நடிகர் விஜய் கடந்த இரண்டு வருடங்களாக அரசியல்வாதியாக அரசியல் களத்தில் செயல்பட்டு வருகிறார். அவ்வப்போது பொதுக்கூட்டம் நடத்தில் அதில், திமுகவுக்கு எதிராக ஆவேசமாக பேசுகிறார். ஒருபக்கம் சிபிஐ விசாரணை, ஜனநாயகன் பட பிரச்சனை என அவரை சுற்றி பிரச்சினைகளும் இருக்கிறது. எல்லாவற்றையும் சமாளித்து வெளியே வந்தால்தான் விஜய் அரசியல்வாதியாக ஜொலிக்க முடியும்.
2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் தனித்துப் போட்டியிடுவார் என தெரிகிறது. ஏனெனில் ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு கொடுக்கிறோம் என விஜய் சொல்லியும் இதுவரை எந்த கட்சியும் தவெகவுடன் கூட்டணி அமைக்கவில்லை. திமுகவை தோற்கடிக்கவேண்டும் என நினைக்கும் விஜய் அதிமுக கூட்டணிக்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விஜய் அதில் ஆர்வம் காட்டவில்லை.
இந்நிலையில்தான், தமிழக வெற்றி கழகத்திற்கு விசில் சின்னத்தை ஒதுக்கியிருக்கிறது தேர்தல் ஆணையம். ஏற்கனவே நடிகர் பிரகாஷ்ராஜ் 2019ம் வருடம் கர்நாடகாவில் சுயேட்சையாக போட்டியிட்டபோது அவருக்கு விசில் சின்னம் கொடுக்கப்பட்டது.
அதேபோல் 2021ம் வருடம் காமெடி நடிகர் மயில்சாமி சென்னையில் ஒரு தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டபோதும் அவருக்கு விசில் சின்னம் கொடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
