பிறகு அவரைக் கைது செய்யலாம் என காத்திருந்தனர். விழாவில் கமல் நன்றியுரை பேசியதற்குப் பின் கலைஞர் பேசுவதாக ஏற்பாடு ஆகி இருந்தது.
கமல் தனது நன்றியுரையை முடித்து விட்டு மேடையைப் பார்த்தார். பக்கத்தில் டிஎன்.பாலுவைக் காணவில்லை. பின்னாலே பேச வந்த கலைஞர் சட்டம் என் கையில் படத்தை தயாரித்து இயக்கிய நண்பர் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு போய் விட்டார் என்று தன் பேச்சின் நடுவிலே குறிப்பிட்டார். அவர் அப்படி பேசிய பின்பு தான் அங்கிருந்த காவல்துறையினருக்கு டிஎன்.பாலு தப்பி ஓடிவிட்டார் என்பது தெரிந்தது.
இப்படி எந்த மேடையிலும் தன்னுடைய கருத்துகளை வித்தியாசமாக எடுத்துச் சொல்வதிலே கலைஞருக்கு நிகர் கலைஞர் தான்.
மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.