அபூர்வ சகோதரர்கள் படத்தில் நடந்த பல மாற்றங்கள்!.. மொத்த படமே மாறிப்போச்சி!…

by சிவா |   ( Updated:2025-05-06 08:11:56  )
apoorva
X

#image_title

கமல்ஹாசன் நடித்து இப்போது வரை பேசப்படும் படங்களில் அபூர்வ சகோதரர்கள் முக்கியமானது. ஏனெனில், கிராபிக்ஸ் தொழில்நுட்பம் பெரிதாக இல்லாத போது படம் முழுக்க குள்ளமாக நடித்து அசத்தியிருப்பார் கமல். அவர் எப்படி இப்படி நடித்தார் என்பது இப்போது வரை இயக்குனர் பலருக்குமே புரியாத ஒன்றாக இருக்கிறது.

அதோடு, இரண்டு கமல்களுக்கும் குரலில் வித்தியாசமும் காட்டியிருப்பார் கமல். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்தை சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கியிருந்தார். கமலும், மறைந்த எழுத்தாளர் கிரேஸி மோகனும் இணைந்து இப்படத்திற்கான கதை, திரைக்கதையை உருவாக்கியிருந்தனர். கமலோடு, ஸ்ரீவித்யா, மனோரமா, கவுதமி, ரூபினி, ஜனகராஜ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

#image_title

இந்த படத்தில் வில்லனாக நாகேஷ் நடித்திருந்தார். மேலும், நாசர், டெல்லி கணேஷ், ஜெய் சங்கர் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். போலீஸ் அதிகாரியான கமலை கொன்றுவிட்டு நிறைமாத கர்ப்பிணியான அவரின் மனைவி ஸ்ரீவித்யாவுக்கு நாகேஷ் கும்பல் விஷம் கொடுக்க அவருக்கு பிறக்கும் ஒரு குழந்தை உயரம் குறைபாடு உள்ளவராக பிறக்கிறது. மற்றொரு குழந்தை மனோராமாவிடம் வளர்கிறது. இரு கமலும் ஒன்று சேர்ந்து வில்லனை எப்படி பழிவாங்கினார்கள் என்பதுதான் படத்தின் கதை.

இப்படத்தில் இளையராஜாவின் இசையில் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தது. படமும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படம் உருவான போது என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்தது என தெரிந்துகொள்வோம்.

#image_title

படத்தை முடித்து கதாசிரியர் பஞ்சு அருணாச்சலத்திடம் காட்டியபோது அவர் கதையையே மாற்ற சொன்னார். எனவே, கதையை மாற்றி மீண்டும் நிறைய காட்சிகளை எடுத்தார்கள். கமலின் வளர்ப்பு அம்மாவாக முதலில் நடித்தவர் காந்திமதி. அவரை வைத்து ஒரு பாடலையும் எடுத்திருந்தார்கள். அதன்பின் கதை மாறியதும் அந்த வேடத்தில் மனோரமா நடித்தார்.

முதலில் அப்பா சேதுபதி வேடத்தில் நடிக்கவிருந்தவர் மலையாள நடிகர் பிரேம் நசீர். அப்போது அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததால் அந்த வேடத்தில் கமலே நடித்தார். அதேபோல், கமலின் அம்மா வேடத்தில் நடிக்க நடிகை லட்சுமியை கேட்டனர். ‘கமலுக்கு நான் அம்மாவா?… எனக்கு அப்பாவா கமல் நடிப்பாரா?.. என கோபப்பட்டு நடிக்க மறுத்துவிட்டார். அதன்பின்னரே ஸ்ரீவித்யா நடித்தார்.

இப்படி பல மாற்றங்கள் செய்து 1989ம் வருடம் வெளியான அபூர்வ சகோதரர்கள் படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றதோடு தமிழ் சினிமாவின் முக்கிய படங்களில் ஒன்றாக இப்போதும் இருக்கிறது.

Next Story