கமலை ரஜினியுடன் சேர்த்து வைக்க மணிரத்னம் எடுத்த முயற்சி… கடைசியில் இப்படி ஆகிடுச்சே!!
உலக நாயகன் என்று போற்றப்படும் கமல்ஹாசன், இன்றோடு தனது 68 ஆவது வயதை பூர்த்தி செய்கிறார். இதனிடையே கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று கமல்ஹாசனின் 234 ஆவது திரைப்படத்தின் அறிவிப்பு வெளிவந்தது. இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு ஆச்சரியத்தையும் உற்சாகத்தையும் ஒரு சேர தந்துள்ளது.
அதாவது கமல்ஹாசன் தனது 234 ஆவது திரைப்படத்தில் மணி ரத்னத்துடன் கைக்கோர்க்கிறார். இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். மேலும் இத்திரைப்படத்தை மணி ரத்னம், உதயநிதி ஸ்டாலின், கமல்ஹாசன் ஆகிய மூவரும் தயாரிக்கின்றனர். வருகிற 2024 ஆம் ஆண்டு இத்திரைப்படம் வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மணிரத்னம் இதற்கு முன் கமல்ஹாசனை வைத்து “நாயகன்” திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படம் கல்ட் கிளாசிக் திரைப்படமாக காலத்துக்கும் பேசப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 35 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசனும் மணிரத்னமும் மீண்டும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதே போல் “இந்தியன்”, “தெனாலி” போன்ற திரைப்படங்களுக்குப் பிறகு கமல்ஹாசனின் 234 ஆவது திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இவ்வாறு பல சுவாரஸ்யமான விஷயங்களை கொண்ட இத்திரைப்படத்திற்காக சினிமா ரசிகர்கள் வெறிக்கொண்டு காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் கமல்ஹாசனின் 234 ஆவது திரைப்படத்தை குறித்து ஒரு சூடான தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அதாவது இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோரை ஒன்றாக நடிக்க வைக்க வேண்டும் என பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாம். ஆனால் ரஜினிகாந்த் இந்த முயற்சிக்கு மறுப்பு தெரிவித்துவிட்டாராம். ஆதலால்தான் கமல்ஹாசனை வைத்து இத்திரைப்படத்தை இயக்குகிறாராம் மணிரத்னம்.
கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் கிட்டத்தட்ட 16 திரைப்படங்களில் ஒன்றாக இணைந்து நடித்துள்ளனர். “நினைத்தாலே இனிக்கும்” திரைப்படம்தான் இருவரும் இணைந்து நடித்த கடைசி திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.