ஒரே ஆண்டில் 9 படங்களில் நடித்த புரட்சித்தலைவர்...இவர் உண்மையிலேயே தனிப்பிறவி தான்...!
தமிழ்த்திரை உலகில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டு தனி முத்திரை பதித்தவர் மக்கள் திலகம் என்று எல்லோராலும் போற்றப்படும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தான்.
தன்னை சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் ஒரு ஹீரோவாக மாற்றிக் கொண்டார். நன்னடத்தையும் நேரிய கொள்கையும் தான் இவரது பிளஸ் பாயிண்ட்.
பசித்தோருக்கு எல்லாம் வாரி வழங்கும் வள்ளலாக இருந்ததால் ஏழை எளியோராலும் மிகவும் போற்றப்பட்டார். அதனால் அரசியலிலும் தனக்கென தனி இடத்தைப் பிடித்து மக்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றார்.
அவரது கொள்கை வழி நின்று திரையுலகிலும் அரசியலிலும் மகத்தான இடத்தைப் பெற்றவர் அம்மா என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட செல்வி ஜெயலலிதா.
எம்ஜிஆரின் வழிநின்று சினிமாவிலும், அரசியலிலும் சக்கை போடு போட்டார். எம்ஜிஆரின் கொள்கை பரப்பு செயலாளராக இருந்தார். அப்போது இருந்தே அரசியலில் சுடர்விட ஆரம்பித்து விட்டார். இருபெரும் தலைவர்களும் இணைந்து நடித்த படங்கள் அனைத்துமே அபாரம் தான். அவற்றைப் பற்றிப் பார்க்கலாமா...
புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கு சரியான ஜோடி என்றால் ஜெயலலிதா தான் என அவரது ரசிகர்களே சொல்வர். ஆயிரத்தில் ஒருவன் படத்தில் தான் எம்ஜிஆர் ஜெயலலிதா ஜோடி முதலில் ஒன்று சேர்ந்தது. இந்தப்படம் 1965ல் வெளியானது.
எம்ஜிஆரின் திரையுலக வாழ்வில் திருப்பம் ஏற்பட்டது என்றால் அது இந்த ஆண்டில் தான். பி.ஆர்.பந்துலு இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் படம் பட்டி தொட்டி எங்கும் சக்கை போடு போட்டது.
புதுமுக நடிகை ஜெயலலிதாவைக் கதாநாயகியாக நடிக்க வைக்க டைரக்டர் பி.ஆர்.பந்துலு விரும்பியதும் உடனே எம்ஜிஆர் ஒப்புக்கொண்டார். அதன் பின்னர் அதே ஆண்டில் கன்னித்தாய் படத்தில் எம்ஜிஆருடன் இணைந்து ஜெயலலிதா நடித்தார். அதுவும் மாபெரும் வெற்றி பெற்றது.
தொடர்ந்து சந்திரோதயம், முகராசி, தனிப்பிறவி, தாய்க்குத் தலைமகன், அரசகட்டளை, காவல்காரன், ரகசிய போலீஸ் 115, தேர்த்திருவிழா, குடியிருந்த கோயில், கண்ணன் என் காதலன், புதிய பூமி, கணவன், ஒளிவிளக்கு, மாட்டுக்கார வேலன், நம் நாடு, அடிமைப்பெண், என் அண்ணன், தேடி வந்த மாப்பிள்ளை, எங்கள் தங்கம், குமரிக்கோட்டம், ராமன் தேடிய சீதை என்று எம்ஜிஆர் - ஜெயலலிதா ஜோடி தமிழ்த்திரை உலகில் வெற்றிக்கொடி நாட்டியது.
1966ல் அன்பே வா, முகராசி, நாடோடி, சந்திரோதயம், நான் ஆணையிட்டால், பறக்கும் பாவை, பெற்றால் தான் பிள்ளையா, தாலி பாக்கியம், தனிப்பிறவி என 9 படங்களில் நடித்து தமிழ்த்திரை உலகில் தன்னகரில்லா இடத்தைப் பெற்றார் புரட்சித்தலைவர் எம்ஜிஆர்.