எதற்காக விடாமுயற்சி படம்?.. வேறலெவல் அஜித்தை பார்ப்பீங்க!. ஹைப் ஏத்தும் மகிழ்திருமேனி!..

Vidaamuyarchi: துணிவு படம் வெளியாகி சரியாக இரண்டு வருடங்கள் முடிந்துவிட்டது. விடாமுயற்சி படம் துவங்கப்பட்டு ஒரு வருடம் ஆகிவிட்டது. பொங்கலுக்கு வெளியாகிறது என சொல்லி அதன்பின் பின் வாங்கிவிட்டது லைக்கா. இந்நிலையில், ஒரு வார இதழுக்கு இப்படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனி பேட்டி கொடுத்திருக்கிறார். இதில் இப்படம் தொடர்பான பல விஷயங்களை அவர் பேசியிருக்கிறார். அது என்னன்னு பார்ப்போம் வாங்க..
மகிழ் திருமேனி: திடீரென ஒரு நாள் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா எனக்கு போன் செய்து ‘இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?’ எனக்கேட்டார். ‘அடுத்த படத்திக்கு இன்னும் கதை எழுதவில்லை’ என்று சொன்னேன். ‘நீங்கள்தான் அஜித் சார் நடிக்கும் படத்திற்கு இயக்குனர்’ என்றார். நான் அஜித்தின் 63வது படம் என நினைத்தேன். ஆனால், 62வது படம் என தெரிந்தது.
அஜித்தை இயக்க வேண்டும் என்பது 15 வருட கனவு. இந்த வாய்ப்பு தானாகவே என்னை தேடி வந்தது. முதன் முறை அஜித் சாரை சந்தித்த போது பல நாட்கள் பழகிய உணர்வை அவர் ஏற்படுத்தினார். முதன் முறையாக என் கதை இல்லாத ஒரு கதையை நான் இயக்கியுள்ளேன். அதேநேரம், திரைக்கதையில் என் பங்களிப்பு உண்டு.
இந்த காம்போவை நானே எதிர்பார்க்கவில்லை. அஜித் சார், திரிஷா, அர்ஜூன் என எனக்கே இது புது அனுபவம். இந்த படத்தில் ஒரு புது அஜித்தை பார்ப்பீர்கள். இவ்வளவு அழகாகவும், ஸ்டைலாகவும், அதேநேரம் பவர் ஃபுல்லாகவும் இருக்கும் அஜித்தை காட்சிக்கு காட்சி நீங்கள் ரசிப்பீர்கள்.
அஜித்குமார்: ‘இந்த கதையை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?’ என அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் ‘நம்முடைய கம்ஃபர்ட்டபிள் ஜோன்ல இருந்து வெளியே வருவதற்கு வாய்ப்பாக இந்த படத்தை பயன்படுத்திக்கொள்வோம்’ என்றார். எனக்கும் அது பிடித்திருந்தது. தன்னுடைய சின்ன உலகை காப்பாற்றிக்கொள்ள ஒரு சாதாரண மனிதன் போராடுவதுதான் படத்தின் ஒன்லைன். விடாமுயற்சி ஒரு அதிரடி மாஸ் ஆக்ஷன் படம் இல்லை. துள்ளலான, துறுதுறுவென இருக்கும் அஜித்தை இதில் ரசிகர்கள் பார்ப்பார்கள்.
பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளை அஜித் வெறுக்கிறார். பெண்களை நாகரீகமாக நடத்த வேண்டும் என்பதே அவரின் நிலைப்பாடாக இருக்கிறது. இதை சொல்வதற்காகவே விடாமுயற்சி படத்தில் அவர் நடித்திருக்கிறார் என்றும் சொல்லலாம். அஜித் சார் எனக்கு கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியிருக்கிறேன்’ என உருகியிருக்கிறார். பல தடைகளை தாண்டி விடாமுயற்சி திரைப்படம் வருகிற பிப்ரவரி 6ம் தேதி வெளியாகவுள்ளது.