×

ஓயாத அரிப்புத் தொல்லையா...? உடல் சொல்லும் எச்சரிக்கை....!?

என்னப்பா...ஒரே ஊறலா இருக்கு..? என பெரும்பாலானோர் சொறிந்து கொண்டே இருப்பதைப் பார்த்திருப்போம். சொறிய சொறிய அவர்களுக்கு இன்பம்தான்...அதுவே எரிச்சலாகவும் வெறுப்பாகவும் மாறுவதுண்டு..
 

என்னப்பா...ஒரே ஊறலா இருக்கு..? என பெரும்பாலானோர் சொறிந்து கொண்டே இருப்பதைப் பார்த்திருப்போம். சொறிய சொறிய அவர்களுக்கு இன்பம்தான்...அதுவே எரிச்சலாகவும் வெறுப்பாகவும் மாறுவதுண்டு...உள்ளங்கை அரித்தால் பணம் வரும் என்றும் சிலர் நம்புவதுண்டு. எது எப்படியோ இந்த அரிப்பு எதனால் உண்டாகிறது? அதைப் போக்க  என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போமா...

பொதுவாக நம் உடலில் அரிப்பு வரக் காரணமே அலர்ஜி எனப்படும் ஒவ்வாமை தான். அதாவது உடலுக்குள் வேண்டாத பொருள்கள் நுழைவதால் உடல் வெளிப்படுத்தும் அலாரம் தான் அரிப்பு. இது வெறும் அரிப்பு தானே என்று அலட்சியமாக இருந்து விடாதீர்கள்.

நம் உடலில் அரிப்பு வர நோய்த்தொற்றும் ஒரு காரணம். சொத்தைப்பல், சுவாசப்பாதைக் கோளாறு,  சிறுநீரகப் பிரச்சனை,  ஆசன வாயில் அரிப்பு ( நூல் புழு காரணம்) குடலில் எந்தப் புழு இருந்தாலும் உடலில் அரிப்பு உண்டாகும். மேலும் , நீரிழிவு,  ரத்த சோகை, மஞ்சள் காமாலை,  தைராய்டு பிரச்சனை,  பித்தப்பை பிரச்சனை மற்றும் மூளை நரம்பு பிரச்சனையாகவும் இருக்கலாம். 

வெளிப்பொருள்களில் செயற்கை அழகுசாதனங்களால் அரிப்பு உண்டாகின்றன. சென்ட், குங்குமம்,  தலைச்சாயம், உதட்டுச்சாயம், முகப்பவுடர், க்ரீம். சிலருக்கு கம்பளி,  டெர்லின், நைலான், விலங்கு தோல் ஆடைகள். குழந்தைகளுக்கு டயாபர் காரணம். பெயிண்ட், பூச்சிக்கொல்லிகள், ரசாயனப் பொருள்கள், ரப்பர் செருப்பு, வாட்ச், பிளாஸ்டிக் வளையல்கள், தங்க நகை, கவரிங் நகை, நிக்கல் வகை நகைகள் மற்றும் டிடர்ஜென்ட், சோப்பு ஆகியவையும் அரிப்புக்கு காரணமாகின்றன. 

 சொறியும்போது தோல் தடித்து, சொரசொரப்பாகி, கறுத்துப் போகிறது. சொறிய சொறிய நீர் கொப்புளங்களாகி வீங்கி தடித்து நீர் வடிந்து நாள் முழுவதும் சொறிய வைக்கிறது. இதுதான் எக்சிமா நோய்.  தொடை இடுக்கில் காளான் கிருமிகளால் வரும் படை, செல்லப்பிராணிகளால் வரும் அலர்ஜி, பனிக்காற்று, முதியோருக்கு எண்ணைப்பசை இன்றி வறண்ட தோல், கால் விரல் இடுக்குகளில் எப்போதும் நீர் படுவதால் உண்டாகும் அரிப்பு மற்றும் தேமல், பாக்டீரியாவால் தோல் மடிப்பு நோய், பேன், பொடுகு,  சிரங்கு, சோரியாசிஸ், பூச்சிக்கடி என பல்வகைகளில் அரிப்பு உண்டாகின்றன.

