Categories: latest news Review

சரத்குமாருக்கு இன்னொரு போர்த்தொழில்!.. எப்படி இருக்கு ஸ்மைல் மேன் டிரெய்லர்?!…

The Smile man trailer: சரத்குமாரின் 150வது திரைப்படமாக உருவாகியிருக்கிறது ஸ்மைல் மேன். போர்த்தொழில் போல இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகியிருக்கிறது இந்த திரைப்படம். சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்து ஹிட் அடித்து பல வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் போர்த்தொழிலே அவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது.

எனவே, அந்த படத்தின் ஸ்டைலிலேயே ஸ்மைல் மேன் படம் உருவாகியிருக்கிறது. இந்த படம் வருகிற 27ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த படத்தை ஷ்யாம் பிரைம் இயக்கியுள்ளார். மேலும், இந்த படத்தில் சிஜா ரோஸ், இனியா என பலரும் நடித்திருக்கிறார்கள். இது சரத்குமாரின் 150வது திரைப்படமாகும்.

இந்த டிரெய்லர் எப்படி இருக்கிறது என பார்ப்போம். கதை என பார்த்தால் இதுவரை நாம் பார்த்து பார்த்து சலித்துப்போன அதே சைக்கோ கொலைக்காரன் கதைதான். தொடர் கொலைகளை செய்து உடலை சிட்டியில் அங்கங்கே போடுகிறான் சைக்கோ கொலைக்காரன். கொன்றுவிட்டு வாயை கிழித்து சிரிப்பது போல மாற்றி உடல்கள் போடப்படுகிறது.

யார் இந்த கொலைகளை செய்கிறார் என கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணற, இது போன்ற கொலைகள் தொடர்பாக ஏற்கனவே விசாரணை செய்த ஒரு போலீஸ் அதிகாரியை தேடிப்பிடியுங்கள் என உயர் அதிகாரிகள் சொல்ல சரத்குமாரை காட்டுகிறார்கள். அவர் ஒரு புத்தகம் எழுதுகிறார். அதன்பின்னரே கொலைகள் நடப்பதாக காட்டப்படுகிறது.

எனவே, சரத்குமாருக்கும் அந்த கொலைகாரனுக்கும் பல வருடங்களுக்கு முன்பே தொடர்பு இருப்பது போல காட்சிகள் காட்டப்படுகிறது. அதேபோல், விபத்தில் சிக்கி ஒரு வருடத்தில் மொத்த ஞாபகங்களையும் மறந்துவிடும் நிலையில் இருக்கும் சரத்குமார் எப்படி அந்த சைக்கோ கொலைகாரனை பிடிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை. ஒருபக்கம், சிஜா ரோஸும் சைக்கோ காரன் பற்றி விசாரணை நடத்துகிறார். அவருக்கு இந்த வேடம் சரியாகவே பொருந்தியிருக்கிறது. போர்த்தொழிலுக்கு பின் ஒரு பக்கா இன்வெஸ்டிகேஷன் ஆபிசராக சரத்குமார் கலக்கி இருக்கிறார். படத்தின் பின்னணி இசையும் சிறப்பாக இருக்கிறது.

டிரெய்லரை பார்க்கும்போதே இப்படம் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட் அடிக்கும் என்பது தெரிகிறது. இன்வெஷ்டிகேஷன் கிரைம் திரில்லர் வகையான படங்கள் பிடிக்கும் ரசிகர்களை கண்டிப்பாக ஸ்மைல் மேன் கவரும் என்றே சொல்லலாம்.

சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
சிவா