ஒரு போலீஸ் அதிகாரியின் நேர்மையை காண்டு ஆடிப்போன எம்.ஜி.ஆர்!.. அவருக்கு என்ன செய்தார் தெரியுமா?...
உண்மை, நேர்மை, மனிதநேயம், உதவும் கரம் என்றாலே நம் அனைவருக்கும் முதலில் நியாபகம் வருபவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் தான். அவர் செய்த உதவிகள் என்றும் மக்கள் மனதில் அவரை நீங்கா இடம் பிடிக்க வைத்தது. எம்.ஜி.அர் தன்னுடன் நடிக்கும் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர். அதேபோல், எப்போதும் மற்றவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என நினைப்பவர்.
அப்படித்தான் ஒருநாள் எம்.ஜி.ஆர் நள்ளிரவில் செங்கல்பட்டில் படப்பிடிப்பு முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது சாலையில் காவல்துறை அதிகாரி ஒருவர் வீட்டுக்கு செல்வதற்கு பேருந்துக்காக காத்துக்கொண்டிருந்தார். அப்போது எம்.ஜி.ஆர் கார் அந்த வழியில் சென்றது. சாலையில் அந்த காவல்துறை அதிகாரி நிற்பதை பார்த்த எம்.ஜி.ஆர் காரை நிறுத்த சொன்னார். காரும் சிறிது தூரம் தள்ளி நின்றது. கார் கதவை திறந்து ‘எங்க போகணும்? ஏறுங்க நான் உங்களை விட்டுச் செல்கிறேன்’ என்று கூற, அந்த போலீஸ் அதிகாரி ‘ இல்லை நான் பேருந்திலேயே போகிறேன்’ என்று சொன்னார்.
அதற்கு எம்.ஜி.ஆர் ‘இந்த நேரத்தில் இங்கு பேருந்து கிடையாது’ என்று கட்டாயப்படுத்த அவரும் காரில் ஏறிக்கொள்கிறார். பின்பு ‘சாப்பிட்டிங்களா?’ என்று கேட்டு சாப்பிட பழங்களை எடுத்துகொடுத்துள்ளார். அதற்கு அந்த போலீஸ் அதிகாரி ‘ஒசியில் பயணம் செய்வதே எனக்கு பிடிக்கவில்லை. என்னை வற்புறுத்த வேண்டாம்’ என்கிறார். சிறிது நேர பயணத்திற்கு பிறகு, அவர் வீடு வருவதற்கு முன்பே காரை நிறுத்த சொல்கிறார்.
எம்.ஜி.ஆர் அதற்கு ‘ நீங்கள் கூறிய முகவரி இன்னும் வரவில்லையே’ என்று கூற, இல்லை பரவாயில்லை நான் சாதாரண போலீஸ். ‘நான் காரில் வந்து இறங்கினால் தவறாக நினைப்பார்கள்’ என்று கூறிவிட்டு சென்றாராம். அவரது நேர்மையும், பிறரிடம் எந்த உதவியும் பெறக்கூடாது என்கிற எண்ணமும் எம்.ஜி.ஆரை பிரமிக்க வைத்தது. மறுநாள் எம்.ஜி.ஆர் அந்த அதிகாரியை பற்றி விசாரிக்க அவர் உண்மையானவர், நேர்மையானவர், எந்த கெட்டப்பழக்கம் இல்லாதவர், அவருக்கு மூன்று பெண்கள். அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க போதிய வசதி இல்லை என்கிற விபரம் எம்.ஜி.ஆருக்கு தெரியவந்தது.
மறுநாள் காலையில் அந்த போலிஸ் அதிகாரியை தனது தோட்டத்திற்கு வரவழைத்தார். அப்போது ‘உங்கள் நேர்மை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. உங்களை பற்றி கேள்விப்பட்டேன். என்னை உங்கள் சகோதரனாக நினைத்து கொள்ளுங்கள்’ என்று கூறியதோடு மட்டுமில்லாமல், அவருடைய பெண்களுக்கு எம்.ஜி.ஆரே திருமணம் செய்து வைத்து மணமக்களை நேரில் சென்று வாழ்த்தினாராம்.
இதையும் படிங்க: தயாரிப்பாளரை ஊசிமுனை மேல் நிற்க வைத்த பாலா!.. ‘நான் கடவுள்’ படப்பிடிப்பில் தன் வில்லத்தனத்தை காட்டிய சம்பவம்..