மனோகரா படத்தில் முதலில் சிவாஜி - கருணாநிதி ரெண்டு பேருமே இல்லை... எப்படி மாறிச்சு தெரியுமா?!.
சிவாஜியின் நடிப்பில் 1954ம் வருடம் வெளியான திரைப்படம் மனோகரா. இந்த படத்தில் சிவாஜியின் அம்மாவாக கண்ணாம்பாள் நடித்திருப்பார். இந்த படத்தில் இடம் பெற்ற ‘பொறுத்தது போதும் மனோகாரா பொங்கியெழு’ என்கிற வசனம் அப்போது மிகவும் பிரபலம். தாய் பாசத்தில் தவிக்கும் வாலிபனாக சிவாஜி சிறப்பான நடிப்பை இப்படத்தில் வழங்கியிருந்தார்.
மேலும், டி.ஆர்.ராஜகுமாரி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், பண்டரிபாய் என பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர். இப்படத்தை எல்.வி.பிரசாத் இயக்கியிருந்தார். இப்படத்திற்கு திரைக்கதை மற்றும் வசனத்தை கருணாநிதி எழுதியிருந்தார். இந்த படத்தில் இடம் பெற்ற வசனங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
ஆனால், இந்த திரைப்படம் முதலில் துவங்கப்பட்டபோது அதில் சிவாஜி, கருணாநிதி மற்றும் இயக்குனர் எல்.வி.பிரசாத் என யாருமே அதில் இல்லை என்று சொன்னால் நம்ப முடிகிறதா!.. ஆனால் அதுதான் உண்மை.
மனோகரா கதை முதலில் நாடகமாகத்தான் வெளியானது. அதில், கே.ஆர்.ராமசாமி என்பவர் மனோகரனாக நடித்திருந்தார். இவர் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். எனவே, அவரை கதாநாயகனாகவும், அப்போது பிரபல எழுத்தாளராக இருந்த இளங்கோவன் வசனம் எழுதுவது எனவும், படத்தை இயக்குவதற்கு ஏ.எஸ்.சாமியையும் ஜூபிடர் பிக்சர்ஸ் ஒப்பந்தம் செய்தனர். ஆனால், சில காரணங்களால் அது டேக் ஆப் ஆகவில்லை.
அதன்பின்னரே சிவாஜி, கருணாநிதி, எல்.வி.பிரசாத் ஆகியோரை வைத்து இந்த படத்தை எடுத்துள்ளனர். இந்த படம் ரசிகர்களை கவர்ந்து பெரிய வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.