“தமிழ் வைரமுத்துக்கு மட்டுமே சொந்தமில்லை..” மௌனத்தை உடைத்த மணி ரத்னம்..

மணி ரத்னம் இயக்கிய “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் முதல் பாகம் வருகிற 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் போன்ற ஐந்து மொழிகளில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது.
இத்திரைப்படத்தில் சீயான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரபு, சரத்குமார், பார்த்திபன், ஜெயராம், விக்ரம் பிரபு என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.
“பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் அறிவிப்பு வெளிவந்தபோதே அத்திரைப்படத்தில் வைரமுத்து பாடல்கள் எழுதுவாரா என்ற கேள்வியும் எழுந்தது. “Me too” சர்ச்சையில் வைரமுத்து சிக்கியிருந்ததால் இந்த கேள்வியை பலரும் மணி ரத்னத்திடம் கேட்டனர். ஆனால் அதற்கு அப்போது அவர் பதிலளிக்கவில்லை.
இந்த நிலையில் இத்திரைப்படத்தின் புரோமோஷன் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக சமீபத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் மணி ரத்னத்திடம் ஒரு நிரூபர் “வைரமுத்துவை இந்த விழாவிற்கு அழைக்காததற்கு என்ன காரணம்?” என கேட்டிருந்தார்.
அதற்கு பதிலளித்த மணி ரத்னம் “தமிழ் மிகவும் செழிப்பான மொழி. மிகவும் பழமையான மொழி. அது எல்லாருக்கும் ஒரு பொதுவான மொழி. வைரமுத்துவுடன் நான் பல திரைப்படங்களில் பணியாற்றியிருக்கிறேன். ஆனால் இப்போது தமிழில் சிறப்பாக பாடல்கள் எழுதக்கூடிய புதிதாக பல திறமைசாலிகள் வருகிறார்கள். அது போல் தான் இதுவும்” என கூறி அந்த கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
மணி ரத்னம்-வைரமுத்து-ஏ ஆர் ரஹ்மான் கூட்டணி மிகவும் வெற்றிகரமான கூட்டணி ஆகும். இவர்களின் கூட்டணியில் தாறுமாறான ஹிட் பாடல்கள் உருவாகியுள்ளன. அதே போல் “பொன்னியின் செல்வன்” திரைப்படத்திலும் வைரமுத்து பாடல் எழுதுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இத்திரைப்படத்திற்கு இளங்கோ கிருஷ்ணன், சிவா ஆனந்த், கிரித்திகா நெல்சன் போன்ற அறிமுக பாடலாசிரியர்களே இத்திரைப்படத்தில் பெரும்பான்மையான பாடல்களை எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.