Connect with us

Cinema History

கண்களில் நவரசத்தையும் காட்டும் தமிழ்சினிமாவின் உன்னத கலைஞன்… இது எந்தப் படத்தில் தெரியுமா?

ஒரு நடிகன் என்றால் வசன உச்சரிப்பு தெளிவாக இருக்க வேண்டும். கண்களால் பேசத் தெரிந்திருக்க வேண்டும். முகபாவனைகள் அவன் சொல்ல வந்த கருத்தை சொல்லும் முன் குறிப்புணர்த்த வேண்டும். அவன் தான் சிறந்த நடிகன்.

கலைஞன் என்றால் அதுக்கும் மேல. அவன் இயக்குனர் சொல்லிக்கொடுப்பதை விட ஒரு படிக்கும் மேலாக தனது தனித்துவத்தையும் கலந்து சிறப்புற செய்வான். அவன் தான் உன்னத கலைஞன். இதற்கு ஆகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குபவர் நடிகர் திலகம் சிவாஜிகணேசன்.

sivaji1

இவரது படங்களைப் பார்த்தால் நமக்கு இவர் படத்தில் நடித்துள்ளாரா அல்லது வாழ்ந்து காட்டியுள்ளாரா என்று எண்ணத் தோன்றும். அத்தனையும் அவ்வளவு யதார்த்தமானது. இயல்பாகவே எந்த ஒரு கடினமான காட்சியையும் எளிமையாக நடித்து அசத்துவது சிவாஜி தான். அவர் கலைத்தாயின் தவப்புதல்வன். பிற நடிகர்களுக்கு சிம்ம சொப்பனம். இவருக்கு நிகர் இவர் தான்.

sivaji6

இவரது உடல் உறுப்புகள் ஒவ்வொன்றையும் நடிக்க வைப்பார். இவரது கண்கள் மட்டுமே நவரசத்தையும் கொட்டி விடும் சக்தி வாய்ந்தது. அது எந்தப் படம் என்று நீங்கள் கேட்பீர்களானால் ஏமாந்து போவீர்கள். எல்லாப் படத்திலும் தான் அதுபோன்ற நவரசங்களை நாம் காண முடியும். சற்று உன்னிப்பாகக் கவனித்தால் இது தென்படும். அதுதான் நடிகர் திலகத்தை புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது.

அவருக்குப் பின் வந்த நடிகர்கள் எல்லாம் நடிக்கும்போது சிவாஜியின் சாயல் எங்காவது ஒரு இடத்திலாவது வந்து விடும். இது தவிர்க்க முடியாதது. ஏனென்றால் அவர் தான் யதார்த்தத்தின் உச்சிக்கே சென்று விட்டார் அல்லவா? அதையும் தாண்டி வேறு எந்தக்கலைஞனாலும் அப்படி ஒரு யதார்;த்தமான நடிப்பைக் கொடுக்க முடியாதல்லவா? அப்படி கொடுத்தாலும் அதில் அந்த இமயத்தின் சாயல் தெரியத்தானே செய்யும்?

Parasakthi

பராசக்தி படத்தில் என்ன முதல் படம் போலவா நடித்துள்ளார்? கோர்ட் சீனில் எவ்வளவு தெளிவாக நடித்துள்ளார்? பல நூறு படங்கள் நடித்த நடிகரால் கூட இவ்வளவு நுணுக்கமாக நடித்திருக்க முடியாது. முதல் படத்திலேயே காட்சிக்கு காட்சி கைதட்டல் வாங்கி விட்டார். மனோகரா படத்தில் இவர் கலைஞரின் கைவண்ணத்தில் உருவான வசனத்திற்கு உயிர் கொடுத்துவிட்டார். தில்லானா மோகனாம்பாள் படத்திற்காக சிறப்பு பயிற்சி எடுத்து கற்றுக் கொண்டு நாதஸ்வர வித்வானாகவே வாழ்ந்துள்ளார்.

