Cinema History
எம்.ஜி.ஆர் என்னை செருப்பால் அடித்துவிட்டார்!.. கண்கலங்கிய கண்ணதாசன்!..
50,60 களில் எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட பல நடிகர்களுக்கும் காதல், தத்துவம், சோகம் என பல சூழ்நிலைகளும் பாடல்களை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன். குறிப்பாக காதல், சோகம், தாலாட்டு, விரக்தி உள்ளிட்ட சூழ்நிலை என்றாலே இசையமைப்பாளர்கள் கண்ணதாசனைத்தான் அழைப்பார்கள். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பல நூறு பாடல்களை கண்ணதாசன் எழுதியுள்ளார். சிவாஜிக்கு இவர் எழுதிய சோக மற்றும் தத்துவ பாடல்கள் சாகா வரம் பெற்றவை. இப்போதும் அந்த பாடல்கள் தமிழ்நாட்டில் எங்கோ ஒரிடத்தில் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது.
சினிமாவில் பாட்டு எழுதுவது மட்டுமின்றி அரசியலிலும் கண்ணதாசனுக்கு ஆர்வம் அதிகம். காமராஜரை அதாவது காங்கிரஸ் கட்சியை அவர் ஆதரித்தார். ஆனால், எம்.ஜி.ஆரோ திராவிட அரசியலை ஆதரித்தார். காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தித்தான் திமுக அதாவது அண்ணா முதலமைச்சராக அமர்ந்தார். எம்.ஜி.ஆரும் திமுகவில் இருந்தார். பல அரசியல் மேடைகளில் திமுகவுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.
இதனால், சில அரசியல் மேடைகளில் எம்.ஜி.ஆரை விமர்சித்தும் கண்ணதாசன் பேசினார். இதில், கோபமடைந்த எம்.ஜி.ஆர் கண்ணதாசனை தனது படங்களில் பாடல் எழுத வைப்பதை நிறுத்திவிட்டு கவிஞர் வாலி பக்கம் சென்றார். ஒருகட்டத்தில் எம்.ஜி.ஆருக்கு ஆஸ்தான பாடலாசிரியராகவே வாலி மாறிப்போனார். அதேநேரம், திமுகவிலிருந்து எம்.ஜி.ஆர் விலகி அதிமுக எனும் புதிய கட்சியை துவங்கி முதல்வர் பதவியிலும் அமர்ந்தார்.
அப்போது அரசவை கவிஞராக கண்ணதாசனை நியமித்தார். ஏனெனில், கண்ணதாசனுக்கும் அவருக்கும் அரசியல்ரீதியாக கருத்து வேறுபாடு இருந்தாலும் கண்ணதாசனின் தமிழ் மீதும், அவரின் திறமை மீதும் அன்பும், மரியாதையும் வைத்திருந்தார் எம்.ஜி.ஆர். அதனால்தான் வாலியை நியமிக்காமல் கண்ணதாசனை நியமித்தார்.
இதைக்கேள்விப்பட்டவுடன் தனது குடும்பத்தினரிடம் ‘எம்.ஜி.ஆர் என்னை செருப்பால் அடித்துவிட்டார். அவரை அவ்வளவு விமர்சித்து பேசியிருக்கிறேன். ஆனால், அரசவை கவிஞராக என்னை நியமித்துள்ளார். எழுதி வைத்துக்கொள்ளுங்கள். எம்.ஜி.ஆர் உயிரோடு இருக்கும்வரை அவர்தான் முதல்வராக இருப்பார்’ என உணர்ச்சிவசப்பட்டு கண்ணதாசன் பேசினாராம். அவர் சொன்னது போலவே எம்.ஜி.ஆர் மூன்று முறை முதல்வராக இருந்தார். முதல்வராகவே மறைந்தார்.
இந்த தகவலை கண்ணதாசனின் மகள் விசாலி கண்ணதாசனே ஒரு மேடையில் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.