Connect with us

Cinema History

எம்.ஜி.ஆர் – சிவாஜி இணைந்து நடித்த ஒரே படம் – எப்படி உருவானது தெரியுமா?

திரையுலகில் இருதுருவங்களாகக் கொடிகட்டிப் பறந்த எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி இணைந்து நடித்த ஒரே ஒரு படம் கூண்டுக்கிளி. டி.ஆர்.ராமண்ணா இயக்கிய அந்தப் படத்துக்குள் எப்படி இரண்டுபேரும் வந்தார்கள் தெரியுமா?

சிவாஜி, பராசக்தி படம் மூலம் மிகப்பெரிய திரை வெளிச்சம் பெற்றிருந்த நேரம் அது. அதன்பிறகு மிகக் கவனமாகத் திரைப்படங்களைத் தேர்வு செய்து நடித்து வந்தார். அந்த காலகட்டத்தில்தான் எம்.ஜி.ஆரும் முன்னணி நடிகராக வளர்ந்து வந்தார். இளம் நடிகர்கள் இருவரும் தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர்களாக வளர்ந்துவந்த நேரத்தில், அவர்களை வைத்து ஒரு படம் எடுக்க டி.ஆர்.ராமண்ணா முடிவு செய்தார்.

எம்.ஜி.ஆர்

தமிழ் சினிமாவின் முதல் கவர்ச்சிக் கன்னி என்று அறியப்பட்ட டி.ஆர்.ராஜகுமாரியின் தம்பிதான் இந்த ராமண்ணா. இவர் ஏற்கெனவே எடுத்திருந்த `வாழப்பிறந்தவள்’ படம் தோல்விப் படமாக அமைந்தது. இதையடுத்து எழுத்தாளர் விந்தன் எழுதியிருந்த கூண்டுக்கிளி என்கிற புரட்சிகரமான கதையைப் படமாக்க ராமண்ணா விரும்பினார். அதேநேரம், எம்.ஜி.ஆர் – சிவாஜி என்கிற இரண்டு இளம் முன்னணி கதாநாயகர்களை வைத்து எடுத்தால்தான் புரட்சிகரமான அந்தக் கதையை மக்களுக்குக் கொண்டு சேர்க்க முடியும் என்று நம்பினார்.

இதையடுத்து, அவர்கள் இருவரில் முதலில் எம்.ஜி.ஆரை அணுக முடிவு செய்தார். எம்.ஜி.ஆரின் நெருங்கிய நண்பரான கே.வி.மகாதேவனை அழைத்துக் கொண்டு அவரை நேரில் சந்திக்கப் போன டி.ஆர்.ராமண்ணாவுக்கு எம்.ஜி.ஆரிடம் இருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லை. `யோசிக்க கொஞ்சம் கால அவகாசம் வேண்டும்` என்பதே எம்.ஜி.ஆரிடம் இருந்து வந்த பதில். இதனால், டி.ஆர்.ராமண்ணா நம்பிக்கை இழந்துவிட்டாராம்.

இந்தநிலையில், திடீரென ஒருநாள் டி.ஆர்.ராமண்ணாவின் அலுவலகத்துக்கு எம்.ஜி.ஆர் வந்திருக்கிறார். அவரிடம் நான் உங்கள் படத்தில் நடிக்கிறேன் என்றது, ஆயிரம் ரூபாயை முன்பணமாகக் கொடுக்க டி.ஆர்.ராமண்ணா முன்வந்திருக்கிறார். ஆனால், அதை ஏற்க மறுத்த எம்.ஜி.ஆர் ஒரு ரூபாய் மட்டும் முன்பணமாகக் கொடுங்கள் என்று தேதிகளை இறுதி செய்துவிட்டுச் சொல்லுங்கள் என்று கூறிவிட்டுச் சென்றிருக்கிறார். இதையடுத்து, சிவாஜியை அணுக தனது தயாரிப்பு நிர்வாகி ஒருவருடன் ஆலோசனை செய்திருக்கிறார் டி.ஆர்.ராமண்ணா.

இந்த சூழ்நிலையில் யாரும் எதிர்பார்க்காமல் டி.ஆர்.ராமண்ணா அலுவலகத்துக்கு வந்திருக்கிறார் சிவாஜி. இதனால், அகமகிழ்ந்துபோன ராமண்ணா, விஷயத்தை விளக்க முற்பட்டிருக்கிறார். ஆனால், அவரை கையமர்த்திய சிவாஜி, எல்லா தகவல்களும் கேள்விப்பட்டுதான் வந்திருக்கிறேன் என்று சொல்லி இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். தேதிகள் எப்போது ஒதுக்கணும் என்று கேட்ட நிலையில், தயாரிப்பு நிர்வாகி சம்பளம் குறித்து தயங்கி தயங்கி பேசத் தொடங்கியிருக்கிறார்.

அப்போது முன்பணமாக ஒரு தொகையைக் கொடுக்க முன்வந்தபோது, சம்பளம் பற்றி பின்னர் பேசிக்கொள்ளலாம். உங்ககிட்ட இருந்து கை நிறைய வெள்ளிக் காசுகளை மட்டும் முன்பணமாக வாங்கிக்கொள் என்று எனது தாயார் கட்டளையிட்டிருக்கிறார். அதை மட்டும் கொடுங்கள் என்று சிவாஜி சொல்லியிருக்கிறார். அதன்பிறகு, வெள்ளிக்காசுகளை மட்டும் வாங்கிக் கொண்டு அலுவலகத்தை விட்டு சென்றாராம்.

இதையும் படிங்க: என் பட வசூலை உன்னால் முறியடிக்க முடியுமா? எம்.ஜி.ஆர் – சிவாஜி மோதலின் உச்சம்.. என்ன நடந்துச்சு தெரியுமா?

சிவாஜியிடம் தனது தம்பி படமெடுக்கப் போன விவரத்தையும் எம்.ஜி.ஆருடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்கிற தகவலையும் சொன்னது டி.ஆர்.ராமண்ணாவின் சகோதரியான டி.ஆர்.ராஜகுமாரிதான் என்பது பின்னர் அவர்களுக்குத் தெரியவந்தது. 1954-ல் வெளியான கூண்டுக்கிளி படம்தான் எம்.ஜி.ஆர் – சிவாஜி இணைந்து நடித்த ஒரே ஒரு படம். அந்தப் படம் வெளியான போது பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும், பின்னர் பலமுறை வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, வரலாற்றிலும் முக்கியமான இடத்தைப் பிடித்துவிட்டது.

google news
Continue Reading

More in Cinema History

To Top