More

ரீவைண்ட்- விநாயகர் சதுர்த்திக்கு ரிலீஸ் ஆகி தீபாவளியை தாண்டி ஓடிய ஜல்லிக்கட்டு

கடந்த 1987ம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி வெளியாகிய திரைப்படம் ஜல்லிக்கட்டு. பிரபல தயாரிப்பாளரும் இயக்குனருமான சித்ரா லட்சுமணனின் சீதாலட்சுமி ஆர்ட் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்த படமிது. அதற்கு முன் சத்யராஜை வைத்து நூறாவது நாள், 24 மணி நேரம் உள்ளிட்ட படங்களை மணிவண்ணன் இயக்கி இருந்தார். ஆனால் இந்த படங்களில் எல்லாம் சத்யராஜ் வில்லன் வேடத்தில் நடித்திருந்தார். இந்த ஜல்லிக்கட்டு படமே மணிவண்ணன் இயக்கத்தில் மாஸ் ஹீரோவாக சத்யராஜை அடையாளம் காட்டியது. கதாநாயகியாக ராதா கலக்கி இருந்தார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் மங்களூரு அருகேயுள்ள குட்ரமுகே என்ற இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் எடுக்கப்பட்டது. 

கதை இதுதான்: வில்லன்களுக்கு சாதகமான தீர்ப்பு சொல்லாததால் ஜட்ஜ் ராம்பிரசாத்தின்(சிவாஜி) பேத்தி வில்லன்கள் கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்படுகிறார். இதே போல் மில் தொழிலாளர் பிரச்சினையில் சத்யராஜின் அண்ணன் டெல்லி கணேஷ் குடும்பமும் சிவாஜியின் பேத்தியை கொன்ற கும்பலால்  கொல்லப்படுகிறது.

இந்த நிலையில் சத்யராஜ்தான் அண்ணன் குடும்பத்தை கொன்றார் என வீணாக பழிசுமத்தப்பட்டு ஜெயிலுக்கு அனுப்பபடுகிறார் இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதியான சிவாஜிகணேசன் சத்யராஜை ஸ்பெஷல் பர்மிஷனில் தான் இருக்கும் ஒரு அமைதியான தீவுக்குள் இருக்கும் வீட்டுக்கு தண்டனை என்று கூட்டி செல்கிறார் . ஆரம்பத்தில் சிவாஜிக்கும் சத்யராஜுக்கும் முட்டல் மோதல் இருக்க பின்னாட்களில் சரியாகி இருவருக்கும் ஒரு எதிரிதான் என முடிவாகி தங்கள் குடும்பங்களின் அவல நிலைக்கு காரணமான வில்லன்களான சித்ரா லட்சுமணன், நம்பியார், மலேசியா வாசுதேவன் போன்றோரை தங்கள் தந்திரத்தாலும் அதிரடியாலும் போட்டு தள்ளுவதுதான் கதை.

இந்த படத்தை கஷ்டப்பட்டு படமாக்கிய இயக்குனர் மணிவண்ணனும் தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனும் படத்தை 1987 ஆகஸ்டு சுதந்திர தினத்துக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டனர். ஆனால் படத்தை பார்த்த சென்ஸார் போர்டு ஒரு நீதிபதியும் சேர்ந்தே குற்றம் செய்வதாக காண்பிப்பது தவறு அதுவாவது பரவாயில்லை க்ளைமாக்ஸில் தண்டனை அடையாமல் இருவரும் ஜட்ஜை ஏமாற்றி வெளியே வருவது போல் காட்சிகள் உள்ளது ஒரு நீதிபதியே நீதித்துறையை ஏமாற்றுவது போல் காட்சிகள் வைக்கலாமா என சென்ஸார் போர்டில் குடைச்சல் கொடுத்துள்ளனர். இதனால் சிவாஜியிடம் கால்ஷீட் கேட்டு தண்டனையில் இருந்து தப்பித்து விட்டு மனசாட்சிப்படி மீண்டும் நீதிபதியை ரகசிய அறையில் சந்தித்து தாங்கள் குற்றம் செய்தோம் என தண்டனை பெறுவது போல் காட்சி அமைக்கப்பட்ட பிறகே சென்சார் போர்டு ஏற்றுக்கொண்டனாராம். அதன் பிறகுதான் ஆகஸ்ட் 15 வெளிவர வேண்டிய படம் ஆகஸ்ட் 28ல் வெளிவந்துள்ளது.

