“ரஜினியை நடிக்க வச்சா நான் மாட்டிக்குவேன்”.. ஒரு வழியாக உண்மையை உடைத்த மணிரத்னம்
மணிரத்னம் இயக்கிய “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் முதல் பாகம் வருகிற 30 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளிவருகிறது.
கடந்த 60 வருடங்களாக தமிழ் சினிமாவின் கனவாக இருந்த திரைப்படம் தற்போது மணிரத்னம் மூலம் நிஜமாகியுள்ளது. எம்ஜிஆர், கமல்ஹாசன் என பல ஜாம்பவான்கள் முயற்சி செய்தும் இத்திரைப்படத்தை எடுக்கமுடியவில்லை. தடங்கள் மேல் தடங்கள் வந்தது.
இது குறித்து இயக்குனரும் நடிகருமான மனோபாலா ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அதாவது மனோபாலாவே மூன்று முறை பொன்னியின் செல்வனை இயக்க முயன்று உடல்நிலை சரியில்லாமல் போனதாம். இது போல் பொன்னியின் செல்வனை யார் இயக்க முயல்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் எதாவது தடைகள் வந்திருக்கிறது.
இவ்வாறு அபசகுணத்திற்கான விஷயமாக மாறிப்போன பொன்னியின் செல்வனை கடந்த 2008 ஆம் ஆண்டு திரைப்படமாக எடுக்க முடிவு செய்தார் மணிரத்னம். ஆனால் அதன் பின்னும் இரண்டு முறை தடங்கள் ஏற்பட்டு மூன்றாவது முறையாக முயன்று கடந்த 2019 ஆம் ஆண்டு இத்திரைப்படத்தின் பணிகள் தொடங்கின. ஆனால் இடையில் கொரோனா உரடங்கில் படப்பிடிப்பு பாதியிலேயே நின்றது. எனினும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டபின் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது. இந்த நிலையில் தற்போது இத்திரைப்படம் வெளிவர தயாராக உள்ளது.
சமீபத்தில் “பொன்னியின் செல்வன்” முதல் பாகத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர். அப்போது பேசிய ரஜினிகாந்த் “நான் இத்திரைப்படத்தில் பெரிய பழுவேட்டரையராக நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டேன்” என கூறினார்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பிரபல பத்திரிக்கைக்கு இயக்குனர் மணிரத்னம் பேட்டியளித்தார். அப்போது “ரஜினி பழுவேட்டரையராக நடிக்க ஆசைப்பட்டிருக்காரே, ஏன் அவரை தவறவிட்டுவிட்டீர்கள்?” என அவரிடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த மணிரத்னம் “அவர்பாட்டுக்குச் செல்லிவிட்டு போய்விட்டார். அவருக்கு பெரிய ரசிகர் கூட்டம் உண்டு. இந்த பழுவேட்டரையர் கதாப்பாத்திரத்திற்கு ரஜினியை நடிக்க வைத்திருந்தால் நான்தான் மாட்டிக்குவேன். ஏனென்றால் கதை வேறு மாதிரி மாறியிருக்கும்.
ரஜினிகாந்த் ஒரு சூப்பர் ஸ்டார். ரஜினிகாந்தை கூட்டி வந்து ‘ரோஜா’ எடுக்கமுடியுமா? அவரிடம் அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்பதை தள்ளி வைத்துவிட்டு எதுவும் என்னால் செய்திடமுடியாது.” என மிகவும் ஓபனாக கூறியுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ஒரு திரைப்படத்தில் நடிக்கிறார் என்றால் அவருக்காகவே சில காட்சிகள் மாற்றப்படுவதும், உருவாக்கப்படுவதும் வழக்கம்தான். அந்த வகையில்தான் மணிரத்னம் மிகவும் தெளிவாக யோசித்திருக்கிறார் என இதில் இருந்து தெரியவருகிறது.