Thillana Mohanambal

பாகப்பிரிவினை படத்தை எடுத்துக் கொண்டால் படத்தில் இவரது ஒரு கை தான் வேலை செய்யும். இன்னொரு கை வேலை செய்யாது. அதை படத்தின் இறுதி வரை மிகச்சரியாக செய்து அதற்கேற்ப உடல் அசைவுகளையும், கண்களால் பேசியும், குரலில் ஏற்ற இறக்கங்களையும் நேர்த்தியாகக் காட்டியிருப்பார். நவராத்திரி படத்திற்கு ஏற்றாற்போல் நவரசங்களையும் காட்டியிருப்பார்.

sivaji7

சின்ன சின்ன காட்சிகளையும் ரசித்துப் பார்த்தால் கோபம், தாபம், விரகம், சந்தோஷம், மகிழ்ச்சி, துன்பம், கவலை, சோர்வு, அசதி, கம்பீரம், துணிவு, விரக்தி, திருப்தி, அதிருப்தி என அத்தனை உணர்வுகளையும் உணர்வுப்பூர்வமாகத் தன் கண்களிலேயேக் காட்டி விடும் ஆற்றல் படைத்தவர் தான் சிவாஜிகணேசன்.

sivaji5

அதனால் தான் அவருக்கு செவாலியே சிவாஜி என்ற பட்டமே கொடுக்கப்பட்டது. இதை நாம் இவரது படங்களில் ஏதாவது ஒன்றை எடுத்து ஆராய்ந்து பார்த்தாலே தெரிந்து விடும். பார்ப்பதற்குச் சாதாரணமாகத் தான் நடித்தாற்போல் தெரியும்.

ஆனால் அது அசுரத்தனமான நடிப்பு என்பது நமக்குப் போகப் போகத் தான் தெரியும். உதாரணத்திற்கு பாசமலர் படத்தின் ஆரம்பக்காட்சிகளில் சாதாரணமாகத் தான் நடித்திருப்பார். படம் போகப் போக நாமும் அதனுடனே பயணம் செய்ய ஆரம்பித்து விடுவோம். படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் கண்களில் இருந்து நம்மையும் அறியாமல் தாரை தாரையாகக் கண்ணீர் வடித்துக் கொண்டிருப்போம்.

sivaji4

ஏ.பி.நாகராஜனின் இயக்கத்தில் உருவான திருவருட்செல்வர் படத்தில் இவர் நடிக்கும்போது இவரது வயது 39 தான். ஆனால் இவர் 80 வயது முதியவரான அப்பூதியடிகள் நாயனராக நடித்து அசத்தியிருப்பார். ஒரு முதியவருக்கே உரிய நடை, உடை, பாவனை இருக்கும். குரல், கண்ணசைவு, தள்ளாட்டம் என்று அனைத்து நுணுக்கமான அசைவுகளையும் திறம்படச் செய்திருப்பார்.

Sivaji2

திருவிளையாடல், சரஸ்வதி சபதம், கர்ணன், வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற படங்களில் இவர் தனி முத்திரை பதித்திருப்பார். வசந்தமாளிகை படத்தைப் பார்த்தால் காதலர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளமாக உள்ளன. பார்த்தால் பசி தீரும் படத்தில் இவரது நடிப்பு நம்மை பரவசப்படுத்தும்.

தமிழ்சினிமா உலகை எடுத்துக் கொண்டால் கி.மு…கிபி…என்பது மாதிரி சிவாஜியின் வருகைக்குப் பின்னால் சிமு…. சிபி என்று எடுத்துக் கொள்ளலாம். அதாவது சிவாஜிக்கு முன்…சிவாஜிக்குப் பின்….எப்படி இருந்தது தமிழ்சினிமா என்று பெரிய ஆராய்ச்சியே நடத்திவிடலாம்.

உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களின் உள்ளங்களைக் கவர்ந்த…கவர்ந்து கொண்டிருக்கிற இவர் ஒரு கலையுலகின் தவப்புதல்வன்…பிதாமகன்… தெய்வப்பிறவி என்று சொன்னால் மிகையில்லை.

google news
Continue Reading

More in Cinema History

To Top