More

அ….ஆ…என கலக்கிய எஸ்.ஜே.சூர்யாவின் சூப்பர்ஹிட் படங்கள்

இப்படி இப்படி இருந்தா…அப்படி அப்படி இருக்கலாம்…அப்படி அப்படி இருந்தா…இப்படி இப்படி இருக்கலாம்…இப்போ….இருக்கா…இப்போ இல்லையா….அப்படினா…இருக்கு…ஆனா…இல்ல…என்ன தலை சுத்துதா…இதுதான் நம்ம எஸ்.ஜே.சூர்யாவின் டயலாக்…படத்தில் மனிதர் அச்சு பிசகாமல்…நம் தலையையே தன் அதீத நடிப்பாற்றலால் ஒரு சுற்று சுற்ற விட்டு விடுவார். நடிப்பில் அசத்துபவர். கோமாளியா புத்திசாலியா…என தெரியாத அளவில் இரண்டுக்கும் இடைப்பட்டவராக நடித்து அசத்துபவர் தான் சூர்யா. இவரது படங்கள் பார்ப்பதற்கு என தனி ரசிகர் வட்டாரமே உள்ளது. டபுள் மீனிங் இவரது படங்களில் தூக்கலாக இருக்கும். 

Advertising
Advertising

உதாரணமாக அ…ஆ…படம், இசை படத்தில் இவரது கைங்கரியத்தைக் காணலாம். தமிழ்சினிமாவின் வித்தியாசமான இயக்குனர்களில் இவரும் ஒருவர்.

வாலி என அஜீத்துக்கும், குஷி என விஜய்க்கும் 2 மாபெரும் வெற்றிப்படங்களைக் கொடுத்து அவர்களது திரையுலக பயணத்தில் ஒரு திருப்புமுனையை உருவாக்கிய பெருமைக்குரியவர் எஸ்.ஜே.சூர்யா தான் என்றால் அது மிகையாகாது. அப்படிப்பட்ட ஜாம்பவானுக்கு இன்று பிறந்தநாள். இவரது திரையுலக பயணத்தைச் சற்று கடந்து செல்வோம்.

தென்காசி மாவட்டம் சிவகிரியில் 20.7.1968ல் பிறந்தார். இவர் நடிகர், திரைப்பட இயக்குனர், எழுத்தாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என பன்முகக் கலைஞராக உள்ளார். 

எஸ். ஜே. சூர்யா என்ற திரைப்பெயர் கொண்ட இவரது இயற்பெயர் எஸ். ஜஸ்டின் செல்வராஜ். 

சூர்யாவின் முதல் திரைப்படம் வாலி. பெரும் வெற்றிகண்டது. அடுத்து வந்த குஷி, தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் பெரும் வெற்றியடைந்தபோதும் இந்தி ரீமேக் வெற்றி பெறவில்லை.

நெத்தி அடி, கிழக்குச் சீமையிலே, ஆசை, குஷி, நியூ, அன்பே ஆருயிரே, மகா நடிகன், கள்வனின் காதலி, டிஷ்யூம், வியாபாரி, திருமகன், நியூட்டனின் மூன்றாம் விதி, இசை ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

வாலி, குஷி, நியூ, நானி (தெலுங்கு), அன்பே ஆருயிரே, புலி (தெலுங்கு), இசை ஆகிய படங்களை இயக்கியுள்ளார். 

இவர் நடித்து இயக்கிய சில படங்களை சுருக்கமாகக் காண்போம். 

வாலி 

எஸ்.ஜே.சூர்யாவுக்கு இது முதல் படம். 1999ல் அஜீத்குமாரை வைத்து இயக்கி மாபெரும் வெற்றி கண்டார். இப்படத்தில் அஜீத்குமாருடன், சிம்ரன், ஜோதிகா கதாநாயகிகளாக நடித்து இருப்பார்கள். கன்னட ரீமேக் படம். தேவாவின் இன்னிசையில் பாடல்கள் அனைத்தும் மெகா ஹிட். 

இக்கதையானது இராமாயணத்தில் வரும் சுக்ரீவனின் சகோதரனான வாலி சுக்ரீவனின் மனைவியை வைத்திருப்பது போல் இக்கால கட்டத்தில் நடக்கும் சம்பவங்களைப் பற்றியதுதான். அஜீத், நாயகனாகவும், வில்லனாகவும் இரட்டை வேடத்தில் நடித்து அசத்தியிருப்பார். விவேக், பாலாஜி படத்தின் நகைச்சுவைக்காட்சிக்கு கேரண்டி கொடுத்திருப்பார்கள். இவர்களுடன் லிவிங்ஸ்டன், ராஜிவ், பாண்டு, சுஜாதா உள்பட பலர் நடித்துள்ளனர். 

