நான் செய்ய நினைச்சதை என் தளபதி செஞ்சிட்டாரு!.. விஜய்யை பாராட்டிய புரட்சி தளபதி!..
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் தயாரிப்பாளருமான விஷால், அரசியல் மற்றும் சமூக விவகாரங்களில் தொடர்ந்து தனது கருத்துகளை வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக நடிகர் சங்க நிர்வாகப் பொறுப்பிலும், பொதுநலப் பிரச்சினைகளிலும் அவர் மேற்கொண்டு வரும் செயல்பாடுகள் கவனத்தை பெற்றுள்ளன.
இந்த நிலையில், தமிழகத்தில் புதிதாக முதலமைச்சராக பதவியேற்றுள்ள ஜோசப் விஜய்க்கு நடிகர் விஷால் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மேலும், மாநிலம் முழுவதும் 717 மதுக்கடைகளை மூடும் அரசின் நடவடிக்கையை அவர் வரவேற்றுள்ளார். மதுவிலக்கு தொடர்பான இந்த முடிவு சமூக மாற்றத்திற்கு வழிவகுக்கும் எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
முன்னதாக, 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டிருந்த விஷால், பிரசாரத்தின் போது கல்லூரி மாணவி ஒருவர் முன்வைத்த மதுக்கடை மூடல் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். வெற்றி பெற்றால் அந்த பகுதியில் உள்ள மதுக்கடையை மூட நடவடிக்கை எடுப்பேன் என அவர் உறுதியளித்திருந்தார்.
தேர்தல் முடிவுகள் அவருக்கு சாதகமாக அமையாத நிலையிலும், அந்த கோரிக்கையை முன்னெடுத்து அதிகாரிகளிடம் மனு அளித்து, மதுக்கடைகள் தொடர்பான பொதுமக்களின் கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
தற்போது தமிழக அரசின் 717 மதுக்கடைகள் மூடப்படும் நடவடிக்கையில், ஆர்.கே.நகர் தொகுதியில் அவர் முன்பு குறிப்பிட்ட கடையும் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், பல ஆண்டுகளாக அவர் முன்வைத்த கோரிக்கை நிறைவேறியதாக சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது.
முதலமைச்சரின் இந்த முடிவை வரவேற்ற நடிகர் விஷால், தனது நீண்டநாள் சமூக கோரிக்கைகள் நிறைவேறியிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும், அரசின் இந்த நடவடிக்கைக்கு பாராட்டுகள் எனவும் தெரிவித்துள்ளார்.
