Categories: Cinema News latest news throwback stories

எம்.ஆர்.ராதா நடிகரானதற்கு காரணமாக இருந்தது அந்த மீன் துண்டுதான்… நம்பவே முடியலையே!

நடிகவேல் என்று பெயர் பெற்ற எம்.ஆர்.ராதா, அக்காலகட்டத்தில் சிவாஜிக்கே ஈடு கொடுக்கும் நடிகராக திகழ்ந்தவர். நடிகர் திலகமாக இருந்த சிவாஜி கணேசனே எம்.ஆர்.ராதாவுடன் நடிக்கும்போது திணறுவாராம். அப்படிப்பட்ட மிக சிறந்த நடிகராக வலம் வந்த எம்.ஆர்.ராதா, நடிகரானதற்கு காரணமே ஒரு மீன் துண்டுதான் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?

பன்முக கலைஞர்

எம்.ஆர்.ராதா தொடக்கத்தில் ஒரு நாடக நடிகர். பல நாடக சபாக்களில் முன்னணி நடிகராக நடித்திருக்கிறார். ஒரு காலகட்டத்தில் சினிமாத்துறை வளரத்தொடங்கிய போது சினிமாவுக்குள்ளும் என்ட்ரி கொடுத்தார். நாடகத்துறையில் ஒரு கலக்கு கலக்கிய எம்.ஆர்.ராதா, சினிமாத்துறையையும் விட்டுவைக்கவில்லை. அக்காலகட்டத்தில் டாப் நடிகராக வலம் வந்தார். வில்லன், கதாநாயகன், குணச்சித்திர கதாப்பாத்திரம் என பல்வேறு பரிமாணங்களில் நடித்தவர்.

MR Radha

இந்த நிலையில் எம்.ஆர்.ராதா நாடகத்தில் நடிக்க தொடங்கிய கதை மிகவும் சுவாரஸ்யமானது. எம்.ஆர்.ராதா அவ்வளவாக படித்தவர் இல்லை. இளம் வயதில்  வேலைக்கு செல்லாம் ஊர் சுற்றிக்கொண்டிருந்தார். அப்போது ஒரு நாள் அவர் வீட்டில் சாப்பிடும்போது, அவரது அம்மா இவருக்கு ஒரு மீன் துண்டு வைத்தார். ஆனால் அவரது சகோதரருக்கு இரண்டு மீன் துண்டுகள் வைத்தாராம்.

கோபித்துக்கொண்டு வெளியேறிய எம்.ஆர்.ராதா

“ஏன், அவனுக்கு மட்டும் ரெண்டு மீன் துண்டு வச்சிருக்க?” என்று கேட்டபோது, “அவன் வேலைக்கு போறான். நீ சும்மா ஊர் சுத்திட்டுதானே இருக்க” என்று அவரது தாயார் கூறினாராம். இதனை கேட்டு கடுப்பான எம்.ஆர்.ராதா, கோபத்தில் சாப்பாட்டை அப்படியே போட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியேறி அப்படியே நடந்து எக்மோர் ரயில் நிலையத்திற்கு வந்து அங்கே அமர்ந்திருந்தாராம்.

அப்போது ஒருவர் எம்.ஆர்.ராதாவை பெட்டி தூக்கும் பையன் என்று நினைத்து, அவரிடம், “தம்பி இந்த பெட்டியை தூக்கமுடியுமா?” என கேட்டாராம். இவரும் பெட்டியை தூக்கிக்கொண்டு ரயில் பெட்டிக்குள் வைத்தாராம். அப்போது அந்த நபர், “தம்பி, உன் பெயர் என்ன? அப்பா அம்மா என்ன பண்றாங்க?” என கேட்டிருக்கிறார். அதற்குஎம்.ஆர்.ராதா தனது அம்மா மீது இருந்த கோபத்தில் “எனக்கு அம்மா அப்பான்னு யாருமே இல்லை” என கூறியிருக்கிறார்.

MR Radha

உடனே அந்த நபர், “அப்படின்னா என் கூட வர்ரியா?” என்று கேட்டிருக்கிறார். அதற்கு எம்.ஆர்.ராதா “தாராளமா வரேன்” என்று கூறியிருக்கிறார். அந்த நபரின் பெயர் ரங்கசாமி நாயுடு. அவர் அக்காலகட்டத்தில் சொந்தமாக ஒரு நாடக கம்பெனி நடத்திக்கொண்டிருந்தார். அவ்வாறுதான் எம்.ஆர்.ராதா அவரது நாடக கம்பெனியில் சேர்ந்து நடிக்க தொடங்கினார். இவ்வாறு எம்.ஆர்.ராதா ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகராக ஆனதற்கு அந்த ஒரு மீன் துண்டே காரணமாக இருந்திருக்கிறது.

இதையும் படிங்க: என் அப்பாவ பத்தி பேச அவருக்கு என்ன அருகதை இருக்கு? நான் வேஸ்ட்டா? ஆவேசமாக பேசிய ராதாரவி

Arun Prasad
Published by
Arun Prasad