ஜீ பிரியா, நிலவைக் கொண்டு வா, வானில் காயுதே, ஏப்ரல் மாதத்தில், சோனா சோனா பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுபவை. 

குஷி 

2000ல் எஸ்.ஜே.சூர்யா இயக்கிய படம் குஷி. விஜய், ஜோதிகா நடிப்பில் படம் பட்டையைக் கிளப்பியது. தேவாவின் இசையில் பாடல்கள் அத்தனையும் செம மாஸ். மேக்கரீனா மேக்கரீனா.., மேகம் கருக்குது, மொட்டு ஒன்று, கட்டிப்புடி கட்டிப்புடிடா, ஓ வெண்ணிலா, ஒரு பொண்ணு ஒண்ணு நான் பார்த்தேன்…பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்க மட்டுமின்றி பார்க்கவும் தூண்டுபவை. இப்படத்தில் நிழல்கள் ரவி, விஜயகுமார், விவேக், மும்தாஜ், ஷில்பா ஷெட்டி ஆகியோரும் நடித்துள்ளனர். 

அன்பே ஆருயிரே 

2005ல் வெளியான இப்படத்தை எஸ்.ஜே.சூர்யா நடித்து இயக்கினார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் அத்தனையும் டாப் டக்கர். சூர்யாவுக்கு ஜோடியாக நிலா என்ற புதுமுக நடிகை நடித்துள்ளார். புதுவிதமான கதை இது. காதலர்களுக்கு இடையே ஏற்படும் சண்டை என்பது சாதாரணமான விஷயம். ஒரு கட்டத்தில் சண்டையால் அவர்கள் பிரிய நேரிடுகிறது. இருவரும் அவர்களது நல்ல மனம் கொண்ட ஆவிகளால் மீண்டும் கைகோர்க்கின்றனர் என்பதே கதை. 

படத்தின் திரைக்கதையில் நம்மை பிசின் போட்டு சேரோடு ஒட்ட வைத்து விடுகிறார் நம் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா. இவரது வசன உச்சரிப்பு ஸ்டைலுக்காகவே இவரது படங்களைப் பார்க்கலாம். ஏற்றம்…இறக்கம்…ஓவர் ஆக்டிங் என பன்முகத் தன்மை கொண்டது அவரது ஆக்டிங்….! அதுதான் அவரது தனி ஸ்டைல்… இப்படத்தில் மீரா சோப்ரா, ஊர்வசி, சந்தான பாரதி, சந்தானம், பாண்டு, நெல்லை சிவா, நம்பியார் உள்பட பலர் நடித்துள்ளனர். 

அன்பே ஆருயிரே, மரம்கொத்தியே…, மயிலிறகே…, தழுவுது.., திகு திகு, வருகிறாள்…பாடல்கள் நம்மை காதல் பரவசத்தில் ஆழ்த்தி விடும். 

நியூ 

2004ல் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியான படம். படத்தின் இயக்குனரும் இவரே. படத்தில் சிம்ரன், மணிவண்ணன், தேவயானி, கிரன், ஐஸ்வர்யா, கருணாஸ், ஜனகராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர். 1988ல் வெளியான பிக் என்ற ஆங்கிலப்படத்தின் ரீமேக். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாடல்கள் சுமார். 8 வயது சிறுவன் ஒருவன் விஞ்ஞானி ஒருவரால் 28 வயதுடைய நபராக மாற்றம் பெற்றால் என்ன நடக்கும் என்பதே படத்தின் கதை. 

நியூ, ஸ்பைடர்மேன், சர்க்கரை, தொட்டால் பூ மலரும், காலையில் தினமும், இப் யூ வான்னா, கும்பகோணம் ஆகிய பாடல்களை படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்படத்தில் படகோட்டி படத்தில் இடம்பெற்ற தொட்டால் பூ மலரும் பாடல் ரீமேக் ஆனது. 

வியாபாரி  

2007ல் சக்தி சிதம்பரத்தின் இயக்கத்தில் வெளியானது. இப்படத்தின் தயாரிப்பாளரும் இவர்தான். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, தமன்னா, வடிவேலு, பிரகாஷ்ராஜ், நமிதா, மாளவிகா, சந்தானம், சீதா, நாசர் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் மல்டிபிலிசிட்டி என்ற ஆங்கில படத்தின் தழுவல். தேவாவின் இசையில் ஆசைப்பட்ட எல்லாத்தையும், ஜூலை மாதத்தில் கடி கடி, தா தா, வெற்றி கண்டவன் ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.  

எஸ்.ஜே.சூர்யாவுக்கு நம்ம டீம் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள்…

Published by
adminram

Recent Posts