Cinema News
படமே எடுக்குறதில்லை!.. நீங்களாம் என்னை தடுக்கப் போறீங்களா?.. விஷால் ஒரே போடு!..
தயாரிப்பாளர் சங்கம் நடிகர் விஷாலுக்கு எதிராக மோசடி குற்றச்சாட்டுகளை அடுக்கி அவர் சினிமாவில் நடிப்பதற்கே தடை செய்ய வேண்டும் என அறிக்கை வெளியிட்ட நிலையில், விஷால் பதிலடி கொடுத்துள்ளார்.
நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராக இருக்கும் நடிகர் விஷால் அடுத்ததாக துப்பறிவாளன் 2 படத்தை இயக்கி வருகிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே. சூர்யா நடித்து வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் 100 கோடி கலெக்ட் செய்து வெற்றிப் படமாக மாறியது.
ஆனால், அதன் பின்னர், இந்த ஆண்டு ஹரி இயக்கத்தில் விஷால், பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியான ரத்னம் திரைப்படம் சொதப்பி படுதோல்வியை சந்தித்தது. அடுத்ததாக துப்பறிவாளன் 2 படத்தை இயக்கி நடித்து வருகிறார் விஷால்.
நடிகர் சங்கத்தில் மட்டுமின்றி தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் விஷால் பொறுப்பேற்று சில காலம் அதை நடத்தி வந்தார். அப்போது, ஏகப்பட்ட முறைகேடுகளில் விஷால் ஈடுபட்டார் என்றும் 12 கோடி ரூபாய் வரை பண மோசடி நடந்திருப்பதாகவும் எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் விஷாலுக்கு தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு கொடுக்க முடிவு செய்தது.
ஏற்கனவே லைகாவுடன் 25 கோடி ரூபாய் வழக்கில் சிக்கியுள்ள விஷால், அடுத்ததாக தயாரிப்பாளர் சங்க பிரச்சனையிலும் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற தயாரிப்பாளர் சங்கக் கூட்டத்தில் விஷாலுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நடிகர் விஷாலை வைத்து படம் தயாரிக்க முன் வருபவர்கள் தயாரிப்பாளர் சங்கத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அறிக்கை ஒன்று வெளியானது.
இந்நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக எக்ஸ் தளத்தில் விஷால் தற்போது ஒரு ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், என்னை யாரும் தடுக்க முடியாது என்றும் படமே தயாரிக்காமல் தயாரிப்பாளர்கள் என சொல்லிக் கொள்ளும் நீங்களா என்னை தடுக்கப் போறீங்க என ஏளனமாக கமெண்ட் அடித்துள்ளார். மேலும், தயாரிப்பாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்குத்தான் அந்த நிதி செலவிடப்பட்டதாகவும் தான் கையாடல் செய்யவில்லை என்றும் கூறியுள்ளார்.