கமலுக்கு இல்ல...எனக்குதான் ஜே...நாயகன் பாத்து ரஜினி சொன்னது இதுதானாம்!....
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சூப்பர்ஹிட் படம் மனிதன். இந்தப் படத்தின் விளம்பரம் அந்தக் காலத்தில் தூர்தர்ஷன் சானலில் சக்கை போடு போட்டது. ரஜினிகாந்த் தரையில் கால் படாமல் சண்டைக்காட்சியில் நடித்து அசத்தியிருப்பார்.
அத்தோடு பஞ்ச் டயலாக்கும் பேசுவார். இந்தப் படத்தைத் தயாரித்த ஏவிஎம் பட அதிபர் சரவணன் இந்தப்படம் பற்றி என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்.
ஓர் எழுத்தாளர் எழுதிய கதையைத் தான் நாங்க முதலில் படமாக எடுக்கலாம்னு இருந்தோம். அவரிடம் இதுபற்றிப் பேசியபோது கதை, திரைக்கதை, வசனம் என்று டைட்டிலில் என் பெயர் வர வேண்டும் என்றார்.
நாங்கள் திரைக்கதையை பஞ்சு அருணாசலம் தான் அமைக்க இருக்கிறார். அதனால் கதை, வசனம் உங்கள் பெயரைத் தான் போடுகிறோம். ஆனால் திரைக்கதை பஞ்சு அருணாசலம் தான் என்றோம்.
அந்த எழுத்தாளரோ இதற்கு மறுத்துவிட்டார். பின்னர் அமாவாசையில் பிறந்த ஒருவனின் கதை என்று குருநாதன் சொல்லிய ஒரு நாட்டை டெவலப் செய்து தான் பஞ்சு அருணாசலம் இந்த கதையை உருவாக்கினார். உருவாக்கினார். கதையில் மாமனாரைக் காப்பாற்ற ஒரு பெண் விரலை சீவிக் கொள்வது போன்ற ஒரு காட்சி வரும்.
இதைப் போல முந்தானை முடிச்சு படத்திலும் வந்தது. வேண்டாம் என்று பஞ்சு அருணாசலம் சொன்னார். அதுபற்றி ஒன்றும் ஆகாது. இருக்கட்டும் என்று நான் உறுதியாகச் சொன்னேன்.
விளம்பரங்களிலும் அந்தக் காட்சியைப் பயன்படுத்தினோம். அந்தக் கதாபாத்திரம் மீது ஒரு அனுதாபம் உண்டானது. சந்திரபோஸின் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர்ஹிட்டானது. ரஜினியின் படமாக இந்தப்படம் அமைந்தது.
உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் நாங்க கமலை சகலகலாவல்லவன் என்று எப்படி அவருக்குப் பொருத்தமான பெயரை வைத்தோமோ, அதே போல ரஜினிக்கு அவர் ஒரு அருமையான மனிதர் என்பதால் மனிதன் என்று பெயர் வைத்தோம். ஆனால் அந்தப் பெயர் வேண்டாம் என்றார்கள் விநியோகஸ்தர்கள்.
ஏன் என்றால் டி.கே.எஸ்.சகோதரர்கள் போட்ட மனிதன் என்ற நாடகம் ரொம்பவே பாப்புலரானது. அதே பெயரில் எடுக்கப்பட்ட படமோ தோல்வியைக் கண்டுவிடக்கூடாது என அந்தத் தலைப்பு வேண்டாம் என சென்டிமென்டாகச் சொன்னார்கள். கவலைப்படாதீர்கள் ஒன்றும் ஆகாது. மனிதன் என்ற பெயரே இருக்கட்டும் என்று நான் உறுதியாகச் சொன்னேன். படம் வெள்ளிவிழாவைக் கண்டது.
அந்தப்படத்தில் கண் தானத்தைப் பற்றி ரஜினிகாந்த் வலியுறுத்திய காட்சிகள் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தன. பலர் கண்தானம் செய்யப் போட்டி போட்டுக் கொண்டு முன்வந்தனர்.
மனிதன் படம் எடுத்து முடித்தோம். அப்போது கமலின் நாயகன் படமும் வெளியானது. ரஜினி நாயகன் பார்த்தார். ரொம்ப பிரமாதம் என்றார். அப்புறம் என்ன கமலுக்கு ஜே சொல்லிவிட வேண்டியது தானே என்றார். நீங்க முதல்ல மனிதன் படம் பாருங்க என்றார் தயாரிப்பு நிர்வாகி நாகப்பன். படம் பார்த்தார். வெளியே வந்த ரஜினி எனக்கு தான் ஜே என்றார் சிரித்த முகத்துடன்.