உணவு ஒத்துக் கொள்ளாமல் போவதும் அரிப்பு வரக் காரணம்.பால், தயிர், முட்டை, இறால், இறைச்சி,  கடல் மீன், கருவாடு,  தக்காளி, சோயா பீன்ஸ், வேர்க்கடலை, முந்திரி, செர்ரி பழங்களளைக் குறிப்பாகச் சொல்லலாம். 

அதே போல் மருந்துகளில் ஆஸ்பிரின், பெனிசிலின், சல்ஃபா, நிமிகலைட், மலேரியா ஆகியவற்றைக் கூறலாம்.

கவலை, பயம், டென்ஷனும் காரணம்தான். ஹிஸ்டீரியா எனும் மன நோயாளிகள் தங்கள் உடலில் எப்போதும் பூச்சி ஊறுவதைப் போல் கற்பனை செய்து ஓயாமல் சொறிந்து கொண்டே இருப்பதைப் பார்த்திருப்பீர்கள்.
 
.அரிப்பு உண்டாகும் போது உடலில் என்னென்ன மாற்றங்கள் உண்டாகின்றன என பார்ப்போம்.

நம் உடலுக்குள் வேண்டாதப் பொருள்கள் செல்லும்போது மாஸ்ட் செல்கள் தான் அரிப்பை உண்டாக்கி நம்மை எச்சரிக்கையாக இருக்கச் சொல்கிறது. பிடிக்காதப் பொருள்கள் உட்புகும்போது ரத்தத்தில் உருவாகும் எதிர்ப்பாற்றல் தான் இம்யூனோகுளோபுலின் என்ற புரதம். இதை ரத்த செல்கள் உண்டாக்குகின்றன. வேண்டாதப் பொருள் உட்புகும்போது இந்தப் புரதம் ரத்தத்தில் கலந்திருக்கும். மறுபடியும் அதே பொருள் நுழைந்தால் இந்தப் புரதம் ஒவ்வாமை பொருளுடன் சேர்ந்து மாஸ்ட் செல்களைத் தூண்டும். அவை ஹிஸ்டமின், லுயூக்கோட்ரின் எனும் வேதிப்பொருள்களை வெளியேற்றும். இவை ரத்தக்குழாய்களை விரிவடையச் செய்து அங்குள்ள நரம்பு முனைகளைத் தாக்கும். அதுதான் அரிப்பாகிறது. 

.முதலில் இந்த இடத்தில்தான் அரிக்க வேண்டும் என்ற தகவலை நரம்புகள் தான் மூளைக்கு எடுத்துச் செல்கிறது. மூளை விரல்களுக்கு கட்டளையிட்டு உடனே சொறியச் சொல்கிறது. சொறியும்போது உண்டாகும் உணர்வையும் நரம்பு தான் மூளைக்கு கொண்டு செல்லும். அதனால் அரிப்பு உணர்வை நிறுத்திக் கொண்டு சொறியும் உணர்வை மட்டுமே மூளைக்கு கடத்துவதால் அரிப்பு குறைகிறது. 

எந்த வகை அரிப்பாக இருந்தாலும் சரி. நாமே மருத்துவராகி மருந்தை வாங்கி சாப்பிட்டு விடக்கூடாது. முறைப்படி மருத்துவரிடம் சென்று அரிப்புக்கான காரணம் கண்டறிந்து அவர் எழுதித் தரும் மருந்துகளையே சாப்பிட வேண்டும்.

தற்போது கொரோனா எனும் கொடிய வைரஸ் நோய் பரவி வரும் வேளையில் கைகளை அடிக்கடி சோப்பால் கழுவி, முகக்கவசம் அணிந்து சமூக விலகலைக் கடைபிடித்து பாதுகாப்பாக இருப்போம்.

From around the web

Trending Videos

Tamilnadu News