என் பட வசூலை உன்னால் முறியடிக்க முடியுமா? எம்.ஜி.ஆர் - சிவாஜி மோதலின் உச்சம்.. என்ன நடந்துச்சு தெரியுமா?

by Akhilan |   ( Updated:2022-10-10 23:37:03  )
என் பட வசூலை உன்னால் முறியடிக்க முடியுமா? எம்.ஜி.ஆர் - சிவாஜி மோதலின் உச்சம்.. என்ன நடந்துச்சு தெரியுமா?
X

எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி தமிழ் சினிமாவில் இரு துருவங்களாக இருந்தாலும் அரசியலில் அவர்கள் வெற்றி அப்படியானதல்ல. நேரெதிரானது. எம்.ஜி.ஆர் ஒருபுறம் தி.மு.க-வில் இருந்து பின்னர் அ.தி.மு.கவை ஆரம்பித்து தனிப்பெரும்பான்மையுடன் முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார். ஆனால், சக்ஸஸ் சக்ஸஸ் என்கிற வசனத்துடன் திரைப் பயணத்தைத் தொடங்கிய சிவாஜியால் அரசியலில் வெற்றிபெறவே முடியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

எம்.ஜி.ஆர்

ஆரம்ப காலத்தில் திராவிட இயக்கத்தில் பயணித்தாலும், ஒரு கட்டத்தில் காமராசரின் தலைமையை ஏற்றுக்கொண்டு காங்கிரஸில் இணைந்தார் சிவாஜி. காமராஜரைத் தனது வழிகாட்டி என்று அப்போது சிவாஜி சிலாகித்தார். 1961-ம் ஆண்டிலிருந்து நேருவுடனும் காமராஜருடனும் தொடர்ந்து பயணித்தார். 1967 தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியடைந்தாலும் காங்கிரஸில் இருந்து அவர் விலகவில்லை.

1971-ல் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த நடிகை நர்கீஸ் மறைந்தார். இதனால், காலியான அந்தப் பதவியில் சிவாஜியை அமர்த்தி அழகுபார்த்தார் இந்திரா காந்தி. இதுதான், சிவாஜி தனது அரசியல் பயணத்தில் வகித்த ஒரே பதவி. அந்தத் தேர்தல் இன்னொரு வகையிலும் தமிழக வரலாற்றில் பதிவானது. திரைத்துறையில் இரு துருவங்களாக இருந்த எம்.ஜி.ஆரும் சிவாஜியும் நேரடியாகப் பொதுக்கூட்ட மேடைகளில் மோதிக்கொண்ட தேர்தல் அது.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் இந்த ஒரு விஷயத்துல கில்லாடி தான்…! இதுவரை யாருக்கும் தெரியாத ஒரு உண்மை..!

எம்.ஜி.ஆர் - சிவாஜி ரசிகர்கள் இடையே ரசிகச் சண்டை பிரபலம். ஆனால், இருவரும் அதற்கு முன்போ, அதற்குப் பிறகோ நேரடியாக ஒருவரை ஒருவர் விமர்சித்துக் கொண்டதில்லை. அந்த ஒரு தேர்தலைத் தவிர மற்ற நேரங்களில் அரசியல்ரீதியாகவும் தனிப்பட்டரீதியாகவும் விமர்சனங்களைக் கவனமாகத் தவிர்த்துவந்தனர்.

சரி 1971 தேர்தல் விஷயத்துக்கு வருவோம். அந்தத் தேர்தலில் தி.மு.க-வுக்காக எம்.ஜி.ஆரும் காங்கிரஸுக்காக சிவாஜியும் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு சுழன்றடித்தனர். அப்போது பொதுக்கூட்ட மேடை ஒன்றில், எம்.ஜி.ஆரைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார் சிவாஜி. 'என் அளவுக்கு உன்னால் நடிக்க முடியுமா?’ என்று கேட்ட சிவாஜிக்கு, 'என் படங்கள் அளவுக்கு உன்னால் வசூலைக் காட்ட முடியுமா?’ என்று தி.மு.க மேடைகளில் காட்டமாகப் பதிலடி கொடுத்தார் எம்.ஜி.ஆர்.

ஒரு கட்டத்தில் இந்த சண்டை மோசமடைவதை உணர்ந்து இரு தரப்பு தலைவர்களும் நேரடியாகத் தலையிட வேண்டி வந்தது. அதன்பிறகே, ஒருவரை ஒருவர் விமர்சிப்பதை நிறுத்திக் கொண்டனர். அந்த காலகட்டத்தில் தி.மு.க எம்.ஜி.ஆர் கட்சி என்றும், காங்கிரஸ் சிவாஜியின் கட்சி என்றுமே கிராமங்களில் அடையாளம் காணப்பட்டன. அந்த அளவுக்கு இருவருமே தங்கள் கட்சிகளின் முகமாக இருந்தனர்.

Next Story