விஜயகாந்த்:
நாளை விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை தேமுதிக கட்சி சார்பாக பிரேமலதா அவருடைய தொண்டர்கள் நிர்வாகிகளுடன் சேர்ந்து கொண்டாட இருக்கின்றார். அதற்கான வேலைகள் தடபுடலாக அவருடைய மண்டபத்தில் நடந்து வருகிறது. நூற்றுக்கணக்கான அரிசி பைகள் வந்து இறங்கி இருக்கிறது. நாள்தோறும் விஜயகாந்த் நினைவிடத்தில் அன்னதானமும் நடந்து வருகிறது. விஜயகாந்த் ஏன் அன்னதானத்திற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்ற ஒரு கேள்விக்கு பிரேமலதா விஜயகாந்த் சில தகவல்களை பகிர்ந்திருக்கிறார்.
அவர் மதுரையில் ரைஸ்மில் வைத்திருக்கும் காலத்தில் இருந்தே அனைவரும் நல்ல முறையில் சாப்பிட வேண்டும். ஒரு ஜான் சோத்துக்கு தானே இந்த அளவு பாடுபடுகிறோம். அதனால் எத்தனை பேர் சாப்பாடு இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள் என்பதை புரிந்து கொண்ட விஜய்காந்த் அன்னதானம் என்பதை கையில் எடுத்து இன்றுவரை அதை சிறப்பாக நடத்தி வந்தார். அவர் மறைவிற்குப் பிறகும் நாங்கள் அதை நடத்தி வருகிறோம் .
நாள்தோறும் சாப்பாடு:
இது எங்கள் தலைமுறை இருக்கும் வரை தொடர்ந்து கொண்டே இருக்கும். எங்கள் வீட்டிலும் சரி அலுவலகத்திலும் சரி மண்டபத்திலும் சரி படப்பிடிப்பு தளத்திலும் சரி அனைவரும் வயிறார சாப்பிட வேண்டும் என எண்ணுபவர் கேப்டன் விஜயகாந்த். அவருடைய படப்பிடிப்பு என்றால் எங்கள் வீட்டில் இருந்து தினமும் 20 பேருக்கு தேவையான சாப்பாடு எடுத்துச் செல்லப்படும். தனக்கு பரிமாறும் உணவை தான் மற்றவர்களுக்கும் கொடுக்க வேண்டும் என எண்ணுபவர் விஜயகாந்த்.
அவருக்கு மீன் குழம்பு என்றால் மிகவும் பிடிக்கும். இதுதான் சாப்பிட வேண்டும் இது சாப்பிடக்கூடாது என்றெல்லாம் அவருக்கு கிடையாது. எல்லா வகையான உணவுகளையும் அவர் சாப்பிடுவார். அது மட்டுமல்ல இது நாள் வரை அவர் ஒரு முறை கூட பைவ் ஸ்டார் ஹோட்டல் சென்று சாப்பிட்டதே கிடையாது. அவ்வளவு எளிமையான மனிதர் விஜயகாந்த் .பழையசோறு கொடுத்தாலும் அதுவும் அன்பாக கொடுத்தால் போதும். அதை மகிழ்ச்சியாக வாங்கிக்கொண்டு சாப்பிட கூடியவர் நம் கேப்டன் விஜயகாந்த்.
அன்னதானம் தொடரும்:
அதனால் அவருக்காகவே அவர் மறைவிற்கு பிறகும் கூட இந்த அன்னதானத்தை நாங்கள் தொடர்ந்து வருகிறோம். யாரும் சாப்பாடு இல்லை என்று சொல்லக்கூடாது என்ற வகையில் தடையில்லாமல் செய்து கொண்டு வருகிறோம். இதை அவருடைய தொண்டர்களும் நிர்வாகிகளும் அந்தந்த மாவட்டங்களிலும் செய்து வருகின்றனர். அதனால் நீங்களும் ஒரு ஐந்து பேருக்காவது வயிறார சாப்பாடு போட்டு பாருங்கள். அதில் கிடைக்கும் ஆனந்தம் வேறு எதிலும் கிடையாது என கூறினார் பிரேமலதா விஜயகாந்த்.
இந்த நிலையில் விஜயகாந்துக்கு சமைக்க தெரியுமா என்ற ஒரு கேள்விக்கு பதில் அளித்த பிரேமலதா விஜயகாந்த் அவருக்கு சமைக்க தெரியாது. ஆனால் வீட்டுக்கு யாராவது சாப்பிட வந்தால் என்னை தோசை சுட சொல்லி அந்த தோசையை வாங்கிக்கொண்டு அவரே பரிமாற வேண்டும் என நினைப்பார். அதுதான் அவருக்கு மிகவும் பிடிக்கும் என கூறி இருக்கிறார்.
