பராசக்தி தலைப்பு விவகாரம்.. வருத்தத்தில் சிவாஜியின் குடும்பம்! அதன் பின்னணி

சுதா கொங்கரா சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு பராசக்தி என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்புகளும் எழுந்திருக்கிறது. இது சம்பந்தமாக பேசுவதற்காக நடிகர் திலகம் சிவாஜி சமூக நல பேரவையின் தலைவர் சந்திரசேகர் அவருடைய விளக்கத்தை கொடுத்துள்ளார். பராசக்தி என்று எடுத்துக் கொண்டால் அது வெறும் திரைப்படத்தின் தலைப்பு மட்டும் கிடையாது. அது அதோட கடந்து போக கூடாது. ஏனெனில் 1952 ல் வெளியான பராசக்தி என்ற திரைப்படம் ஒரு அத்தியாயத்தின் தொடக்கம். 1985 ஆம் ஆண்டில் இதே பராசக்தி என்ற பெயரில் ஒரு படம் எடுக்க இருந்தார்கள்.
அப்பொழுதும் இதே மாதிரியான எதிர்ப்புதான் இருந்தன. ஏவிஎம் நிறுவனமும் அதற்கான என் ஓ சியும் கொடுக்கவில்லை. அதன் பிறகு அந்தப் படம் ‘மீண்டும் பராசக்தி’ என்ற பெயரில் வெளியானது. இதே மாதிரி பல திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் படத்திலேயே ஆண்டவன் கட்டளை ,பச்சை விளக்கு, நெஞ்சிருக்கும் வரை போன்ற பல திரைப்படங்களின் பெயர்களில் தொடர்ந்து படங்கள் வெளிவந்திருக்கின்றன. அதையெல்லாம் யாரும் எதிர்ப்பு தெரிவிக்க போவதில்லை .அவர் நடித்த 300 படங்கள் என்று சொன்னால் 300 படங்களின் பெயர்களையும் வைக்கக்கூடாது என யாருமே சொல்லவில்லை.
சில முத்திரை பதித்த திரைப்படங்களை மட்டும் தான் நாங்கள் சொல்கிறோம். ஏற்கனவே திருவிளையாடல் என்ற பெயரில் ஒரு படத்திற்கு டைட்டில் வைத்தார்கள். அப்பொழுது நான் இதை உயர்நீதிமன்றத்தில் கொண்டு சென்று வழக்கு போட்டேன் .திருவிளையாடல் என்று எந்த வகையில் வைக்கிறீர்கள். எதற்காக வைக்கிறீர்கள் என்று கேட்டு கேஸ் போடும் பொழுது ஏன் அந்த டைட்டிலை அவர்கள் அதிகாரப்பூர்வமாக கூட வாங்கி இருந்தார்கள். அப்படி இருந்தும் நான் கேஸ் போட்டு அதன் பிறகு அவர்கள் திருவிளையாடல் ஆரம்பம் என மாற்றினார்கள்.
ஏனெனில் ஒரு சமூகப் படத்திற்கு காதல் படத்திற்கு திருவிளையாடல் என்று வைத்தால் அதில் என்ன அர்த்தம் இருக்கிறது. அந்த கதை களத்திற்கு ஏற்றவாறு தலைப்பு வைக்க வேண்டும். தென்னிந்திய திரை உலகத்திற்கு இந்த தமிழ் திரையுலகம் தான் முன்னோடி. அந்த திரையுலகத்தில் தலைப்புக்கு ஏன் பஞ்சம். இப்ப எடுக்கிற பராசக்தி என்ற படம் இந்தி திணிப்பு போராட்டம் பற்றிய படம் என சொல்லப்படுகிறது. இந்தி திணிப்பு என்ற சொல்லும் பொழுது அந்த கதை களத்திலேயே ஒரு தலைப்பு உங்களுக்கு கிடைக்கலையா. அதனால் நீங்கள் உங்கள் உழைப்பில் தலைப்பை தேர்ந்தெடுங்கள். உங்கள் உழைப்பில் கதைக்களத்தை தேர்ந்தெடுங்கள். உங்கள் உழைப்பில் பாடலை உருவாக்குங்கள். அப்புறம் மக்களிடம் போய் வெற்றி பெறுங்கள் .அதை யாரும் வேண்டாம் என சொல்ல முடியாது.
இது பற்றி படக்குழுவை தொடர்பு கொண்டு முயற்சி செய்தபோது அவர்கள் பட வெளியீடு, டீசர் ஆகியவற்றில் பிஸியாக இருந்தார்கள். அதனால் இதை பத்திரிக்கை வாயிலாக தெரிவிக்கலாம் என்றுதான் நினைத்தேன். இரண்டாவதாக தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வாயிலாக இதை அணுகலாம் என்றும் முயற்சி செய்தேன். அவர்கள் ஏவிஎம் நிறுவனத்தில் இருந்து என் ஒ சி வாங்கி இந்த டைட்டில் வைக்கப்பட்டு இருப்பதாக சொன்னார்கள். ஒரு சில இடத்திலிருந்து எனக்கு தகவல் வந்தது. அதாவது இதைப் பற்றி நாங்கள் ஆலோசனை செய்கிறோம் என்று சொன்னார்கள் .
ஏன் சிவகார்த்திகேயன் தரப்பிலிருந்து கூட நீங்கள் சொன்னதை நாங்கள் கருத்தில் கொண்டு மறுபரிசீலனை செய்கிறோம் என்று கூறினார்கள். அதனால் நானும் நம்பிக்கையுடன் இருந்தேன். இதைப் பற்றி ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும். என்ஒசி வாங்கி விட்டோம். அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டோம் என இந்த டைட்டிலை வைத்தது முற்றிலுமாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. இது தமிழ் சினிமாவிற்கும் நல்லதல்ல என்பது தான் என்னுடைய கருத்து. இது சம்பந்தமாக சிவாஜி குடும்பமும் மிகுந்த வருத்தத்தில் தான் இருக்கிறார்கள்.
ஏற்கனவே ராம்குமார் தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஒரு கடிதம் கொடுத்துள்ளார். இந்த படத்திற்கு பராசக்தி என்ற பெயரை வைக்கக்கூடாது என அவர் ஏற்கனவே கூறி மனு கொடுத்து இருக்கிறார். இந்த தலைப்பை பாதுகாக்க வேண்டும் என அவர் கூறியிருக்கிறார். சிவாஜி குடும்பமும் இது சம்பந்தமாக பேசியிருக்கிறார்கள். இப்படி சிவாஜி குடும்பமே பேசிய பிறகும் அது ஏற்கப்படவில்லை என்று நினைக்கும் பொழுது அது எங்களுக்கு மிகுந்த மன வேதனையை அளிக்கிறது என சந்திரசேகர் அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.