நடிப்பு ஆசையை தூண்டிய கேரக்டர்… அப்படத்திலே நடித்த சிவாஜி கணேசன்!..

by ராம் சுதன் |   ( Updated:2024-07-17 17:46:37  )
Sivaji
X

Sivaji

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் முதல்முறையாக நடிக்க வந்த சம்பவத்துக்கும் வீரபாண்டிய கட்டபொம்மன் படத்துக்கும் ஒரு முக்கியமான ஒற்றுமை உள்ளது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் - தமிழ் சினிமாவின் கொண்டாடப்படும் நடிகர்களில் முக்கியமானவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் கிட்டத்தட்ட 288 படங்களில் நடித்திருக்கும் சிவாஜிதான், தமிழில் 250 படங்களில் ஹீரோவாக நடித்த ஒரே நடிகர்.

வெளிநாட்டு விருது வென்ற முதல் நடிகர், பிரான்ஸ் அரசின் செவாலியே விருதுவென்றவர் என பல்வேறு சிறப்புகளைப் பெற்ற சிவாஜி உடல்நலக் குறைவால் 2001-ம் ஆண்டு ஜூலை 21-ம் தேதி மறைந்தார். அப்போது, இவரை தென்னிந்தியாவின் மர்லின் பிராண்டோ என்று புகழாரம் சூட்டியது அமெரிக்காவின் பிரபல நாளிதழான லாஸ் ஏஞ்சலிஸ் டைம்ஸ்.

வேட்டைத்திடல் சின்னய்யா மன்றாயர் கணேசமூர்த்தி - இதுதான் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் முழுப்பெயர். விழுப்புரம் அருகே உள்ள ஒரு சின்னஞ்சிறு கிராமத்தைச் சேர்ந்தவர் சிவாஜி. அவரின் தந்தை சின்னய்யா மன்றாயர் சுதந்திரப் போராட்டத்துக்காக பல்வேறு முறை சிறை சென்றவர். சிவாஜி கணேசன் பிறந்த தினத்தன்று அவரின் தந்தையை போலீஸ் கைது செய்திருக்கிறார்கள்.

அதன்பின் பல ஆண்டுகள் அவர் சிறையில் கழித்ததால்ம், குடும்பத்தில் வறுமை வாட்டியது. இந்த காலகட்டத்தில் சிவாஜியின் வீட்டுக்கு வெளியே அவ்வப்போது வீரபாண்டிய கட்டபொம்மன் உள்ளிட்ட நாடகங்கள் போடப்படுவது வழக்கமாம். அப்படியான நாடகங்களைப் பார்த்து வளர்ந்தவர் மனதில், தானும் ஒரு நாடக நடிகராக வேண்டும் என்கிற எண்ணம் தோன்றியிருக்கிறது.

ஒரு காலகட்டத்தில் வெளியூரில் இருந்து அங்கு கட்டபொம்மன் நாடகம் போட வந்த நாடகக் குழுவினருடையே பயணிக்கத் தொடங்கியிருக்கிறார். தனக்கு யாரும் இல்லை; பெற்றோர் இறந்துவிட்டதாக பொய் சொல்லி அந்த நாடகக் குழுவில் தன்னை இணைத்துக் கொண்ட அவர், ஊர் ஊராக அவர்களுடன் நாடகம் போடுவதற்காக செல்லத் தொடங்கினாராம்.

இதனால், சிறுவயதிலேயே வீட்டை விட்டு வெளியேறிவிட்ட அவர், வீட்டிலும் இதுபற்றி எந்தவொரு தகவலையும் ஆரம்பத்தில் சொல்லவில்லையாம். கொஞ்சம் கொஞ்சமாக சின்னஞ்சிறு வேடங்கள் தொடங்கி மேடை நாடகங்களிலும் நடிக்கத் தொடங்கியிருக்கிறார்.

இப்படி நடிக்கத் தொடங்கி பல ஆண்டுகளுக்குப் பின்னரே சொந்த ஊருக்குப் போய் அம்மாவையே பார்த்தாராம். தான் நடிகனாகிவிட்ட செய்தியைச் சொல்லி அதன்பிறகே வீட்டினரின் அனுமதியோடு நடிக்கத் தொடங்கியிருக்கிறார். கட்டபொம்மன் நாடகம் பார்த்து நடிப்பு ஆசை துளிர்விட்ட அதே கணேசமூர்த்தி பின்னாட்களில் வீரபாண்டிய கட்டபொம்மனாக வெள்ளித்திரையில் மிரட்டியது குறிப்பிடத்தக்கது.

Next Story