‘சகுனி’ பட இயக்குனர் திடீர் மறைவு.. ப்ரோமோஷனுக்கு செல்லும் போதே உயிரிழந்த பரிதாபம்
கார்த்தி நடித்த சகுனி படத்தை இயக்கிய சங்கர் தயாள் தனது புதிய படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு செல்லும் போது மாரடைப்பால் உயிரிழந்தார். கொளத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதித்து பரிசோதிக்கையில் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். தமிழ் சினிமாவின் ஒரு பிரபலமான முன்னணி இயக்குனராக இருந்தவர் சங்கர் தயாள்.
கார்த்தி நடிப்பில் வெளியான சகுனி படத்தை இயக்கியதன் மூலம் ரசிகர்களிடையே கவனம் பெற்றார். இவருக்கு வயது 54 ஆகிறது. இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர். சகுனி படம் மட்டுமில்லாமல் குழந்தைகள் முன்னேற்றக் கழகம் என்ற படத்தையும் இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நுங்கம்பாக்கத்தில் இருக்கும் ஒரு ஸ்டூடியோவில் ஏற்பாடு செய்திருந்தனர்.
அப்போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கின்றனர். அதன் பிறகு கொளத்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அவர் அழைத்து செல்லப்பட்டார். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என்று அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர். இது தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
குழந்தைகள் முன்னேற்றக் கழகம் படத்தின் நாயகன் யோகிபாபு என்பது குறிப்பிடத்தக்கது. சகுனி படத்தை பொறுத்தவரைக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படமாகும். இவருக்கு என சினிமாவில் ஒரு தனி மரியாதையே இருந்து வந்தது. இவருடைய மறைவிற்கு திரைத்துறையில் இருந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: நான் விக்கியை கல்யாணம் செய்திருக்க கூடாது!.. ஃபீல் பண்ணி பேசும் நயன்தாரா!...