இந்த படம் 100 நாட்கள் கடந்து ஓடியதால் இந்த படத்தின் 100வது நாள் விழாவை அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரை வைத்து நடத்தி விட வேண்டும் என்று முடிவாகி தலைமை செயலகத்தில் எம்.ஜி.ஆரை சென்று சித்ரா லட்சுமணனும், சத்யராஜும் சந்தித்துள்ளனர். அதன்படி டிசம்பர் மாதம் 1987ம் ஆண்டு ஜல்லிக்கட்டு படத்தின் நூறாவது நாள் விழா நடந்தது. எம்.ஜி.ஆர் கலந்து கொண்ட மிகப்பெரிய கடைசி விழா இதுதான் இந்த விழா முடிந்து 20 நாட்களுக்கு பிறகு எம்.ஜி.ஆர் இயற்கை எய்தினார்.

படத்தின் ஓப்பனிங் கம்பெனி பேனர் காண்பிப்பதில் ஆரம்பித்து படத்தில் வெறித்தனமான இசையை கொடுத்திருந்தவர் இளையராஜா. அதுவும் ஒவ்வொருவரையும் கொல்ல சத்யராஜ் செல்லும் காட்சிகள், சத்யராஜும், சிவாஜியும் ஒன்று சேரும் காட்சிகள் சத்யராஜ், சிவாஜியின் ஓப்பனிங் காட்சிகள், படத்தின் டைட்டில் பிஜிஎம் என இப்படத்தில் இளையராஜா பின்னணி இசையில் புகுந்து விளையாடி இருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும். நூறு ரஜினி படத்துக்கு போட வேண்டியா மாஸ் பிஜிஎம்களை இளையராஜா இந்த ஒரு படத்துக்கே போட்டிருந்தார் என்று சுருக்கமாக சொல்லலாம் அப்படி ஒரு மாஸ் பின்னணி இசையை இளையராஜா கொடுத்து இருந்தார். ஏய் ராஜா என்ற ஒரு பாடலை எஸ்.பி.பியும் மனோவும் அற்புதமாக பாடி இருந்தார்கள் சிறப்பான பாடல் அது. இந்த பாடல் காட்சி ஒரு குருவும் சிஷ்யனும் செல்வது போல மிக அழகாக சத்யராஜும் சிவாஜியும் செல்லும் காட்சிகள் மிக அழகாக படமாக்கப்பட்டிருந்தது.

ஏரியில் ஒரு ஓடம், காதல் கிளியே, கத்திச்சண்டை போடாமலே போன்ற பாடல்களும் மிக அழகாக வந்திருந்தன.

சத்யராஜ் மலேசியா வாசுதேவன், நம்பியார், சித்ரா லட்சுமணனை கொலை செய்ய போகும் காட்சிகளில் அவர்களிடம் நக்கலாக பேசும் வசனங்கள் எல்லாம் செம மாஸாக மணிவண்ணன் எழுதி இருந்தார். ஐயாம் ப்ரம் லண்டன் என அறிமுகமாகி மலேசியா வாசுதேவனிடம் அறிமுகமாகி குதிரை ரேஸ் பற்றி பேசும் காட்சிகள் எல்லாம் செம நக்கலாக ஜாலியாக இருந்தன.


 

அந்த வருடம் விநாயகர் சதுர்த்திக்கு வெளியான இந்த படம் தீபாவளியை தாண்டி வெகு சிறப்பாக ஓடி இருக்கிறது. அந்த தீபாவளிக்கு விஜயகாந்த் நடித்த உழவன் மகன், ரஜினி நடித்த மனிதன் படங்கள் வந்திருக்கிறது அந்த படங்களோடு ஜல்லிக்கட்டும் முன்னணியில் ஓடியது என சமீபத்தில் அப்படத்தின் தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பேட்டியில் கூறி இருக்கிறார்.
சத்யராஜ் நடித்த மாஸ் படங்களில் இந்த படத்திற்கு என்றும் இடமுண்டு.
 

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts