அந்த படத்தில் மயங்கிய அனுராக் காஷ்யப்... இம்ரஸ் செய்த சசிகுமார்...
16 வயதினிலே படம் 1980-களில் கோலிவுட்டில் ஏற்படுத்திய அதேபோன்றதொரு தாக்கத்தை 2008-ல் வெளியான சுப்ரமணியபுரம் படமும் ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். இந்தப் படம் மூலம் சசிக்குமார் தமிழ் சினிமாவில் இயக்குநர், தயாரிப்பாளர் மட்டுமல்லாது நடிகராகவும் அறிமுகமானார்.
சுப்ரமணியபுரம் படம் வெளியாகி 16 ஆண்டுகள் கழிந்த நிலையிலும் படம் பற்றிய விவாதங்கள் இன்றளவும் நடந்துகொண்டே இருக்கிறது. சுப்ரமணியபுரம் படம் வெளியாகி அதன் பாதிப்பில் மதுரையைப் பிண்ணனியாகக் கொண்டு பல படங்கள் வெளியானாலும் சுப்ரமணியபுரம் பெற்ற வெற்றியை இதுவரை எந்தவொரு படமும் பதிவு செய்யவில்லை.
சுப்ரமணியபுரம் படம்தான் தன்னுடைய கேங்க்ஸ் ஆஃப் வாஸிப்பூர் படத்துக்கான உந்துகோலாக அமைந்தது என்று பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறார். சசிக்குமார் தவிர சுவாதிக்கும் தமிழில் இது முதல் படமாக அமைந்தது.
அதேபோல், சமுத்திரக்கனி, கஞ்சா கருப்பு உள்ளிட்டோரின் நடிப்பும் ஜேம்ஸ் வசந்தனின் இசையும் படத்துக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. குறிப்பாக நடிகர் ஜெய் கரியரில் மிக முக்கியமான படம் சுப்ரமணியபுரம். அதுவும், ஜெய்யின் மேனரிசம் படத்தின் முக்கியமான அம்சமாகப் பேசப்பட்டது.
ஆனால், அதன் பின்னணியில் இருந்தது டைரக்டர் சசிக்குமார்தான். ஜெய்யின் அடையாளமாகவே மாறியது அந்த மேனரிசம். சுப்ரமணியபுரம் படத்துக்குள் ஜெய் வந்ததும், சசிக்குமார் அவரிடம் முதலில் சொன்னது விஜய் போன்ற நடிப்பு இந்தப் படத்துக்கு வேண்டாம் என்பதே.. அதன்பிறகு 1980களில் இளைஞர்கள் எப்படியெல்லாம் இருந்தனர் என்பது பற்றியும் குறிப்பிட்ட மேனரிசம் பற்றியெல்லாம் சசிக்குமார் அவருக்கு சொல்லிக் கொடுத்தாராம்.
தலையை ஒருவாறு ஆட்டிக்கொண்டே கோதிவிடும் அந்த ஸ்டைல் உண்மையில் சசிக்குமாருடையதுதானாம். பின்னாட்களில், சசிக்குமார் நடிகராகிறார். சுந்தரபாண்டியன் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது ஒரு சீனில் சசிக்குமார் நடித்ததைப் பார்த்தபோது, இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் ஜெய்யைப் போல நடிப்பதாகச் சொன்னாராம். அப்போது, தன்னுடைய ஒரிஜினாலிட்டி ஜெய்யின் அடையாளமாக மாறியதை நினைத்துப் பார்த்தாராம் சசிக்குமார். இதுபற்றி ஜெய்யிடமே விளையாட்டாகக் கூறிய நிகழ்வும் நடந்திருக்கிறது.அந்த படத்தில் மயங்கிய அனுராக் காஷ்யப்... ஜெய்யை வைத்து இம்ரஸ் செய்த சசிகுமார்...