இப்படியே போனா நாமம்தான்!.. ஆர்வம் காட்டாத கமல்!. அப்செட்டில் ஷங்கர்!. இந்தியன் 2 ஹிட் அடிக்குமா?!
Indian2: 28 வருடங்களுக்கு முன்பு இந்தியன் படம் வெளியான நிலையில் இப்போது இந்தியன் 2 படம் வெளியாகவுள்ளது. லைக்கா தயாரிப்பில் ஷங்கர் இயக்க கமல்ஹாசன் மீண்டும் இந்தியன் தாத்தாவாக நடித்திருக்கிறார். முதல் பாகத்தில் அப்பா, மகன் என இரட்டை வேடத்தில் கமல் நடித்த நிலையில் இப்படத்தில் இந்தியன் தாத்தாவாக மட்டுமே படம் முழுக்க நடித்திருக்கிறார்.
இன்று நாடு இருக்கும் நிலையில், அரசியல் இருக்கும் நிலையில் இந்தியன் தாத்தா மீண்டும் வந்தால் என்ன ஆகும் என்பதை கற்பனை செய்து இப்படத்தை இயக்கி இருக்கிறார் ஷங்கர். இந்தியன் படத்தில் தமிழ்நாட்டில் உள்ள அரசு அதிகாரிகளை மட்டுமே களையெடுத்தார் இந்தியன் தாத்தா. ஆனால், இந்த படத்தில் இந்தியா முழுவதும் உள்ள ஊழல்வாதிகளை களையெடுப்பது போல கதை அமைத்திருக்கிறார் ஷங்கர்.
இந்த படத்தில் சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்திருக்கும் இந்தியன் 2 படம் வருகிற 12ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், இந்த படம் தொடார்பான எதிர்மறையான பல விஷயங்கள் நடந்து வருகிறது. முதலில், அனிருத்தின் இசையில் உருவான பாடல்கள் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. இந்தியன் படத்தில் ரஹ்மான் கொடுத்த இசை போல இல்லை என பலரும் சொல்லிவிட்டனர்.
இந்த கேள்வியை ஒரு பத்திரிக்கையாளர் கமலிடமே கேட்டார். அதற்கு ‘அனிருத் என்பது ஷங்கரின் என் முடிவு. எனக்கு இளையராஜாவும், ரஹ்மானும் பிடிக்கும். எதிர்காலத்தில் அனிருத்தையும் பிடிக்க வாய்ப்பிருக்கிறது என பதில் சொன்னார். இதைப்பார்க்கும்போது அவருக்கும் இந்தியன் 2 பாடல்கள் பிடிக்கவில்லை என்றே தெரிகிறது.
ஒருபக்கம், ‘இந்தியன் 2-வை விட இந்தியன் 3-ஐ நான் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்’ என சொல்லி இருக்கிறார். இப்படத்தில் நடித்திருக்கும் எஸ்.ஜே.சூர்யாவும் ஊடகத்தில் பேட்டி கொடுத்தபோது ‘இந்தியன் 2-வில் நான் வரும் காட்சிகள் குறைவு. இந்தியன் 3-வில் எனக்கு அதிக காட்சிகள் இருக்கும். அதகளம் செய்திருக்கிறேன்’ என சொன்னார்.
இப்படி கமலும், எஸ்.ஜே.சூர்யாவும் இந்தியன் 3 பற்றியே புரமோஷன் செய்தால் இந்தியன் 2 என்னாவாகும் என தெரியவில்லை. ஒருபக்கம், கமலுக்கும், ஷங்கருக்கும் இடையே சரியான கெமிஸ்ட்ரி இல்லை. அதனால்தான் இருவரும் சேர்ந்து புரமோஷன் செய்யவில்லை எனவும் சிலர் பேச துவங்கிவிட்டனர். சிலரோ ‘அப்படி எல்லாம் ஒன்றுமில்லை. இந்தியன் 2 ஹிட் அடிக்கும்’ என சொல்கிறார்கள்.
இந்தியன் 2 ரசிகர்களை கவருமா என்பது ஜூலை 12ம் தேதி தெரிந்துவிடும்.