×

 நீலப்பட வில்லனாக ரஜினி -  மிரட்டிய 'காயத்ரி'

ரஜினி . ஸ்ரீதேவி நடிப்பில் காயத்ரி திரைப்படம்
 
gayathri

எழுத்தாளர் சுஜாதா தமிழில் எத்தனையோ சஸ்பென்ஸ் மற்றும் விஞ்ஞானக்கதைகளை எழுதியுள்ளார். அவர் எழுதியதில் ஒரு சில கதைகளே படங்களாக வெளிவந்துள்ளன. ப்ரியா, கரையெல்லாம் செண்பகப்பூ போன்ற நாவல்கள் படமாக வந்துள்ளன அப்படியாக சுஜாதா எழுதிய காயத்ரி நாவலே படமாகவும் வந்துள்ளது.

1977ம் ஆண்டு அக்டோபர் மாதம் இப்படம் வெளிவந்துள்ளது.

gayathri

ரஜினி அந்த நேரத்தில் வில்லனாக நடித்து கொண்டிருந்த காலம். இந்த படத்திலும் ரஜினி வில்லன் தான் ஆனால் சைலண்ட் ஆன டெரர் வில்லனாக நடித்திருந்தார். மனைவி ஸ்ரீதேவியுடன் சாதாரணமாக ரொமான்ஸ் செய்யும் கதாபாத்திரத்தில் ஆரம்பத்தில் வரும் ரஜினியின் கொடூர பின்புலம் பின்னால் தெரிய வரும்போது படம் பார்த்தவர்கள் அனைவருமே அதிர்ச்சி ஆகி இருப்பர். அப்படியொரு வித்தியாச வில்லன் வேடம் இப்படத்தில் ரஜினிக்கு கொடுக்கப்பட்டது.

அப்பாவி பெண்ணாக திருச்சியில் வசிக்கும் காயத்ரியை (ஸ்ரீதேவி) நகரத்து வாலிபரான ராஜரத்தினம்(ரஜினி) வந்து முறைப்படி பெண் பார்த்து பிடித்திருக்கிறது என கூற கூச்சமான அப்பாவி பெண்ணான ஸ்ரீதேவிக்கும் ரஜினிக்கும் திருமணம் நடக்கிறது. திருமணம் பேசும்போது ரஜினியின் அக்காவாக ஒரு விதவை பெண் இருந்து அவர்களது திருமணத்தை நடத்தி வைக்கிறார்.

Gayathri

திருமணம் முடிந்து ரஜினி வீட்டுக்கு வரும் ஸ்ரீதேவி அங்கு எல்லாமே ஏதோ மர்மமாக இருப்பதை உணர்கிறார். விதவை பெண்ணாக ரஜினியின் அக்காவாக இருந்து உடன் இருந்து திருமணத்தை முடித்து கொடுத்து பாந்தமாக இருந்த அந்த பெண் நவநாகரீக நங்கை போல் கவர்ச்சி உடை அணிகிறார். வீட்டில் உட்கார்ந்து மது அருந்துகிறார். இதை எல்லாம் பார்த்த ஸ்ரீ தேவி ரஜினியிடம் சொல்ல , அதை எல்லாம் விட்ரு என்று சமாதானம் சொல்கிறார்.

gayathri

அந்த வீட்டில் இருக்கும் ஒரு அறைக்கு யாருமே ஸ்ரீதேவியை அனுமதிக்காமல் இருக்கிறார்கள். வீட்டின் எஜமானியம்மா ஸ்ரீதேவியாக இருந்தாலும் எஜமானி என்று கூட பார்க்காமல் வீட்டு கூர்க்கா ஸ்ரீ தேவியை தரதரவென்று கையை பிடித்து இழுத்து அந்த வீட்டில் இருக்கும் மர்ம அறைக்கு செல்ல விடாமல் தடுக்கிறார்.

கடைசியில் ரஜினி ஒரு நீலப்படம் எடுத்து விற்பனை செய்பவர் அதை எதிர்த்து கேட்பவர்களை கொலை செய்யும் அளவு மோசமானவர் என்ற உண்மையை ஸ்ரீதேவி தெரிந்து கொள்கிறார். ஒரு கட்டத்தில் துப்பறிவாளராக வரும் ஜெய்சங்கர் ரஜினியிடம் இருந்து ஸ்ரீ தேவியை காப்பாற்ற போராடுகிறார்.

இதுதான் இப்படத்தின் கதை.

படத்தை இயக்கியவர் ஆர்.பட்டாபிராமன், இசை இளையராஜா இவரின் பின்னணி இசை படத்துக்கு பெரும் பலம் சேர்த்தது

படம் ப்ளாக் அண்ட் ஒயிட்டில் இருந்தாலும் விறு விறுப்புக்கு குறைவில்லாத படம். படத்தின் சின்ன மைனஸ் படத்தின் வில்லன் போர்ஷனான ரஜினி, ஸ்ரீ தேவி வரும் காட்சிகள்தான் அதிகமாக இருக்கும். படம் முடிவடையும் தருணத்தில் தான் ஹீரோ ஜெய்சங்கர் வருவார்.

ரஜினி நடித்த வில்லத்தனமான படத்தில் இப்படம் மிக சிறப்பான படம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ப்ளூ பிலிம் எடுத்து விற்கும் வியாபாரி ராஜரத்தினம் கதாபாத்திரத்தில் மிரட்டி இருந்தார்.

ரஜினி வீட்டு சமையல்காரனாக அப்பாவியாக வரும் அசோகனும் வில்லத்தனத்தில் மிரட்டி இருந்தார்.

காயத்ரி காலம் கடந்தும் நினைவில் நிற்கும் த்ரில்லர் படம்.

From around the web

Trending Videos

Tamilnadu News